(67)

(67)

வானவர் தாம்மகிழ வன்சக டமுருள வஞ்சமு லைப்பேயின் நஞ்சமது உண்டவனே

கானக வல்விளவின் காயுதி ரக்கருதிக் கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே

தேனுக னும்முரனும் திண்திறல் வெந்நரகன் என்பவர் தாம்மடியச் செருவத ரச்செல்லும்

ஆனை எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

பதவுரை

வானவர் தாம்

தேவர்கள்
மகிழ

மகிழும்படியாகவும்
வல் சகடம்

வலியுள்ள சகடாஸுரன்
உருள

உருண்டு உருமாய்ந்து போம்படியாகவும்
வஞ்சம்

வஞ்சனையை உடையளான
பேயின்

பூதனையினுடைய
முலை

முலைமேல் தடவிக்கிடந்த
நஞ்சு

விஷத்தை
அமுது உண்டவனே

அம்ருதத்தை அமுது செய்யுமாபோலே அமுதுசெய் தருளினவனே!
கானகம்

காட்டிலுள்ளதான
வல்

வலிமைபொருந்திய
விளவின்

விளாமரத்தினுடைய
காய்

காய்களானவை
உதிர

உதிரும்படி
கருதி

திருவுள்ளத்திற்கொண்டு
கன்று அது கொண்டு

கன்றான அந்த வத்ஸாஸுரனைக் கையில் கொண்டு
எறியும்

(விளவின் மேல்) எறிந்தவனாய்
கருநிறம்

கறுத்தநிறத்தை யுடையனாய்
என் கன்றே

என்னுடைய கன்றானவனே!
தேனுகனும்

தேனுகாஸுரனும்
முரனும்

முராஸுரனும்
திண்திறல்

திண்ணிய வலிவை யுடையனாய்
வெம்

கொடுமையுடையனான
நிரகன்

நிரகாஸுரனும்
என்பவர்தாம்

என்றிப்படி சொல்லப்படுகிற தீப்பப் பூண்டுகளடங்கலும்
மடிய

மாளும்படியாக
செரு

யுத்தத்திலே
அதிர

மிடுக்கை உடையயனாய்க் கொண்டு
செல்லும்

எழுந்தருளுமவனான
ஆனை

ஆனைபோன்ற கண்ணனே!

எனக்கு . . .  ஆடுக-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – “நஞ்சமதுண்டவனே “என்றும் பாடமுண்டு; முலையில் தடவிக்கிடந்த அந்தக் கொடிய விஷத்தை உண்டவனே! என்று பொருளாம்.  (கானகமித்யாதி). )  விளாமரமாய் நின்ற ஒரஸு ( கபித்தாஸுர)ன் மீது கன்றாயிருந்த  ஒரஸுர ((வத்ஸாஸுர)னை விட்டெறிந்து இரண்டையும் சேர முடித்தருளினான் என்க.  கன்றே!  இளமையைச் சொன்னபடி; உவப்பினால் உயர்திணை அஃறிணையாயிற்று;  தினைவழுவமைதி.  – தேனுகன் – கழுதையான வடிவைக் கொண்டு காட்டுக்குள்ளே கண்ணனை நலிவதாக வந்தவன்.  கண்ணபிரான் பலராமனோடும் ஆயர் சிறுவர்களோடும் மாடுமேய்த்துக் கொண்டு பழங்கள் அழகாக மிகுதியாய்ப் பழுத்து வாசனை வீசிக் கொண்டிருந்த ஒரு பனங்காட்டையடைந்து அப்பனம்பழங்களை விரும்பி உதிர்த்துக்கொண்டு வருகையில் அவ்வனத்துக்குள் தலைவனும் கம்ஸன் பரிவாரத்தில் ஒருவனுமாகிய கழுதை வடிவங் கொண்ட தேனுகாசுரன் கோப­மூண்டு ஓடிவந்து எதிர்த்துப் போர்செய்ய, உடனே கண்ணன் அதிலாவகமாய்ப் பின்னங்கால் இரண்டையும் பற்றி அவ்வசுரக்கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி பனைமரத்தின் மேலெறிந்து அழித்தனனென்பதாம்.

முரனையும் நிரகனையும் மடிவித்த விவரம்-:

எம்பெருமான் வராஹாவதாரம் செய்து பூமியைக் கோட்டாற் குத்தியெடுத்த பொழுது எம்பெருமானுடைய ஸ்பர்சத்தால் பூமிதேவிக்குக் குமாரனாய்ப் பிறந்தவனும் அஸமயத்தில் சேர்ந்து பெறப்பட்டதனால் அஸுரத்தன்மை பூண்டவனுமான நரகனென்பவன் ப்ராக்ஜோதிஷமென்னும் பட்டணத்திலிருந்து கொண்டு ஸகல ப்ராணிகளையும் நலிந்து தேவஸித்த கந்தர்வாதிகளுடைய கன்னிகைகளையும் ராஜாக்களுடைய கன்னிகைகளையும் பற்பலரைப் பலாத்காரமாய் அபஹரித்துக் கொண்டுபோய்த் தான் மணம்புணர்வதாகக் கருதித் தன்மாளிகையிற் சிறை வைத்து வருணனது குடையையும் மந்தாகிரிசிகரமான ரத்நபர்வதத்தையும்  தேவர்தாயான அதிதிதேவியின் குண்டலங்களையும் கவர்ந்துபோனதுமன்றி இந்திரனுடைய ஐராவத யானையையும் அடித்துக் கொண்டுபோகச் சமயம் பார்த்திருக்க, அஞ்சிவந்து பணிந்து முறையிட்ட இந்திரனது வேண்டுகோளால் கண்ணபிரான் கருடனை வரவழைத்து பூமிதேவியின்  அம்சமான ஸத்யபாமையுடனே தான் கருடன்மேலேறி அந்நகரத்தையடைந்து சக்ராயுதத்தை ப்ரயோகித்து அவன் மந்திரியான முரன் முதலிய பல அஸுரர்களையும் இறுதியில் அந்த நரகாஸுரனையும் அறுத்துத்தள்ளி அழித்து, அவன் பல திசைகளிலிருந்து கொண்டுவந்து சிறைப்படுத்தியிருந்த பதினாறாயிரத்தொரு கன்னிகைகளையும் த்வாரகையிற் கொண்டு சேர்த்து மணஞ்செய்து கொண்டனனென்பதாம்.  ஆனை – முற்றுவமை; அண்மைவிளி.

English Translation

The gods rejoiced when you smote the cart Sakatasura and drained life out of the deceitful ogress Putana.  O, dark hued calf of mine! All the hard wood-apples in the deep forest fell when you threw the disguised calf Vatsasura against the Asura tree, then killed the notorious Dhenuka, Mura and Narakasura in battles that shook the Earth.  O, My elephant,

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top