(939)
திரிதந் தாகிலும் தேவ பிரானுடை
கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்
பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
உரிய னாய்அடி யேன்பெற்ற நன்மையே.
பதவுரை
திரிதந்தாகிலும் |
– |
(பகவத் விஷயத்தோடு ஒட்டற்றுத்) திரிந்தேனாகிலும். |
தேவ பிரானுடை |
– |
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய |
கரிய |
– |
(நீலமேகம்போற்) கறுத்ததாய் |
கோலம் |
– |
அழகியதான |
திரு உரு |
– |
பிராட்டியோடு கூடிய திவ்ய ரூபத்தை |
நான் காண்பன் |
– |
நான் ஸேவிப்பேன்; |
பெரியவண் குருகூர் நகர்நம்பிக்கு |
– |
பெருமையையும் ஒளதார்யமுமுடைய ஆழ்வார்க்கு |
உரிய ஆள் ஆய் |
– |
அந்ந்யார்ஹ சேஷபூதனாயிருந்துவைத்து |
அடியேன் பெற்ற நன்மை |
– |
அடியேன் பெற்றபேறு இது காணீர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “தேவுமற்றறியேன” என்றார் கீழ்ப்பாட்டில்; இதில் தேவுமற்று அறிவேன் என்கிறார். ஆழ்வார் பற்றின விஷயமென்று அவ்வழியாலே பற்றலாகும் என்கிற ரோஸ்த்ரார்த்தத்தை விளக்குகிறபடி. “விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்றாளிறே ஆண்டாளும். ஆணையின்மேலே ஏற நினைப்பார். தாமாக ஏறப்புக்கால் உதைபடுவர்; விரகறிந்த பாகன் மூலமாக ஏறினால் அது முறைமையாகும்; அப்படியேயாய்த்து பகவத்விஷயப்பற்றும்.
“திரிதந்தாதிலும்” என்றதைத் “திரிதந்தேனாகிலும்” என்பதன் மரூஉ மொழியாகக் கொண்டு உரைக்கப்பட்டது. அன்றி, வினையெச்சமாகவே கொண்டு உரைத்தலுமொன்று. திரிதருதலாவது திரும்பிவருதலாய், எம்பெருமானை விட்டு ஆழ்வாரளவும் போன நான் திரும்பி எம்பெருமானளவிலே வந்தாகிலும் என்றாம் திருவாய் மொழிப் பாவைவிட்டு இசைகளை விட்டு ஆழ்வாரையும் விட்டு ‘அவருகந்த விஷயம்’ என்று ப்ரதமபர்வத்திலே திரும்பிவந்தாகிலும் என்றபடி.
“திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக் காண்பன் நான்” என்றவாறே, சிலர் மதுரகவிகளை நோக்கி “என்சொன்னீர்! என் சொன்னீர்? விட்டொழிந்த படுகுழியில் மீண்டும் விழுந்தீரே” என்றுகூற, பின்னடிகளால் அவர்கட்கு உத்தரம் அருளிச் செய்கிறார். தேவபிரானுருவை நான் காண்பதானது என்னுடைய முயற்சி மூலமாக நேர்ந்ததாகில் எனக்கு இது தீமையேயாகும்; ஆழ்வார் திருவடிகளிலே நான் அடியனாயிருந்துவைத்து அவர் வழியாலே பெற்றதாகையால் இது நன்மையேயாம் என்றவாறு.
“தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருவைத் திரிதந்து நான் காண்பனாகிலும் (அது) பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கு அடியேன் ஆளுரியனாய்ப்பெற்ற நன்மையாகுமேயன்றித் தீமையாகாது” என்றுமாம்.
English Translation
I roam but everywhere I see, my Teva-piran, his charming face. Through service to the Kurugur King, this lowly-self has found his grace.