(874)

(874)

வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்

பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு

பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பதவுரை

அரங்கமாநகருளானே!

மனிசர் தாம்

மநுஷ்யர்கள்
வேதம் நூல்

வேதசாஸ்திரத்திற்படியே
நூறு பிராயம் புகுவரேலும்

நூறுபிராயம் வாழ்ந்திருப்பர்களேயானாலும்
பாதியும்

அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும்
உறங்கி போகும்

உறக்கத்தாலே கழியும்;
நின்ற இப்பதினையாண்டு

மிகுந்த ஐம்பது வருஷம்
பேதை

சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும்
பாலகன்

‘சிறுபயல்’ என்னும்படியான அவஸ்தையாயும்
அது ஆகும்

நெஞ்சால் நினைக்கவும் தகாதயௌவநாவஸ்தையாயும்
பிணி

வியாதிமயமாயும்
பசி

ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும்
மூப்பு

கிழத்தனமாயும்
துன்பம்

மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்;
ஆதலால்

இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால்
பிறவி

ஜந்மத்தை
வேண்டேன்

விரும்புகிறேனில்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகத்தில் மானிடப்பிறவி யென்பது ஜந்மாந்தர ஸஹஸ்ரநற்றவங்களாலே பெறக்கூடியது; அதனை வருந்திப்பெற்றாலும், கர்ப்பத்திலேயும், பிறந்தவுடனும் நாலுநாள் கழித்தும் சில மாதங்கள் கழித்தும் சில வருடங்கள் கழித்தும்  இறக்கக்கூடியவர்கள் பெரும்பான்மையரேயன்றி, வேதசாஸ்த்ரத்தில்  “தாயுர்வை புரு‘” (மனிதன் நூறு பிராயம் வாழ்பவன்) என்று கூறியுள்ளபடி தீர்க்காயுஸ்ஸாக வாழக்கூடியவர் மிகச் சிறுபான்மையரே; விதிவசத்தால் சிலர்நூறு பிராயம் புக்கு வாழப்பெற்றாலும் அவரது வாழ்நாள் கழியும் வகையை ஆராய்ந்தால் ஒரு நொடிப்பொழுதாவது நற்போதாகக் கழிய வழியில்லை. ஸூர்யன் அஸ்தமித்து மீண்டும் உதிக்குமளவும் உறங்குவது ஒரு நியமமாக வந்துவிட்டபடியால் அஹோராத்ரமாகிய ஒரு திநத்துக்கு உள்ள அறுபது நாழிகையில் முப்பது நாழிகை உறக்கத்தில் கழிகிற கணக்கில் பாதி ஆயுஸ்ஸாகிய ஐம்பது வருஷம் உறக்கத்தால் கழிந்ததாகிறது; மற்ற பாதிவாழ்நாளில்-தன்னுடைய ஹிதாஹிதம் தாயின் அதீனமாயிருக்கும் சிசுத்வாவஸ்தையாய்ச் சிலகாலமும், எத்தனை தீம்புகள் செய்தாலும் சீறவொண்ணாதபடி செல்வப்பிள்ளை பருவமாய்ச் சிலகாலமும், பிறகு யௌவநம் வந்து புகுந்து விஷயாந்தரங்களிலே மண்டித்திரியும் பருவமாய்ச் சிலகாலமும், இங்ஙனே இந்திரியச் சிறையிலே அகப்பட்டுத் தடுமாறாநிற்க இடிவிழுந்தாற்போலே வந்து புகுகிற கிழத்தனமாய்ச் சிலகாலமும் “அத்யுத்கடை; புண்யபாபைரிஹைவ பலமச்நுதே” (வரம்புகடந்த புண்யபாபங்களின் பலனை இப்பிறவியிலேயே அநுபவிக்கிறான்)என்றபடி – யௌவநத்திற் செய்த எல்லை கடந்த குறும்புகட்குப் பலனாக எய்தும் பிணிகளால் வருந்துவதாய்ச் சிலகாலமும், பசியினால் ஒன்றும் தோன்றாதபடி இடர்படுவதாய்ச் சிலகாலமும், ஒருபக்கத்தில் பிள்ளை செத்தான் என்று கேட்டு அழுவதும், மற்றொரு பக்கத்தில் மனைவி செத்தாள் என்று கேட்டு அழுவதுமாய் இப்படி  ஸம்ஸாரத் துன்பங்களில் ஆழ்ந்து செல்லும் நாளாய்ச் சிலகாலமும் கழிவதால் இத்துன்பங்களை அநுபவிப்பதற்கு இன்னும் சிறிது ஆயுஸ்    கடன் வாங்கிக் கொள்ளவேண்டியதாமேயன்றி உள்ள வாழ்நாளில் ஆத்மாவைப்பற்றிச் சிறிதாகிலுஞ்சிந்திக்கப்  பொழுது கிடைப்பரிது; ஆதலால் இப்பிறவி எனக்கு வேண்டா என்கிறார்.

