(626)
மன்னு மதுரை தொடக்கமாக வண்துவ ராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித் தாழ்குழ லாள்துணிந் ததுணிவை
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே
பதவுரை
| தாழ் குழலாள் |
– |
தாழ்ந்த கூந்தலை யுடையளாய் |
| பொன் இயல்மாடம் பொலிந்துதோன்றும் புதுவையாகோன் விட்டு சித்தன் கோதை |
– |
பொன் மயமான மாடங்களினால் விளங்கித் தோன்றுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள். |
| மன்னு மதுரை தொடக்கம் ஆக வண் துவராபதி தன் அளவும் தன்னை |
– |
ஸ்ரீமதுரைமுதற்கொண்டு ஸ்ரீத்வாரகை வரைக்கும் (சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில்) தன்னை (ஆண்டாளை) |
| தமர் |
– |
தன் உறவினர் |
| உய்த்து பெய்ய வேண்டி |
– |
கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டி |
| துணிந்த துணிவை |
– |
கொண்ட அத்யவஸாயம் விஷயமாக, |
| இன் இசையால் சொன்ன |
– |
இனிய இசையுடன் அருளிச்செய்த |
| செம் சொல் மாலை |
– |
அழகிய சொல்மாலையாகிய இத்திருமொழியை |
| ஏத்தவல்லார்க்கு |
– |
ஓதவல்லவர்களுக்கு |
| இடம் |
– |
வாழுமிடம் |
| வைகுந்தம் |
– |
பரமபதமேயாம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருமொழிகற்றார்க்குப் பலன்கூறித் தலைக்கட்டுகிறாள். வடமதுரை தொடங்கி த்வாரகாபுரியளவாகப் பத்தெட்டுஸ்தாநங்களைச் சொல்லி அவ்விடங்களிலே தன்னைக்கொண்டுபோய்ச் சேர்க்கவேணுமென்பதாகத் தனது பந்து வர்க்கத்திலுள்ளாரை நோக்கி ஆண்டாளருளிச் செய்த இத்திருமொழியை ஓதவல்லவர்கள் ஸ்ரீவைகுண்டத்திலேபோய் நித்யாநுபவம் பண்ணப்பெறுபவர்கள் என்ற தாயிற்று.
English Translation
This garland of sweet verses by Goda, daughter of Puduvai’s king Vishnuchitta, imploring her friends to take her to the Lord in Mathura, Dvaraka and elsewhere, –those who can sing it will dwell in Vaikunta forever.
