(480)

(480)

கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ

தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

பதவுரை

பேய் பெண்ணே

மதியெட்ட பெண்ணே!
எங்கும்

எல்லாவிடங்களிலும்
ஆனைச்சாத்தன்

பரத்வாஜ பக்ஷிகளானவை
கலந்து

(ஒன்றோடொன்று) ஸம்ச்லேக்ஷித்து
கீசுகீசு என்று

கீச்சுகீச்சென்று
பேசின

பேசிய
பேச்சு அரவம்

பேச்சினுடைய ஆரவாரத்தை
கேட்டிலையோ

(இன்னும் நீ) கேட்கவில்லையோ?
வாசம்

பரிமள வஸ்துக்களினால்
நறு

மணம் கமழா நின்றுள்ள
குழல்

கூந்தலையுடைய
ஆய்ச்சியர்

இடைப்பெண்கள்
காசும்

(கழுத்தில் அணிந்துள்ள) அச்சுத்தாலியும்
பிறப்பும்

ஆமைத்தாலியும்
கலகலப்பு

கலகலவென்று சப்திக்கும் படியாக
கைபேர்த்து

கைகளை அசைத்து
மத்தினால்

மத்தாலே
ஓசை படுத்த

ஓசை படுத்தின
தயிர் அரவம்

தயிரின் ஒலியையும்
கேட்டிலையோ

கேட்கவில்லையோ?
நாயகப் பெண் பிள்ளாய்

பெண்களுக்கெல்லாம் தலைமையாயிருப்பவளே
நாராயணன் மூர்த்தி கேசவனை

ஸ்ரீமந் நாராயணாவதாரமான கண்ணபிரானை
பாடவும்

(நாங்கள்) பாடா நிற்கச் செய்தேயும்
நீ

நீ
கேட்டே

(அப்பாட்டைக்) கேட்டு வைத்தும்
கிடத்தியோ

(இங்ஙனே) உறங்குவாயோ?
தேசம் உடையாய்

மிக்க தேஜஸ்ஸையுடையவளே!
திற

(நீயே எழுந்துவந்து கதவைத்) திற

ஏல் ஓர் எம் பாவாய்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிலரை உணர்த்திக் கூட்டிக்கொண்டு கண்ணபிரான் பக்கற் போமவர்களன்றே இவர்கள்; நம்மைப் போலவே அமைவரும் நன்மைபெறவேணுமென்னுங் கருத்துடையோரன்றோ.  புகவத்ஸம்பந்தம் மெய்யே உண்டாகில் தன் வயிற்றிற் பிறந்த ப்ரஜையினுடைய ஸம்ருத்திக்கு உகக்குமாறு போலவே அனைவருடைய ஸம்ருத்திக்கும் உகக்கவேணுமன்றே?

ஆட்கொண்ட வில்லிஜீயர் எழுந்தருளா நிற்கச்செய்தே நஞ்சீயர் தெண்டனிட்டு நிற்க, “பகவத் விஷயத்தில் ருசி நமக்கு மெய்யே பிறந்ததில்லை காணும்’ என்று ஆட்கொண்ட வில்லிஜீயர் அருளிச்செய்ய, நஞ்சீயர், “உம்மைப்போல் ஆசார்யவான்கள் ஆரேனுமுளரோ? நீர் இங்ஙனே அருளிச்செய்வானென்?” என்று கேட்க; “பாகவதர்களின் ஸம்ருத்தியைக் கண்டு மிக உகக்கையன்றோ பகவத் விஷயத்தில் ருசி மெய்யே பிறக்கையாவது; அஃது இல்லாமையைப் பற்றச்சொன்னேன் காணும்” என்று ஆட்கொண்ட வில்லிஜீயர் அருளிச்செய்தார் என்ற  ஐதிஹ்யம் இங்கு நினைக்கத்தக்கது.

இங்ஙனே எல்லார்க்குமொக்க இந்நன்மை உண்டாகவேணுமென்ற பாரிப்புடன் எல்லாரையுந் திரட்டிக்கொண்டு மற்றொருத்தியின் மாளிகை வாசலிற் சென்ற ஆயர் மாதர், ‘பெண்ணே! போதுவிடிந்ததுகாண், எழுந்திராய்’ என்ன; ‘விடிந்தமைக்கு அடையாளமென்?’ என்று அவள் கேட்க; ‘ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் முதலியன அடையாளமல்லவோ?’ என்கிறார்கள்.

