(639)

(639)

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை

ஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே

மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்

மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே

பதவுரை

மால் ஆய் பிறந்த நம்பியை

பெண்கள் பக்கலுண்டான) வ்யாமோஹமே ஒரு வடிவாய்க்கொண்டு பிறந்த தென்னலாம்படியான பெருமானாய்
மாலே செய்யும் மணாளனை

வ்யாமோஹத்தையே செய்கிற மணவாளப்பிள்ளையாய்
ஏலாபொய்கள் உரைப்பானை

பொருந்தாத பொய்களைச் சொல்லுமவனான கண்ணபிரானை (இங்கே போதக் கண்டீரே?
மேலால்

மேலே
பரந்த

பரவின
வெயில்

வெய்யிலே
காப்பான்

(திருமேனியில் படாமல்) தடுப்பதற்காக
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின்கீழ் வருவானை

கருடனுடைய சிறகாகிற விதானத்தின்கீழ் எழுந்தருளாநின்ற அப்பெர்மானை (விருந்தாவனத்தே கண்டோம்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பெண்கள் திறந்திலேயுள்ள வ்யாமோஹமே ஒரு வடிவுகொண்டது என்னலாம்படி. வ்யாமோஹபிண்டமாயிருப்பவனும், ஸகலகுணங்களாலும் பரிபூர்ணனும், எல்லார்க்கும் ஆசைப்படத் தகுந்தவனும், அஸம்பத்தங்களான பொய்களைக் கூசாது கூறுமவனுமான கண்ணபிரான் இங்கே எழுந்தருளக் கண்ட துண்டோ? என்று கேட்பார் பாசுரம் – முன்னடிகள். மேலே வெய்யில்படாதபடி பெரிய திருவடி தன் சிறகைவிரித்து நிழல்செய்ய, அதாகிற மேற்கட்டியின் கீழ் விருந்தாவனத்திலே எழுந்தருளக் கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் – பின்னடிகள்.

ஏலாப் பொய்களுரைப்பானை – “ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமாய் வந்தால் ‘இதெல்லாம் எங்கு நின்றும் பெற்றாய்?‘ என்று கேட்டால் மற்றொன்றுண்டோ? நான் புறம்பு அறிவேனோ? என்னும்.“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் அழகை நோக்குமின். “***“ (கஸ் த்வம் பால! நுஜ கமிஹ தே மந்மந்திராசங்கயா, யுக்தம் தத் நவநீதபாண்டவிவரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா? மாத கஞ்சந வத்ஸகம் ம்ருகயிதும், மகா விஷாதம் க்ஷணாதியேவம் வநவல்லவீநிகித க்ருஷணஸ் ஸ புஷ்ணாதுனந) என்கிற ச்லோகத்தை இங்கே பரக்க உபந்யஸித்தருள்வர் அழகிய மணவாளச்சீயர்.

இதன் கருத்து – ஒருநாள் கண்ணபிரான் பிறர்மனையில் புகுந்து வெண்ணெய்த்தாழியில் கையிட்டவளவில் அம்மனையுடையாள் சடக்கெனவந்து பிடித்துக்கொண்டு “பயலே! நீ ஆர்? என்ன, ‘நான் பலராமன் தம்பி‘ என்ன, ‘இங்கு எதுக்கு வந்தாய்‘? என்ன, “ என் அகம் என்று மயங்கிவந்துவிட்டேன்“ என்ன? “அது சரிதான், வெண்ணெய்தாழியில் கையிட்டாயே அஃது ஏன்? என்ன ‘அம்மா! ஒரு கன்றுக்குட்டி கைகழிந்துபோயிற்கு, அதைத் தேடுவதற்காக வெண்ணெய்க்குடத்திற் கையிட்டுத் துழாவிப் பார்த்தேன்“ என்ன, இதுகேட்ட அவ்விடைச்சி ‘தென்னைமரத்திலே புல் பிடுங்க ஏறினேன்“ என்பாரைப்போல இவன் உத்தரமுரைக்கும் ஸாஹஸமென்னென்று சினந்து தாம்பால்கட்டி அடிக்கப்புக, கண்ணபிரான் அழத்தொடங்க, அதுகண்ட அவ்விடைச்சி, “இச்செய்தி யசோதையின் காதில் எட்டுமாகில் “என்றுமென்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார் அங்ஙனமாவர்களே“ என்று சபிப்பளே“ என்றஞ்சி, ‘கண்ணா! அழேல் அழேல்‘ என்று ஸமாதானப்படுத்திப் போகவிட்டாளென்க. இப்படிப்பட்ட ஏலாப் பொயகளுரைத்தல் பல்லாயிரம்.

மேலால் என்றது -மேலே என்றபடி. கண்ணபிரான் வீதியிலே எழுந்தருளும்போது மேலே வெய்யில்படாமைக்காகப் பெரியதிருவடி தன் சிறகைக் குடையாக விரித்து நிழ்ல்செய்வேன், அது கண்ணபிரானுக்கு மேற்கட்டி பிடித்தாற்போலிக்கும், அதன்கீழே அழகாக எழுந்தருள்வனென்க. கருடனுடைய தாய்க்கு விந்தா என்று பெயர்.

English Translation

“The Lord is a lover, nay; love itself born as a bridegroom. Did you see the inept liar go this way?” “Under the wings of Garuda, like a canopy shielding him from the Sun, we saw him going in Brindavana.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top