(772)

(772)

அரங்கனே! தரங்கநீர்க லங்கவன்று குன்றுசூழ்

மரங்கடேய மாநிலம்கு லுங்கமாசு ணம்சுலாய்

நெருங்கநீ கடைந்தபோது நின்றசூர ரெஞ்செய்தார்

குரங்கையா ளுகந்தவெந்தை கூறுதேற வேறிதே.

பதவுரை

குரங்கை

வானரப்படைகளை
ஆள் உகந்த எந்தை !

உகந்த ஆட்கொண்ட நாயனே!
அரங்கனே

ஸ்ரீஅரங்கநாதனே!
அன்று

(துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினாலே தேவர்கள் செல்வமிழந்து வருந்தி உன்னைச் சரணம் பற்றி நின்ற) அன்று
தரங்கம் நீர் கலங்க

அலைகளையுடைய ஸமுத்ரமானது கலங்கவும்
மா நிலம் குலங்க

பெரிய பூமியானது குலுங்கவும்
மாகணம் நெருங்க கலாய்

வாஸுகி யென்னும் நாகத்தை அழுந்தச் சுற்றி
நீ கடைந்த

(கடலை) நீ கடைந்தருளின காலத்திலே
நின்ற

அருகே நின்று கொண்டிருந்த
சூரர்

மிக்க பராக்ரமசாலிகளென்று பேர்பெற்ற தேவாஸுர ப்ரப்ருதிகள்.
என் செய்தார்

என்ன  காரியம் செய்தார்கள்
இது

இவ்விஷயத்தை
வேறு

விசேஷித்து
தேற

நான் தெரிந்து கொள்ளும்படி
கூறு

அருளிச் செய்யவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இந்திரன் முதலிய தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மந்தர மலையைமத்தாக  நாட்டி- வாஸுகிநாகத்தைக் கடைகயிறாகச் சுற்றிக்கடல் கடைந்தபோது தேவர்கள் அசுரர்கள் முதலியோர் தாங்கள் கயிற்றைவலித்துக் கடைவதாகக் கைவைத்து க்ஷணகாலத்திற்குள் இளைதபுதுப்போய் கைவாங்கினவாறே ‘நீங்கள் வெறுமனே இருங்கள்’ என்று அவர்களைச் சுகமாக உட்காரவைத்து விட்டு எம்பெருமான் தானே அஸஹாயனாய்க் கடைந்து தலைக்கட்டியிருக்கச் செய்தேயும் “தேவதைகள் கடல்கடைந்தார்கள்” என்று நாட்டார் தேவதைகளுக்கு விஜயப்புகழ்கூறுமாறு அவர்களை அபிமாகித்ததும், – அதிமாநுஷக்ருத்யங்களைச் செய்து இராவணனைத் தொலைத்ததெல்லாம் தன்னுடைய திவ்யசேஷ்டிதமாயிகச்ருக் செய்தேயும். ‘வாநர வீரர்கள் இலங்கையைப் பொடிபடுத்தினார்கள்’ என்று உலகத்தார் அவர்கள் தலையிலே விஜயப்புகழை ஏறிட்டுகூறுமாறு அவர்களை அபிமாகித்ததும்- என்ன ஆசரித பக்ஷபாதம்! என்று விஸ்மப்படுகிறார்கள்.

கடல் கடைந்தவிதம் மிகவும் பயங்கரமாயிருந்தது என்கைக்காக, “தரங்க நீர் கலங்க, குன்றுசூழ் மரங்கள் தேய, மாநிலம் குலுங்கக் கடைந்தபோது” என்கிறார். ஸர்ப்பஜாதிக்கு வாசகமாகிய மாசுணம் என்றசொல் இங்கு வாஸுகி யென்று சிறப்புப் பொருளைத் தந்தது. கலாய் = சுலாவி என்றபடி: சுலாவுதல்- சுற்றுதல். இப்படி நீ கடைந்த காலத்திலே, “நாங்கள் பராக்ரமசாலிகள்” என்று செருக்கி மார்புதட்டிக் கிடப்பவர்களான தேவர்கள் “கடலில் நின்றும் அமுதம் கிளர்ந்து வருவது எப்போதோ!” என்று தாங்கள் உணவு பெறுங்காலத்தை எதிர்பார்த்து அக்கடலையே நோக்கிக் கொண்டிருந்தது தவிர ஸமுத்ரமதந காரியத்துக்கு உறுப்பாக ஒரு காரியமும் செய்யவில்லை; செய்ததுண்டாகில் பிரானே! நீயே சொல்லிக்காண்; மந்தரமலைக்கு அதிஷ்டநமா யிருந்தார்களா? வாஸுகிக்கு நல்லசக்தியுண்டாம்படி வரமளித்தார்களா? அல்லது கடை கயிற்றைத்தான் சற்றுப்பிடித்து வலித்தார்களா? என்னதான் செய்தார்கள்? அவர்கள் செய்தது ஒன்றுமில்லை. (அப்படி யிருக்கச்செய்ததேயும் ‘தேவர்கள் கடல் கடைந்தார்கள்’ என்று நாடெங்கும் புகழும்படி அவர்களை அபிமாகித்தது என்ன ஆச்ரித பக்ஷபாதம்! என்ற வியப்பு உள்ளுறை.) (உக)

English Translation

O, Ranga Lord pray tell me how the ocean-deep was churned about, with Vasuki the snake around the mountain Meru Mandaram. The ocean turned and all the Earth was shaking, breaking trees around. O Monkey-Lord, the brave that stood were watching you without a role!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top