கீசுகீசு – ஒலிக்குறிப்பு; அநக்ஷரரஸமாயிருக்கிறபடி ‘ஆனைச்சாத்தம்’ எனினும் ‘ஆனைச்சாத்தன்’ எனினும் ஒக்கும்; பரத்வாஜபக்ஷி-வலியனெனப்படுமென்ப “செம்போத்து” என்பாருமுளர்.  உணர்த்தவந்த ஆய்ச்சிகள் ஆனைச்சாத்தத்தினுடைய தொனி விடிவுக்கு அடையாளமன்றோ?’ என்ன; ‘ஒரு ஆனைச்சாத்தமுணர்ந்த விது விடிவுக்கு அடையாளமாகப் போருமோ?’ என்று அவள் கேட்க; இவர்கள் “எங்கும்” என்ன; ‘எங்கும் நீங்களில்லையோ அவற்றை உணர்த்துகைக்கு’ என்று அவள் சொல்ல; ‘அவை நாங்களுணர்த்த உணர்ந்தனவல்ல; கலந்துபேசின பேச்சுக் காண்’ என்று இவர்கள் சொல்ல; ‘இரவெல்லா முறங்கிப் பொழுதுவிடியும்போதோ கலப்பது?’ என்று அவள் கேட்க; ‘மரக்கலம் (கப்பல்) ஏறிப்போமவன் மீண்டுவருமளவும் ஜீவநமேற்றிக்கொண்டு போவதுபோல, இவையும் பிரிவுகாலமாகிய விடியற் காலத்திலே கலந்து பகல் முப்பது நாழிகைக்கும் விளைநீர் அடைத்துக்கொண்டு ‘அந்தோ! பிரிவு வருகின்றதே!’ என்னுந் தளர்த்தி தோற்றப் பேசுகிற பேச்சு விடிவுக்கு அடையாளமாகவற்றன்றோ என்கிறார்கள்.

இங்ஙன் கூறக்கேட்ட அவள், மாளிகைகளில் துதிபாடகர்கள் வம்சாவளி சொல்லக்கேட்டு உணரக்கடவார் பறவைகளின் பேச்சுக்கேட்டு உணரவேண்டும்படியாவதே!  அஹஹ! இஃதென்ன விபரீதகாலம்!’ என்று வெறுத்துக்கிடக்க, பேய்ப் பெண்ணே! என்று நிந்திக்கின்றனர்.  பாகவத ஸம்ச்லேஷத்திற்கு வரைந்து ஓடிவாராமே ஆறியிருக்கையின் மிக்க பேய்த்தனமில்லையே.  இங்ஙன் கூறக்கேட்ட அவள், ‘நள்ளிருட்கண் வந்து பொழுதுவிடிந்ததெனப் பிதற்றுகின்ற நீங்களன்றோ பேய்ப்பெண்கள், என்ன; இவர்கள், ‘பொழுது விடிந்ததில்லை’ என்கிற நீ தான் பேய்ப்பெண் என்ன; அவள், ‘விடிந்தமைக்குக் கூறிய இவ்வடையாளம் போதாது;  வேறடையாளமுண்டாகிற் சொல்லுங்கள்’ என்ன; இவ்வூரில் ஆய்ச்சிகள் அனைவரும் உணர்தெழுந்து தயிர் கடைகிற ஓசைகூடச் செவிப்பட்டதில்லையோ? அஃது அடையாளமாகவற்றேயன்றோ? என்கிறார்கள்.

காசு பிறப்பு – மாதர் அணியும் ஆபரண விசேஷம்.  கலகலப்ப – ஒலிக்குறிப்பு. கடைய வேண்டிய தயிர் அளவற்றுள்ளமையாலும், கடைகின்ற தங்களுடைய ஸௌகுமார்யத்தாலும், கிருஷ்ணன் அருகில் வந்திருந்துகொண்டு ‘தயிரை மோராக்கவொட்டேன்’ என்று கடைகயிற்றைப்பற்றி வலிக்கையாலும் கடைகையிலுள்ள அருமையைக் கூறுவது, கைபேர்த்து என்பது.  கைபேர்த்து – தயிர் கடைகையில் கையை வியாபரிக்கச் செய்து என்றபடி.  கடைகிற போதைச் சிரமத்தாலே மயிர்முடி கட்டு நெகிழ்ந்து முடைநாற்றத்தை மறைக்கும்படி மணங்கமழா நின்றுள்ளமைபற்றி ‘வாசநறுங் குழலாய்ச்சியர்’ எனப்பட்டது.

