(3511)
கற்பகக் காவன நற்பல தோளற்கு,
பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு,
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு,என்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.
பதவுரை
| கற்பகம் கா அனநல் பல தோளற்கு |
– |
கற்பகச்சோலைபோன்ற நல்ல பல திருத்தோள்களையுடையவனும் |
| சுடர் பொன் குன்று அன்ன பூ தண் முடியற்கு |
– |
சுடர்மிக்க பொற்குன்றம் போன்ற மிகவழகிய திருவபிஷேகத்தை யுடையவனும் |
| நல் பல தாமரை நான் மலர் கையற்கு |
– |
அப்போதலர்ந்த தாமரைப் பூப்போன்று விலக்ஷணமான பல திருக்கைகளையுடையவனுமான எம்பெருமான் திறத்திலீடுபட்டதனால் |
| என் வில் புருவம் கொடி |
– |
வில்போன்ற புருவத்தை யுடையளான என் பெண்கொடி |
| தோற்றது |
– |
இழந்தது |
| மெய் |
– |
தன்னுடம்பையாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கற்பக்காவன) இப்பாட்டில் “தோற்றது மெய்யே“ என்று, தன்மகள் சரீரத்தை இழந்தாளாகச் சொல்லுகிறாள். சரீரம் தன்வசமாயிருக்கையன்றியே பரவசமாகப் பெற்றாளென்றபடி. அதாவது – * காலழும் நெஞ்சழியும் கண்சுழலும் என்னும்படியான நிலைமையை எய்தினாளென்கை.
கற்பகக்காவன நற்பல தோளற்கு – கற்பகக்கா – கற்பகச்சோலை, அன என்றது ‘அன்ன‘ என்றபடி? (தொகுத்தல் விகாரம்) கற்பகச் சோலையையொத்த நல்ல பல தோள்களையுடையவன் என்றாறு. ஸர்வஸ்வதானம் பண்ணிப் புகழ்படைத்த திருக்கைகளாகையாலே கற்பகச் சோலையோடு ஒப்பிடப்பட்டன வென்க. * தோள்களாயிரத்தாய் * என்னும்படியாக, அடியார்களை வாரியெடுத்து அணைக்கைக்குப் பல்லாயிரம் திருத்தோள்கள் உண்டாயிருக்க பாவியனைத் தழுவாதே உபேக்ஷிக்கிறபடி என்னே! என்று நைகின்றாள்.
பொற்சுடர்க்குன்றன்ன பூந்தண்முடியற்கு – ஒளியையுடைய பொன்மலைபோலேயாய் ஸ்ப்ருஹணீயமான திருவபிஷேகத்தை யுடையவன். * ஆதிராஜ்யமதிகம் புவநாநாம் ஈச தேபிசுநயந் கில மௌலி * என்கிறபடியே உலகங்களுக்கெல்லாம் ஒர தனி நாயகனாயிருக்கின்ற தன்மைக்கு ஸூசகமாகத் திருவபிஷேகமணிந்திருந்து என்னொருத்தியை உபேக்ஷித்திருத்தல் தகுதியோ! என்கிறா ளென் மகள்.
நற்பலதாமரை நாண்மலர்க்கையற்கு – நல், பல என்பவை கைக்கு விசேஷணம் நிலக்ஷணமாயும் பலவாயும் தாமரை மலர்போன்றனவாயுமிருக்கிற திருக்கைகளுடையவன். * பறவையேறு பரம்புருடா! நீ யென்னைக் கைக்கொண்டபின் * என்கிறபடியே என்கையைப் பிடிப்பதற்காகவன்றோ அவன் இப்படி விலக்ஷணமான திருக்கைகள், படைத்தது! என்கிறாளென் மகள்.
என்விற்புருவக்கொடி – கொடியென்றது பெண்ணுக்கு வாசகம், கொடிபோன்றவன் என்கை வில்போன்ற புருவத்தையுடைய என் மகள் என்றதாயிற்று. ஆழ்வார் புருவம் நெறித்தவிடத்தே எம்பெருமான் காரியம் செய்யவேண்டும்படி யிருக்கை. அதாவது – ஆழ்வார்ஸம்பந்தமுடையார் பக்கலிலே எம்பெருமானுடைய விஷயீகாரம் செல்லும்படியாகை. * யத்ப்ரூபங்கா, ப்ரமாணம் * என்னுமாபோலே.
English Translation
My tender daughter with bow-like eyebrows has lost her body, -to the Lord of Kalpa-tree-like arms, who wears a beautiful crown of radiant gold; his hands are like freshly blossomed lotuses.