கீழ்ப்பாட்டில் ‘பரமபதம் எனக்கு வேண்டா’ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்  உமக்குப் பரமபதம்; வேண்டாவாகில் கோயிலோடே  தோள்தீண்டியான ஸம்ஸாரத் திலேயிருந்து திருநாமத்தை அநுபவியும் “ என்றருளிச்செய்ய; “அது தன்னையும் நிரூபித்தவாறே திருநாமம் சொல்லுகைக்கு அவகாசம் அரிதாம்படி துக்கப்பரம்பரையேயா  யிருந்தது ; ஆகையாலே எனக்கு  ஸம்ஸாரத்திலிருப்பும் வேண்டா “ என்று ஆழ்வார் கூற ‘திருநாமம் சொல்லுகைக்கு அவகாசம் இல்லாதபடி  ஸம்ஸாரத்திற்கு நீர் சொல்லுகிற குறை என்?’ என்று எம்பெருமான் கேட்டருள,  ஸம்ஸாரத்தினுடைய தோஷங்களை இப்பாட்டால் உபபாதிக்கிறாரென்க.

“இத்தால், பழகிப்போருகிற ஸம்ஸார யாத்ரையிலும் ஜுகுப்ஸை பிறக்கும்படி திருநாமம் இனிதென்று அம்முகத்தாலே திருநாமத்தினுடைய போக்யதாப்ரகர்ஷத்தைச் சொல்லுகிறது” என்பர் பெரியவாச்சான் பிள்ளை.

வேதநூல்-வேதமென்கிற சாஸ்த்ரம்; அன்றியே, வேதமும் மற்றுமுள்ள சாஸ்த்ரங்களுமென்றுமாம். உறங்கி – உறங்க என்றவாறு, எச்சத்திரிபு. பதினையாண்டு – பத்தாலே பெருக்கப்பட்ட ஐயாண்டு – ஐம்பது வருஷமென்றபடி.  “நின்றதிற் பதினையாண்டு” என்றும் சிலர் ஓதுவர்.

பேதை பாலகன் என்ற அடைவின்படியே யௌவநபருவத்தையும் வாய்விட்டுச் சொல்லாதொழிந்தது – அப்பருவத்தின் மிக்க கொடுமையை விளக்குதற்காம். துஷ்டன் பெயரை நாக்கொண்டு கூறக் கூசுமவர்‘அந்தப்பயல்’ என்றே சொல்லுமாபோலே. அப்பருவத்தின் கொடுமையை இவ்வாழ்வார்  நன்கு கைகண்டவடராதலால் அதனை நினைத்தவாறே அஞ்சி நடுங்கி அதாகும் என்கிறார். ‘பேதைதனமே நன்று’ என்னும்படியன்றோ இப்பருவத்தின் அறிவு கேடு இருப்பது.

இப்படி “பிறவி வேண்டேன்’ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! ‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்று பரமபதமும் வேண்டா என்கிறீர்;  ‘பிறவி வேண்டேன்’ என்று ஸம்ஸாரமும் வேண்டா என்கிறீர்; நம் கையிருள்ளது இவ்விரண்டு விபூதியேயன்றோ? இரண்டுக்கும் குறை கூறா நின்றீர்; ‘நின்றால் ஆணை, இருந்தால் ஆணை, கிடந்தால் ஆணை’ என்பாரைப் போலே நீர்படுத்துகிறபாடு என்!” என்று முட்டிக்கொள்ள அரங்கமாநகரளானே!’ என்கிறார்; கீழ்க்கூறிய இரண்டு விபூதிக்கும் மேற்பட்டு மூன்றாவது விபூதி யென்னும்படியான கோயிலிலே எனக்கு ஓர் இருப்பு அமைக்கலாகாதோ? என்பது உட்கருத்து.

கோயிலில் குடிவாழ்ந்தால் பேதைப் பருவத்திலே அந்நப்ராகத்துக் கென்றாகிலும் ஸந்நிதிக்குள் கொண்டு புகுவார்கள்; பாலயாவஸ்தையில் விளையாடும்போதும் பெருமாள் புறப்பாடு அருளிப்பாடு முதலியவற்றை அநுகரிக்கும்படியாயிருக்கும்  யௌவநம் வந்தால், தான் விரும்பின விஷயாந்தரங்களைக் காணவேண்டியாகிலும் ஸந்நிதிக்குள்ளே புகலாயிருக்கும்;  மூப்படைந்து உள்ளே புகமாட்டாத நாளைக்கு நம்பெருமாள் இவன் வாசலிலே வந்து நிற்கலாயிருக்கும்;  ஆக இப்படிகளாலே கனவிலும் காண்பது பெருமாள் வடிவழகேயாயிருக்குமாகையாலே கோயில் வாஸம் அடிக்கழஞ்சு பெற்றுச்செல்லா நிற்குமென்றருளிச்செய்வர்.

English Translation

O lord of Arangama-nagar! Even if one where to attain the lifespan of one hundred years granted by the Vedas, half of that spent in sleeping. The remaining fifty years are frittered away in childhood, disease, hunger and old age, and so I do not desire another birth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top