(96)
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார்
மாயன் மணிவண் ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே.
பதவுரை
| ஆயர் குலத்தினில் வந்து |
– |
இடையர் குலத்திலே வந்து |
| தோன்றிய |
– |
அவதரித்த |
| அஞ்சனம் வண்ணன் |
– |
மை போன்ற கருநிறமுடையனான கண்ணன் |
| தன்னை |
– |
தன்னை (க்கண்டு) |
| தாயர் |
– |
தாய்மார்கள் |
| மகிழ |
– |
மனமுகக்கவும் |
| ஒன்னார் |
– |
சத்ருக்கன் |
| தளர |
– |
வருத்தமடையவும் |
| தளர்நடை நடந்தனை |
– |
தளர்நடை நடந்ததை |
| வேயர் |
– |
வேயர்குடியிலிருப்பவரெல்லாராலும் |
| புகழ் |
– |
புகழப்பெற்ற |
| விட்டுசித்தன் |
– |
பெரியாழ்வார் |
| சீரால் |
– |
சிறப்பாக |
| விரித்தன |
– |
விவரித்துச்சொன்ன பாசுரங்களை |
| உரைக்கவல்லார் |
– |
சொல்ல வல்லவர்கள் |
| மாயன் |
– |
ஆச்சர்யமான குணங்களயுடையவனும் |
| மணி |
– |
நீலமணிபோன்ற |
| வண்ணன் |
– |
நிறமுடையனுமான எம்பெருமானுடைய |
| தான் |
– |
திருவடிகளை |
| பணியும் |
– |
வணங்கவல்ல |
| மக்களை |
– |
பிள்ளைகளை |
| பெறுவார்கள் |
– |
அடைவார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘தாயர்’ எனப் பன்மையாகக் கூறியது-பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் எனத் தாய்மார் ஐவராதலாலும், சிறுதாய் முதலியோரும் தாய்மாரே யாவராதலாலுமாம். தொட்டிற் பருவத்திலேயே பூதனை சகடாஸூரன் முதலியோர்களை முடித்ததனால், கண்ணபிரான் மெல்ல அடியிட்டு நடக்கத்தொடங்கியபோதே ‘இனி, இவனால் நமக்கு என்ன தீங்கு நேரிடுமோ!’ என்று கம்ஸாதிகள் நடுங்கி ஒடுங்கினராதலால் ‘ஒன்னார் தளர’ என்றாரென்க. ஒன்னார்-ஒன்றார்; (தம்மோடு மனம்) பொருந்தாதவர்; எனவே, பகைவராவர். பெரியாழ்வார் பிறந்தகுடி—வேயர்குடி எனப்படும்.
English Translation
These songs by famed Vishnuchitta of Veyar-clan sing of the dark hued Lord who took birth in the cowherd clan when he toddled, giving pleasure to his mothers and fear to his foes. Those who master it will beget children who are devoted to the feet the wonder-Lord of gem-hue.
