(467)

(467)

பொன்னைக்கொண்டு உரைகல்மீதே நிறமெழ வுரைத்தாற்போல்

உன்னைக்கொண்டுஎன் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்

உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன்

என்னப்பாஎன் னிருடீகேசா என்னுயிர்க் காவலனே.

பதவுரை

என் அப்பா

எனக்குத் தந்தையானவனே!
என் இருடீகேசா

எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே!
என் உயிர்

என் ஆத்மாவை
காவலனே

(அந்யசேஷமாகாதபடி) காக்கவல்லவனே!
பொன்னை

ஸுவர்ணத்தை
நிறம் ஏழ

நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக)
உரைகல் மீது கொண்டு

உரைக்கல்லில் இட்டு
உரைத்தால் போல்

உரைப்பதுபோல
உன்னை

(பரமபோக்யனான) உன்னை
என் நா அகம் பால் கொண்டு

என் நாவினுட்கொண்டு
மாற்று இன்றி

மாற்று அழியும்படி
உரைத்துக்கொண்டேன்

உரைத்துக்கொண்டேன்.
உன்னை

(யோகிகட்கம் அரியனான) உன்னை
என்னுள்

என் நெஞ்சினுள்
கொண்டு வைத்தேன்

அமைத்தேன்;
என்னையும்

(நீசனான) அடியேனையும்
உன்னில் இட்டேன்

உனக்குச் சேஷப்படுத்தினேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில், எம்பெருமானுக்கு அம்ருதத்ருஷ்டாந்தங் கூறினர்; இப்பாட்டில் ஸ்வர்ணத்ருஷ்டாந்தங் கூறுகின்றனர். உலகத்தில் பொன்னைப் பரீக்ஷிக்க விரும்புமவர்கள், அதனை உரைகல்லில் இட்டு உரைத்துப் பார்ப்பர்கள்; அதுபோல், பொன்போன்ற உன்னை, அற்பசாரங்களில் மண்டின என் நாக்காகிற உரைகல்லில் இட்டு உரைத்தேன்; நல்ல பொன்னைக் கெட்ட கல்லிலிட்டுரைத்தால் அப்பொன்னினுடைய மாற்றுக் குறைவதுபோல், நீ என்றன் சழக்கு நாக்கிலிட்டு ரைக்கப்பட்டமையால் மாற்று, அழியப்பெற்றாய் என்பது, முன்னடிகளின் கருத்து. உரைகல்-உரைத்துப் பார்ப்பதற்கு உரிய இடமாகிய கல்; ***-***- மென்பர். நிறமேழ – நிறமறிவதற்காக என்றே பொருளாகும்;  ‘நிறமுண்டாம்படி’ என்பது பொருளன்று; பொல்லாப்பொன்னை உரை கல்லிலே உரைத்த மாத்திரத்தினால் அதற்கு நல்ல நிறமுண்டாகமாட்டாதே; உள்ளமாற்றேயன்றோ காணப்படுவது. நல்ல பொன்னையும் பொல்லாப்  பொன்னையும் உரைகல்லில் நிறம்பார்க்கவிறே உரைப்பது. ஆதலால், நிறமெழ என்பதற்கு, ‘நிறமறியும்படி’ என்றே பொருள்கொள்க. ‘உன்னைக்கொண்டு’ இத்தியாதி இரண்டாமடி நைச்சியநுஸந்தாநம். ஒருவராலும் துதிக்கவொண்ணாத விஷயத்தை ஒருவன் துதிக்கத் தொடங்குவது – அவ்விஷயத்தைத் தூஷிப்பதுபோலாகுமேயன்றி, பூஷிப்பதாக மாட்டாதானமைபற்றி, மாற்றின்றி என்கிறார். இங்கு, இன்றி என்பதற்கு – ‘இல்லாமற்போம்படி’ எனப் பொருள் கொள்ளவேணும். “மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்- மாற்றழியும்படி’ பேசிக்கொண்டு நின்றேன். நல்லபொன்னை நல்லகல்லிலே உரைத்தாலிறே மாற்று அறியலாவது; தரமல்லாத கல்லிலே உரைப்பாரைப்போலே, உன்னை என் நாக்காலே தூக்ஷித்தேன்; பொன் என்கிறது -ஈச்வரனை; கல் என்கிறது – நாக்கை” என்ற வியாக்கியான வாக்கியங் காணத்தக்கது.

இப்படி அருளிச்செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! இன்றளவும் நான் உமக்குச் செய்துவந்த நன்றிகளுக்கு ஓரளவில்லை; ‘நெய்க்குடத்தைப்பற்றி’ என்ற திருமொழியில் அந்நன்றிகளை நீர்தாமே பரக்கப் பேசியிருக்கிறீர்; இப்படி நான் உம்மைப் பரமபரவநராக்கி யிருக்கச்செய்தேயும், உம்மை நீர் மிகவும் அசத்தராகப் பாவித்து, என்னை நாவிற்கொண்டு தூக்ஷித்து விட்டதாகப் பேசுகிறீரே, இஃது என்ன கொடுமை! உமக்கு மேற்பட்ட நன்றி கெட்டார் இவ்வுலகில் இல்லைகாணும்” என்ன; அது கேட்ட ஆழ்வார் மிகவும் அஞ்சி அவ்வெம்பெருமான் திருவடிகளில் ஆத்மஸமர்ப்பணம் பண்ணுகிறார், பின்னடிகளால்; “நன்றாக, நானுன்னை யன்றியிலேன் கண்டாய் நாரணமே! நீயென்னை யன்றியிலை” என்றாற்போல நாராயண சப்தார்த்தம் பின்னடிகளில் விவரிக்கப் பட்டதாகும்.

English Translation

Like rubbing nugget on a touchstone to check its purity, I have rubbed your name on my tongue. Forever, I have placed you in myself and myself in you. My lord Hrishikesa my Father, my Guardian-spirit!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top