“உத்காயதீநாமாவிந்தலோசநம் வரஜாங்கநாநாம் திவமஸ்ப்ருசத் த்வநி:- தத்நச்ச நிர்மந்தநசப்தமிச்ரிதோ நிரஸ்யதே யேந திசாமமங்களம்.” கண்ணபிரானுடைய கண்ணழகுக்குத் தோற்றுப் பாடுகிற ஆயர் மாதருடைய பாட்டினொலி தயிர் கடைகிற ஓசையோடே கலசிப் பரமபதத்தே செந்றொலித்ததெனப்; புராண நூல் கூறுமாறறிக.  ஆய்ச்சிகள் தயிர் கடையும்போதும் கண்ணபிரானைப் பாடுவார்களோ வென்னில்; “விக்ரேதுகாமா கில கோப கந்யா முராரி பாதார்ப்பிதசித்தவ்ருத்தி:- தத்யாதிகம் மோஹவசாதவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி.” ஓராய்ப்பெண், பண்ணபிரான் முரனை முடித்த வீரத்தில் தோற்று அவன்பக்கல் கருத்தை ஊன்றவைத்து வேறு சிந்தையின்றியிருக்க, வீட்டிலுள்ள பெரியோர் ‘இவளை இதினின்றும் மீட்கும் விரகு ஏதோ’ என்று பார்த்து, பாலையும் தயிரையும் நெய்யையும் தந்து ‘இவற்றை விற்றுவா’ என்றனுப்ப, அவளும் அங்ஙனமே விற்கச்செல்ல, நினைவு கண்ணபிரான் பக்கலிலாகையாலே, ‘கோவிந்தன் வாங்கவில்லையோ கோவிந்தன், கிருஷ்ணன் வாங்கவில்லையோ க்ருஷ்ணன், மாதவன் வாங்கவில்லையோ மாதவன்’ என்று க்ருஷ்ண நாமங்களைக் கூறிக்கொண்டு திரிந்தாள் என்னா நின்றால், தயிர் கடையும்போது கண்ணபிரானைப் பாடுவார்களென்னத் தட்டுண்டோ? நிற்க.

இவ்வடையாளம் சொல்லக்கேட்ட அவள், ‘பெண்காள்! இப்போது இப்பாடி பண்டு போலோ இருப்பது? க்ருஷ்ணன் பிறந்த பின்னர் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்களாகையாலே அறுபது நாழிகையும் கறப்பது கடைவதாய்ச் செல்லுமத்தனையேயன்றோ? இது விடிவுக்கு அடையாளமாகவற்றோ! என்று அவர்கட்கு மறுமாற்றத்திற்கு இடமில்லாதபடி கூற, வேறு விடைசொல்ல வல்லமையின்மையாலே நாயகப் பெண்பிள்ளாய்! என்கிறார்கள்.  இங்ஙனே நாங்கள் சொல்லுமடையாளங்கட்கெல்லாம்  அந்யதாஸித்தி  சொல்லுகிறதற்கு அடி உன் வீறுடைமையன்றோ என்றவாறு.

இப்பாட்டில், ஒருகால் ‘பேய்ப்பெண்ணெ!’ என்பது, மற்றொருகால், ‘நாயகப்பெண்பிள்ளாய்!’ என்பதாய்ச் சொல்லுகிறபடியைக் காண்மின்; “ஒரு மிதுநமாய்ப் பரிமாற நின்றால் தாழச் சொன்னபோதும் உயரச் சொன்னபோதுமாயிறே யிருப்பது” என்பர், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்;” ‘பேய்ப்பெண்ணே’ என்றத்தோடு ‘நாயகப்பெண்பிள்ளாய்’ என்றத்தோடு வாசி இல்லையிறே அகவாயில் பாவம் ஒன்றாகையாலே” என்பர், பெரியவாச்சான் பிள்ளை.  நாயகப்பெண்பிள்ளாய்! — இத்திரளுக்கெல்லாம் நீ தலைவியானபடி இதுவோ? எல்லோரையும் திரட்டிக்கொண்டுபோய் உத்தேச்யத்தைப் பெறுகையன்றோ தலைவியின் காரியம் என ஏசியவாறு.

