(637)

(637)

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்

இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே

இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி

விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே

பதவுரை

ஓர் கார் ஏறு

(கண்ணபிரா னென்கிற) கறுத்த காளையொன்று
பட்டி மேய்ந்து

காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்துகொண்டும்
பலதேவற்கு

பலராமனுக்கு
ஓர் கீழ் கன்று ஆய்

ஒப்பற்ற தம்பியாய்
இட்டீறிட்டு

ஸந்தோஷத்துக்குப்போக்குவீடாகப் பலவகையான கோலாஹலங்களைப்பண்ணி
விளையாடி

விளையாடிக் கொண்டு
இங்கே போத

இப்படிவர
கண்டீரே

பார்த்தீர்களோ?
இட்டம் ஆன

(தனக்கு) இஷ்டமான
பசுக்களை

பசுக்களை
இனிது

த்ருப்தியாக
மறித்து

மடக்கிமேயத்து
நீர் ஊட்டி

தண்ணீர் குடிப்பித்து
விட்டுக் கொண்டு

(இப்படியாக) அவற்றை மேயவிட்டுக்கொண்டு
விளையாட

(அப்பெருமான்) விளையாடநிற்க
விருந்தாவனத்தே

ப்ருந்தாவனத்திலே
கண்டோம

ஸேவித்தோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிறைக்கூடத்தில் கட்டுண்டு கிடப்பாரைப்போலே பரமபதத்தில் திருவனந்தாழ்வான் மடியிலும் ஸேனை முதலியார் பிரமபின் கீழிலும் பெரியதிருவடி சிறகின் கீழிலும் ஒடுங்கி வர்த்தித்தபெருமான் இந்நிலத்தே போந்து யதேச்சமாகத் திரிந்து விளையாடா நிற்கக் கண்டதுண்டோ? என்று கேட்பவர்களின் பாசுரம் முன்னடிகள். தனக்கு மிகவும் ப்ரீதி பாத்ரமான பசுக்களைப் புல்லும் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டுபோய் மேயத்துப் பரமானந்தத்துடனே விளையாடா நிற்குங்கால் ஸ்ரீப்ருந்தாவனத்திலே காணப்பெற்றோம் என்று விடையளிப்பார் பாசுரம் பின்னடிகள்.

பட்டிமேய்கையாவது – தடை செய்வாரில்லாதபடி கண்டவிடஙகளிலும் சுற்றுச்சுழன்று மேய்கை. இப்படி ஸ்வச்சந்தவிஹாரம் செய்வதற்காகவேயிறே எம்பெருமான் திருநாட்டைவிட்டுத் திருவாய்ப்பாடியில் பிறந்தது. திருநாட்டிலே இவனுக்குப் பட்டிமேய வொண்ணாதே. * வானின் வரசாயிருக்க வேணுமே. அந்தச் சிறையிருப்புக் குறைதீர இங்கே வந்து பட்டிமேய்கிறபடி.

“ஆனை கருப்பந்தோட்டத்தே புக்கால் திரியுமாப்போலேயாய்த்து இவனும் ஊரை முலையடியே திரியும்படி, பரமபதத்தில் நூல்பிடித்துப் பரிமாறு மதுபோலன்றிக்கே “வெண்ணெய் களவுபோய்த்து, பெண்கள் களவு போய்த்து என்னும்படியாக வாய்த்து மாயாதைகளை யழித்துக்கொண்டு திரியும்படி“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கே அநுஸந்திக்கத்தக்கன.

இவ்விடத்தில் காரேறு என்கையாலே, பரமபதத்திலே உடம்பு வெளுத்திருக்கும் போலும். இஷ்டப்படி பரிமாறலாம்படியான இடத்திலிறே உடம்பு தன்னிறம் பெற்றிருக்கும். அது உள்ளது இங்கே யாய்த்து.

பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய் – பட்டிமேயும் கண்ணபிரான் பலராமனுக்கோர் கீழ்க்கன்றாப் இருப்பனோவென்னில், பெண்கள் திறத்திலே நிச்சலும் தீமைகள் செய்து திரியுமவன் பலராமனளவிலே பவ்யனாயிருப்பனாம், அபிமது விஷயங்களிலே தன்னைச் சேரவிடுகைக்கு அவன் துணைவனாகையாலே அவன் நினைவின்படியே அவனளவில் அடங்கி வர்த்திருப்பனென்க.

இட்டீறிட்டு என்பதற்கு த்ருப்திகரமான பொருள் விளங்கவில்லை பெயரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் உள்ளதாவது -“இட்டீறிட்டு -இச்சேதனன் னுக்தனானால் பகவதனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டு “***“ (ஏதத் ஸாம காயந்நாஸதே) என்று ஸாமகானம் பண்ணுமாபோலே அவன்றான் இங்கேவந்து அவதரித்து இப்பரிமாற்றத்தைப் பெறுகையாலே வந்த ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டுப் பண்ணும் வியாபாரமிருக்கிறபடி.“ என்றிவ்வளவே உள்ளது. இவ்விடத்திற்கு அரும்பதவுரையிட்டாரொருவர் – “இட்டீறு – செருக்கால் வந்த வியாபாரம்“ என்றெழுதிவைத்து. “இட்டீறிடுகை – ஸபதமிடுகை“ என்றும் எழுதியுள்ளார் இனி, தெளிவுடையார் பக்கல் தினவடங்கக் கேட்டறிக.

விருந்தாவனம் என்பது – கண்ணன் அவதரித்த வடமதுரைக்குச் சிறிது தூரத்தில் யமுநா நதிக்கரையிலுள்ள இடம். கண்ணன் வளர்ந்த இடமான கோகுலமெனப்படுகிற திருவாய்ப்பாடியிலுள்ள நந்தகோபர் முதலான ஆயர்கள் அங்குப்பூதனை வந்து இறந்தது, சகடுமாறி வீழ்ந்தது, இரட்டை மருதமரம் முறிந்தது முதலியவற்றை உற்பாதங்களெனக்கொண்டு அஞ்சி மஹாவனமெனப் படுகிற அவ்விடத்தைவிட்டு, கன்றுகாலி முதலிய எல்லாப்பொருள்களோடும் ப்ருந்தாவனத்திற்சென்று குடியேறினார். நெரிஞ்சிக் காடாய்க்கிடந்த அந்த ப்ருந்தாவனம் க்ருஷபகவான குளிர்ந்த திருவுள்ளத்தோடு அநுக்ரஹிதத்தனால், பசுக்கள் முதலானவை வ்ருத்தியடைதற்கு ஏற்ப மிகச்செழிப்புற்றது. பின்பு அங்கு நெடுநாள் கண்ணன் கன்றுகளையும் பசுக்களையும் மேய்த்துக் கொண்டு பல திருவிளையாடல்கள் செய்துகொண்டு வளர்ந்தருளினன். ப்ருந்தாவனம் என்ற வடசொல் விருந்தாவனமென விகாரப்பட்டது. நெரிஞசிக்காடென்பது பொருள்.

English Translation

“A black bull calf strayed away like an underling of Baladeva. Did you see him go this way?” “A cowherd lad with beautiful cows was playing and showing them how to drink. We saw such a one in Brindavana”.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top