(543)

(543)

பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்

ஒழுகு வாரண முய்ய வளித்தஎம்

அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்

குழக னார்வரில் கூடிடு கூடலே

பதவுரை

பழகு நால்மறையின் பொருள் ஆய

அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய்
மதம் ஒழுகுவாரணம் உய்ய அளித்த

மத ஜலம் பெருகாநின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படிக்ருபை செய்தருளினவனாய்
எம் அழகனார்

எம்மை ஈடுபடுத்தவல்ல அழகையுடையனாய்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார்

அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ணபிரான்
வரில்

வரக்கூடுமாகில்

கூடலே! கூடலே

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலை கோள்விடுத்து கஜேந்திராழ்வானைக் காத்தருளிய அபதாநத்திலே’ ஈடுபட்டுப் பேசுகின்றாள். (வேதைச்ச ஸர்வை ரஹமேவ வேத்ய:) இத்யாதி ப்ரமாணங்களையுட்கொண்டு “பழகு நான் மறையின் பொருளாய்” என்றன். அக்கிநி, இந்திரன், வாயு முதலிய தேவதைகளைப் பற்றியும் வேதங்களில் கர்மகாண்டங்களிலே பரக்கப் புகழ்ந்து பேசப்பட்டிருப்பினும் ‘(அங்காந்யந்யா தேவதா:’) என்று அந்த வேதந்தானே அந்த தேவதைகளை எம்பெருமானுக்கு அவயவபூதங்களாகச் சொல்லிக் கிடக்கையாலே அவயங்களைப் புகழ்ந்து சொல்வதும் அவயவிக்கே அதிசயமாக முடிகையாலே தேவதாந்தர ப்ரசம்ஸாபரமான கர்மகாண்டமும் பகவத்பரமேயாகத் தட்டில்லை யென்க. ‘வேததாத்பர்ய ஸர்வஸ்வம்’ என்னும் நூலிலே இவ்விஷயத்தைப் பரக்கப்பேசியுள்ளோம்’ அங்கே விரியக் கண்டு கொள்க.

வாரணம்-தற்சமவடசொல். “வாரணமுய்ய வளித்த வெம்மழகனார்” என்ற சேர்க்கையின்பம் நோக்கி ஒரு கருத்துக் கூறலாம்’ அதாவது-கஜேந்த்ராழ்வானுடைய கூக்குரலைக் கேட்டவுடனே எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய விரைந்தோடுங்கால் (ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் ததாந:- ஸ்ரீரங்கராஜஸ் தவம் உத்தரசதகம்) என்றபடி ஆடையாபரணம் அலங்கல் முதலியவற்றை ஜல்லாரிபில்லாரியாக அணிந்து கொண்டு புறப்பட்ட அழகு ஆண்டாள் நெஞ்சிலே ஊற்றிருந்து ஈடுபடுத்துகிறபடி.

அணியாய்ச்சியர் சிந்தையுள் குழகனார்-“கொங்கைமேற் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள் தங்குமேல் என்னாவிதங்கும்” என்னும்படியான காதல் கிளர்ந்துள்ளவர்களுக்கு இவன் அப்போதே சென்று முகங்காட்டாவிடில் அவர்கள் மிகவும் மனம் நொந்து ப்ரணயரோஷம் கலையெடுக்கப் பெற்று “அந்த க்ருஷ்ணன் இனி என்றைக்கும் நம்மருகே வாராமலேயா போகப் போகிறான்! என்றைக்காவது ஒருநாள் அநந்யகதியாய் வந்து நிற்பனன்றோ’ அப்போது நாம் அவனுக்கு முகங்கொடுக்கக் கடவோமல்லோம்” என்று திண்ணிதாக ஸங்கல்பம் செய்து கொண்டவர்களுங்கூட மறம் தீர்ந்து மேல்விழுந் தணையும்படி அவர்களைப் பிச்சேற்றவல்ல நல்விரகுகள் அறியுமவன் கண்ணபிரான் என்க.

வரில் கூடிடு கூடலே;- ‘அடியேன நுனியேன்’ என்றாற்போலே தாழ்வுகளுஞ் சொல்லி அவர்களை ஊடல் தீர்த்து அவர்களோடே ஒருநீராகக் கலந்து அவர்களுடைய மனநோயைத் தீர்ப்பதுபோல எனது மனநோயையும் தீர்க்க என்னோடும் ஒருநாள் வந்து கூடவேண்டாவா?.  ….   …  ….  (கய)

English Translation

My handsome one is the sweet sap of the four Vedas. He gave life to the elephant Gajendra in distress. He lives in the hearts of beautiful cowherd-dames. If he will come, then join, O Lord-of-the-circle.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top