(451)
உறக லுறக லுறகல் ஒண்சுட ராழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாம லிருந்த எண்மர் உலோகபா லீர்காள்
பறவை யரையா உறகல் பள்ளி யறைக்குறிக் கொண்மின்.
பதவுரை
| ஒண் சுடர் |
– |
அழகிய தேஜஸ்ஸையுடைய |
| ஆழியே |
– |
திருவாழியாழ்வானே! |
| எறி |
– |
(எம்பெருமானால்) வீசப்படுகின்ற |
| நாந்தக வானே! |
– |
நந்தகமென்கிற திருக்குற்றுடைவானே! |
| அழகிய சார்ங்கமே |
– |
அழகு பொருந்திய |
| கார்ங்கமே |
– |
சார்ங்கமென்கிற தநுஸ்ஸே! |
| தண்டே |
– |
(கௌமோதகி என்கிற) கதையே! |
| இருந்த |
– |
(எம்பெருமானுடைய நியமனத்திற்கு ஆட்பட்டு) இராநின்ற |
| எண்மர் உலோக பாலீர்காள் |
– |
அஷ்டதிக்குப் பாலகர்களே! |
| இறவு படாமல் |
– |
தப்பிப் போகாமல் |
| சங்கே |
– |
ஸ்ரீபஞ்சஜந்யாழ்வானே! |
| அற |
– |
(ஆச்ரிதவிரோதிகளின் உடல்) அறும்படி |
| உறகல் உறகல் உறகல் |
– |
உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள்; |
| பறவை அரையா |
– |
பறவைகளுக்குத் தலைவனான பெரிய திருவடியே! |
| உறகல் |
– |
உறங்காதிரு; |
|
(நீங்கள் எல்லாரும் விழித்துக் கொண்டிருந்தது) |
||
| பள்ளி அறை |
– |
(எம்பெருமானுக்குத்) திருப்பள்ளி யறையாகிய என் சரீரத்தை |
| குறிக் கொள்மின் |
– |
நோக்கிக் காத்திடுங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இவ்வாழ்வார் மற்றை ஆழ்வார்களைப் போலன்றி, ‘எம்பெருமானுக்கு என்வருகிறதோ’ இதுவரை தம்மை எம்பெருமானால் காக்கப்பட்டவராக அநுஸந்தித்துப் போந்தவிலர், அவனுக்குங் காவல் தேடுகிறார், இப்பாட்டில், எம்பெருமானுடைய திவ்வியாயுதங்களையும், அஷ்டதிக் பாலகர்களையும், வாஹநத்தையும் விளித்து, நீங்களெல்லாருமாகச் சேர்ந்து உறங்காமல் கண்விழித்துக் கொண்டிருந்து எம்பெருமானுடைய படுக்கைப்பற்றை நோக்கிக் கொண்டிருங்கள் என்கிறார்.
உறகல்- உறங்கவேண்டா என்று பொருளையுடைய உறங்கல் என்னும் எதிர்மறை வியங்கோள் வினைமுற்றின் சிதைவு. ‘உறகல் உறகல் உறகல்’ என்ற அடுக்குத்தொடர், அச்சம் பற்றியது. ‘இறவுபடாமல் உறகல்’ என இயையும்; அன்றி, ‘இறவுபடாமல் இருந்த’ என அடைவே இயைத்து, என்றும் இறவாமல் வாழ்கின்ற என்று பொருள் கொள்வாருமுளர் . (எண்ம ருலோக பாலீர்காள்.) “இந்திரனங்கி யாமனிருதி வருணன், வந்தவாயு குபேரனீசாநன், என்ன வெண்டிசை யுலோகபாலகர்” என்பது திவாகரம்.
English Translation
Ye radiant discuss and conch, Vigil! Ye deadly dagger Nandaka, Vigil! Ye beautiful Sarnga bow, Vigil! Ye eternal sentinels of the eight Quarters, Ye king of birds, be vigilant and stand guard over my Lord’s bed-chamber!