இங்ஙன் ஏசக்கேட்ட அவள், ‘என்னை நீங்கள் தலைவி என்னலாமோ, உங்களுக்கு நான் அடிமைப்பட்டவளல்லேனோ? இதோவந்து கதவைத்திறக்கிறேன்; எம்பெருமானுடைய சில அபதாநங்களைப் பாடிக்கொண்டிருங்கள் என்ன; இவர்கள் கேசிவதவ்ருத்தாந்தத்தைப் பாடத்தொடங்கினார்கள்.

கேசியின்வாயைக் கீண்டெறிந்த வரலாறு:– கமஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கேசி என்பவன் குதிரையின் உருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி கனைத்துத் துரத்திக்கொண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப்பற்களை உதிர்த்துஉதடைப்பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

நாராயணன்மூர்த்தி கேசவனை – நாராயணமூர்த்தியாகிய கேசவனை; அன்றி, மூர்த்தி என்று ஸ்வாமிக்கும் பெயராகையாலே, நாராயணாவதாரமாய் ஸர்வஸ்வாமியான கேசவனை என்றும் உரைக்கலாம்.  கேசவன் என்பதற்கு, கேசியைக் கொன்றவன், சிறந்த மயிர் முடியையுடையவன், அயனரர்கட்குத் தலைவன் என மூவகைப் பொருள்களுண்டு.

இவர்கள் கேசவனைப் பாடச்செய்தேயும் அவள் பேசாதே கிடக்க, நீகேட்டே கிடத்தியோ என்கிறார்கள்.  நாங்கள் பாடின பாட்டு உன் உறக்கத்திற்குத்  துடைகுத்தினவாறாயிற்றுப்போலுமென்ற கருத்துக் காண்க.  உள்ளே அவள் எம்பெருமானுடைய வெற்றியை அநஸந்தித்துக்கொண்டு பேசாதேகிடந்தமையால்,  இவர்கள் சாலக வாசலாலே நோக்கிக்கண்டனர்; எம்பெருமானுடைய விஜயா நுஸந்தாநத்தினால் அவள் வடிவிற்றோன்றியுள்ள புகரைக்கண்டு “தேசமுடையாய்!” என விளித்துக் கதவை திறவென்கிறார்கள்.

கிடத்தி – முன்னிலை யொருமை வினைமுற்று.  தேசம் — தேஜஸ் என்னும் வடசொல் விகாரம்.

