(873)
பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.
பதவுரை
|
அரங்கமா நகருளானே!-; |
||
| பச்சை மா மலை போல் மேனி |
– |
பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும் |
| பவளம் வாய் |
– |
பவளம் போன்ற சிவந்த திருவாயையும் |
| செம் கமலம் கண் |
– |
செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுமுடைய |
| அச்சுதா |
– |
அச்சுதனே! |
| அமரர்ஏறே |
– |
நித்யஸுரிகளுக்குத் தலைவனே! |
| ஆயர்தம் கொழுந்தே |
– |
இடையர் குலத்தில் தோன்றிய இளக்குமாரனே |
| என்னும் |
– |
என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற |
| இச்சுவை |
– |
இந்த அநுபவ ருசியை |
| தவிர |
– |
விட்டுவிடும்படி |
| யான்போய் |
– |
யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று |
| இந்திர லோகம் ஆளும் |
– |
(அந்தப்) பரமபதத்தை ஆளுகின்ற |
| அச்சுவை |
– |
அந்த அநுபவருசியை |
| பெறினும் |
– |
அடைவதாயிருந்தாலும் |
| வேண்டேன் |
– |
(அதனை) விரும்பமாட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்படி திருநாமங் கற்ற ஆழ்வாரை நோக்கிப் பெரியபெருமாள் “ஆழ்வீர்! நம் பேர் சொன்னவர்களுக்கு நாம் கொடுப்பதொரு நாடு உண்டு; அதைத் தருகிறோம் கொள்ளும்.” என்ன; இவ்வுலகத்திலிருந்தபடியே திருநாமத்தைச் சொல்லி அதனால் பெறக்கூடிய இனிமைக்கு பரமபதத்திற் போய் அநுபவிக்கின்ற அந்த அனுபவித்தினால் தோன்றும் இனிமையும் ஈடாகாது; அது எனக்கு வேண்டா என்கிறார்.
பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்குப் பச்சைமாமலையை உவமை கூறினார். ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி, காணப்புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸார தாபங்களையெல்லாம் போக்குந்தன்மையும் எப்போதும் தியாநஞ்செய்தற்கு உரியதாய் இருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாய் இருத்தலும் முதலிய குணவிசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால் ‘பச்சை மா’ என்ற அடைமொழி மலைக்குக் கொடுக்கப்பட்டது.
‘அச்யுதன்’ என்னும் திருநாமம்-தான் என்றும் நழுவாதவன் என்றும் (தன் அடிபணிந்தோரை) நழுவவிடாதவன் என்றும் பொருள்படும்.
என்னுமிச்சுவை என்றதனால், எம்பெருமானது குணங்களை அநுபவிக்க வேண்டியதில்லை; அவனுடைய திருநாமங்களைக் கூறுதல் மாத்திரமே சுவை தருதற்குப் போதுமென்பது பெறப்படும்.
யான்-திருநாமஞ் சொல்லுகைக்குப் பாங்கான நாவையுடைய நான் என்றபடி. வேறொரு தேசத்தேறப்போய் அநுபவிக்குமளவும் விளம்பத்தைப் பொறுக்கமாட்டாத மிகுந்த அபிநிவேசமுடைய நான் என்றுமாம். போய் என்பதனால் போவதிலுள்ள அருமைப்பாட்டையும் இப்போது பயன் எளிதிற் கைப்பட்டிருத்தலையும் குறிப்பித்தனர். “ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போவதே.”
இந்திரன் முதலிய சொற்களெல்லாம் முக்கியவ்ருத்தியாகப் பரமாத்மாவையே குறிக்குமென்பதும் மற்றைத் தேவர்களைக் குறிப்பது இலக்கணையாலென்பதும் வேதாந்திகளின் கொள்கையாதலால் ‘இந்திரலோக’ மென்பது ஸ்வர்க்கலோகத்தைக் குறியாமல் எம்பெருமானுக்கே உரிய பரமபதத்தைக் குறித்தது.
“இந்திரலோகமாளுமச்சுவை இனிதன்று” என்னாமல் “அச்சுவைபெறினும் வேண்டேன்” என்றது-தாம் பரமபதாநுபத்தைப் பழித்தவராகாமல் திருநாமஸங்கீர்த்தனத்தில் தமக்குள்ள ஆதராதிசயத்தை விளக்குதற் பொருட்டாம். பரமபதாநுப மென்கிற பதார்த்தமே கிடையாதென்றும் சாஸ்த்ர மரியாதைக்காக அது உண்டென்று ஒருகால் இசைந்தாலும் அது சுவையற்றதாமென்றும் உபந்யஸிக்கிற ஆழ்வாரொருவர் உளரிறே; திருமங்கையாழ்வார் திருமடல்களை நோக்குக.
“அரங்கமாநகருளானே! அச்சுவை பெறினும் வேண்டேன்”என்றது பரமபதத்திலிருக்கிறதைவிட்டு இவ்வழகையும் சீலத்தையும் இங்குள்ளார்க்கு முற்றூட்டாக அநுபவிக்கக் கொடுக்கவந்து கிடக்கிற இது போதாதோ? தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கிற நீர்மையை அநுபவிக்கைக்கு அங்குள்ளாரும் இங்கே வராநிற்க என்னை அங்கே போகவிடப்பார்ப்பதென்? என்ற கருத்துத்தோன்றும்.
English Translation
“O Lord of Arangama-nagar, with the hue of a huge green mountain! Lord of coral lips, lotus-red eyes, Achyuta! Lord of Eternals, O Cowherd-Lord”, — denying the joy of praising you thus, if I were given to rule Indra’s kingdom, – even if you gave it, – I shall not want it.
