(597)
கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவ னெங்குற்றான்
ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது அணிதுழாய்த்
தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்கவல் லேனந்தோ.
பதவுரை
| கார் கோடல் பூங்காள்! |
– |
கறுத்த காந்தள் பூக்களே! |
| உம்மை |
– |
உங்களை |
| போர் கோலம் செய்து |
– |
யுத்தத்திற்கு உசிதமாக அலங்கரித்து |
| எம்மேல் |
– |
என்மேலே |
| போர விடுத்தவன் |
– |
அனுப்பினவானான |
| கார் கடல் வண்ணன் |
– |
கறுத்த கடல் போன்ற வடிவை யுடையனான கண்ணபிரான் |
| எங்குற்றான் |
– |
எங்கேயிருக்கிறான்? |
| நாம் |
– |
(உங்களால் மிகவும் நலிவுபட்ட) நான் |
| இனி |
– |
இனிமேல் |
| ஆர்க்கு |
– |
யாரிடத்தில்போய் |
| பூசல் இடுவதோ |
– |
முறையிட்டுக்கொள்வதோ (அறியேன்) |
| அணி |
– |
அழகிய |
| துழாய் தார்க்கு |
– |
திருத்துழாய்மாலையை ஆசைப்பட்டு |
| ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ! |
– |
ஓடுகின்ற நெஞ்சையுடையவளாயிராநின்றேனே! ஐயோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கோடல்பூக்கள் என்று ஒரு புஷ்பஜாதி உண்டு, அது காந்தள்பூ என்றுஞ் சொல்லப்படும். அப்புஷ்வங்கள் கார்காலத்திலே மிகுதியாக மலரும். அவை விரஹகாலத்திலே காமுகர்கட்கு மிகவும் உத்தீபகங்களாயிருக்கும்; பலகைப்பட்ட நிறங்களையுடைய அப்புஷ்பஜாதியில் கரியநிறமுள்ள பூக்களும் உண்டு. அவை எம்பெருமானுடைய திருநிறத்துக்கு ஸ்மாரகங்களாய்க்கொண்டு ஆண்டாளை விஸேஷமாக வருத்துகின்றமையால் ‘இம்மலர்களை எம்பெருமான் படைத்தது நம்மைக் கொலைசெய்வதற்காகவே போலும்‘ என்ற அறுதியிட்டு அம்மலர்களையே நோக்கி கூறுகின்றாள்; “ஓ கோடல்பூக்களே! என்னைக் கொலை செய்வதற்கென்று உங்களை அழகாகக் கோடித்து அனுப்பின மஹாநுபாவன் எங்கிருக்கிறான்?“ என வினவுகின்றாள் முன்னடிகளில்.
உண்மையில் அப்புஷ்பங்கள் அசேதநங்களாகையாலே மறுமொழி ஒன்றும் சொல்லாதிருக்கவே, ‘அந்தோ‘ நம்மை இந்தப்பூக்களும் லக்ஷியம்பண்ணுகின்றன வில்லையே; அந்த எம்பெருமானோ வரமாட்டேனென்கிறான், இவையோ நம்மோடு பேசுகின்றனவில்லை; உசாத்துணை ஆகக்கூடியவர்களும் யாருமில்லை, இனி நாம் ஆர்வீட்டுவாசலிலேபோய் நம் துயரை முறையிட்டு ஆறுவது!‘ என்கிறாள் மூன்றாமடியில்.
எம்பெருமானுடைய விபூதியடங்கலும் நம்மைநலிவதற்கு அவனுக்குத் துணையாயிருப்பதுபோல நம்மைச் சேர்ந்த வஸ்துக்களாவது நமக்குத் துணைநிற்குமோவென்று பார்த்தாலோ அதுவுமில்லை; நமக்கு விதேயமாயிருக்கக் கடவதான நெஞ்சும் நம்மை உதறித்தள்ளிவிட்டு அவனுடைய திருத்துழாய் மாலையைநாடி ஓடாநின்றது, இப்படி எல்லாம் பகையாகப் பெற்றோயே! இஃது என்ன கஷ்டகாலம்! என்கிறாள் ஈற்றடியில். இதனால், எம்பெருமானுடைய விஸ்லேஷம் தனக்கு அஸஹ்யமாயிருக்கிறப்படியும், அவ்வளவிலும் தனது திருவுள்ளம் பகவத்விஷயத்திலேயே ஈடுபட்டுச் செல்லுகிறபடியையும் அருளிச் செய்தாளாய்ந்தது.
“கார்க்கோடல்பூக்காள்“ என்பதற்கு – கார்காலத்திலே வந்து தோன்றுகின்ற கோடல்பூக்களே! என்றும் கறுத்த கோடல்பூக்களே! என்றும், பெருத்த கோடல்பூக்களே! என்றும் மூன்றுவகையாகப் பொருள் கூறுவர். உம்மைப் போர்க்கோலஞ்செய்து என்மேல் போரவிடுத்த கார்க்கடல்வண்ணன் எங்குற்றான்? என்று அந்வயித்துக்கொள்க. ஒவ்வொரு பதார்த்தங்களுக்கும் ரூபநாமங்களை ஏற்படுத்தினவன் எம்பெருமான் என்ற நூற்கொள்கைப்படி இம்மலர்கட்கு நிறங்கொடுத்தவன் எம்பெருமானாதலாலும், அந்த நிறம் இப்போது இவளுடைய ஹிம்ஸைக்கு உறுப்பாயிருப்பதால் யுத்தஞ்செய்வதற்கு ஏற்ற கோலஞ்செய்துவிட்டது போன்றிருப்பதாலும் “உம்மைப் போர்க்கோலஞ்செய்து போரவிடுத்தவன்“ என்றாள். இந்திரஜித்தைக் கொல்வதற்கு இராமபிரான் இளையபெருமானை அலங்கரித்து அனுப்பினதுபோலத் தன்மை முடிப்பதற்காக இவற்றை நிறமூட்டியனுப்பினான் என்றிருக்கிறான் போலும். “போதா“ என்பது போர என மருவிற்று போரவிடுத்தல் – அனுப்புதல்.
உங்களை அனுப்பினவன் எங்கே இருக்கிறான்? என்று கேட்பதற்குக் கருத்து யாதெனில்; ஸுக்ரீவன் இராமபிரானைப் பின்னேஒளித்து நிறுத்திவைத்துவிட்டு வாலியைச்சண்டைக்கு அழைக்கவந்ததுபோல நீங்களும் எம்பெருமானை ரஹஸ்யமாகத் துணைகொண்டு என்னைச் சண்டைக்கழைக்க வந்திருக்கவேணுமேயன்றி, நீங்கள் மாத்திரம் தனிப்பட்ட வந்திருக்கமாட்டீர்கள்; ஆதலால் அவன் எங்கே பதுங்கிநிற்கிறான்? சொல்லுங்கள் என்கிறாள் என்க.
பூசலிடுவது – பேரொலிசெய்து முறையிடுவது
English Translation
O Dark Kodai flowers! Where is the ocean-hued Lord, who aimed you warring arrows on me? Who will hear my plaint, alas? Even my heart unbridled has teamed with him, for the favour of his Tulasi crown.