(ஸ்வாபதேசம்)–இது; பெரியாழ்வார்க்கு அடுத்த முந்தினவரான குலசேகராழ்வாரை யுணர்த்தும் பாசுரம், ‘பேய்ப்பெண்ணே!, நாயகப் பெண்பிள்ளாய்?, தேசமுடையாய்!, என்ற மூன்று விளிகளும் குலசேகராழ்வாரை வற்புறுத்துவன. பெருமாள் திருமொழியில் மெய்யில் வாழ்க்கையை என்றவொரு பதிகத்தினால் தம்மைப் பெரும் பேயராகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.  ஏர் மலர்ப்பூங்குழல், ஆலை நீள் கரும்பு, மன்னுபுகழ்க் கௌசலைதன்   என்ற பதிகங்களில் பல பெண்களின் தன்மையை யடைந்து பேசினாருமிவர். “கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று அரசரான தன்மை தோற்றப் பேசினராதலால் நாயகப் பெண் பிள்ளாய் என்றது.  அன்றியும், ஒரு ஹாரத்தில் நட்ட நடுவிலுள்ள மணியை ‘நாயகக்கல்’ என்பதுண்டு.  குரு பரம்பரையில் எம்பெருமானாரை நடுநாயகமென்று யதிராஜ ஸப்ததியில் தேசிகன்  கூறினர்; யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: மஹதீ குரபங்க்தி ஹாசயஷ்டி:”  என்கிறார் அதுபோலவே ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாக வுள்ளவர்.  பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என முன்னே ஐவர்; பட்டநாதன் கோதை தொண்டரடிப்பொடிகள் பாண்பெருமாள்  கலியன் எனப்பின்னே ஐவர்; நடுவே குலசேகரர்.  ஆகவே இதுபற்றயும் நாயகப்பெண்பிள்ளாய் என்ற பிறி நன்கு பொருந்தும்.  (தேசமுடையாய்!) பகவத் கீதையில் (18-43) (சௌர்யம் தேஜோத்ருதிர் தாக்ஷ்யம் —  க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்.) என்று தேஜஸ்ஸு க்ஷத்திரிய தர்மமாகச் சொல்லப்பட்டிருப்பதற்கிணங்க இந்த விளி இவ்வாழ்பாருடைய க்ஷத்திரியத்வத்தைத் தெரிவிக்கும். அன்றியும், “தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜன்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸுக்தியின்படியும், அதற்கு மூலமான “மண்ணாட்டிலாராகியெவ்விழிவிற்றானாலும்;, ஆழியங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு – உண்ணாட்டுத் தேசன்றே” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தின்படியும் பகவத் சேஷத்வத்திற்கு அநுகூலமான பிறப்பே  தேஜஸ்ஸென்று நிர்ணயிக்கப்படுகிறது;  அப்படிப்பட்ட பிறப்பை ஊனேறு செல்வத்து என்ற பதிகத்தில் பாசுரந்தோறும் ஓரோ விதமாக விரும்பினவர் இவ்வாழ்வாரேயாதலால் தேசமுடையார் இவரேயாகத்தகும். இப்பாட்டில்       “ஆனைச்சாத்தன்” என்ற பதப்பிரயோகம் கவனிக்கத் தக்கது. இச்சொல் மலையாள பாஷையிலிருந்து திசைச் சொல்லாகத் தமிழில் வழங்குவதென்பர்.  (ஆன சாதம்) என்று மலைநாடர் வலியனென்னும் பறவையை வழங்குவராம்.  இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதாரித்தவராதலால் அத்திசைச்சொல் இங்குட் பரவசமாகவே அமைந்தது போலும்.  காசும் பிறப்பும் என்று ஆபரண விசேஷங்களைப் பற்றின ப்ரஸ்தாவமிருப்பது இவ்வாழ்வாருடைய சரிதையில் ஆபரண ப்ரஸ்தாவமுள்ளவாற்றை ஒருவாறு நினைப்பூட்டும்.  “ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங்கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற தனியனும் ஸ்மரிப்பது.  “வாசநறுங் குழ லாய்ச்சியர் மத்தின லோசைபடுத்த தயிரரவம்” என்றது பெருமாள் திருமொழியில் “கெண்டை யொண்கணை மடவாளொருத்தி கீழையகத்துத் தயிர் கடையக்கண்டு….. வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ….. தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்” என்ற பாசுரத்துச் சொற்சுவைகளை நன்கு நினைப்பூட்டும்.  (நாராணயன் மூர்த்தி கேசவனைப் பாடவும்) திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை வதஞ்செய்ததனால் கேசவனென்றது.  இவ்வாழ்வார் தமது திருமொழியில் முதன் முதலாக இந்த வரலாற்றையே பேசியநுபவித்தார் மாவினை வாய் பிளந் துகந்தமாலை என்று.  ஸ்வப்ரபந்தத்தை “நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே” என்று நாராயணனைப் பாடித் தலைக் காட்டினார்.  (கேட்டே கிடத்தியோ) இவ்வாழ்வார் நாடோறும் அந்தணர்களைக் கொண்டு ஸ்ரீராமாயணபாராயணஞ் செய்வித்துத் தாம் கேட்டவர்.  கேட்டு, இருந்தவிடத்திலிராமல் படையெடுத்துஞ்சென்றவர்.

English Translation

Devilish girl! Do you not hear the screeching sounds of grey birds chattering loudly? Do you not hear the churning sound from the butter pail of fragrant haired milkmaids, their bangles and charms jingling merrily as they churn? O Nobly-born girl, do you still lie in bed listening while we stand and sing the praises of Narayanam Kesava? Bright girl! Open the door, quick!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top