(3477)

(3477)

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்,

மெய்பொய் யிளமை முதுமைபுதுமை பழமையுமாய்,

செய்யதிண் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

பெய்தகாவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.

பதவுரை

கைதவம் செம்மை

கோணலும் நேர்மையுமாய்
கருமை வெளுமையும் ஆய்

கறுப்பும் வெளுப்புமாய்
மெய் பொய்

மெய்யும் பொய்யுமாய்
இளமை முதுமை

யௌவனமும் கிழத்தனமுமாய்
புதுமை பழமையும் ஆய்

நவீநத்வமும் ஜீர்ணத்தவமுமாய்க்கொண்டு
செய்த திண் மதின் சூழ்

வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட திடமான மதிளாலே சூழப்பட்ட
திருவிண்ணகர்

திருவிண்ணகரிலே
சேர்ந்த பிரான்

வர்த்திக்கிற ஸர்வேச்வரன்
பெய்த காவு கண்டீர்

ஆக்கின சோலையன்றோ
பெரும் தேவு உடை மூ உலகு

பிரமன் முதலான உத்க்ருஷ்ட தேவதைகளை யுடைத்தான மூவுலகமும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கைதவம் செம்மை) சிறியார் பெரியார் என்கிற வாசின்றிக்கே அனைவர்க்கும் காவலோன் திருவிண்ணகரப்ப னென்கிறார். ‘பெருந்தேவுடை மூவுலகும் அவன் பெய்த காவு‘ என்றது ப்ரஹ்மா முதல் பிபீலிகையளவாகவுள்ள ஸமஸ்த ப்ராணிவர்க்கமும் அவனுடைய ரக்ஷ்யகோடி என்கை. கைதவமாவது வக்ரத்வம். செம்மையாவது ருஜுவாயிருத்தல். சிலரிடத்தில் கோணல் தவிர வேறுகிடையாது, சிலரிடத்தில் செம்மை தவிர வேறுகிடையாது, இவை யிரண்டும் அவனிட்ட வழக்கு. கைதவமும் செம்மையுமாகிற இரண்டும் எம்பெருமானிடத்திலேயே உண்டு என்றும் கொள்ளலாம். கண்ணன் அயல் வீட்டிலே புகுந்து வெண்ணெய்த்தாழியிலே கையிட்டவாறே •••    அம்மா! ஒரு கன்றுகுட்டி சிதறி ஓடிப்போயிற்று, அது இங்கே இருக்கிறதோ வென்று தேடுவதற்காகக் கையிட்டேன்“ என்றுரைப்பது போன்றவை கைதவம். பஞ்சவடியிலே சூர்பணகைவந்து நீர் ஆர்? ராக்ஷஸபூயிஷ்டமான இந்த இடத்திற்கு நீர் வந்த்தேன்? என்றபோது   ••••  (இராமன் செம்மையான புத்தியை யுடையவனாதாலால் எல்லாம் உள்ளபடியே உரைக்கத் தொடங்கினான்) என்னும்படியாக அமைந்தது செம்மை.

கருமை வெளுமையுமாய் – கண்ணனாய்ப்பிறந்து கரியகோலத் திருவுருவமாய்க் காட்சித் தருவன், நம்பிமூத்தபிரானாய்ப்பிறந்து “முன்னம்பெற்ற வளைவண்ண நம்மாமேனி“ என்னும்படி வெளுத்த திருக்கோலமாய் ஸேவை ஸாதிப்பன். இங்கே “முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன் மொடு மொடு விரைந்தோடப் பின்னைத் தொடர்ந்த்தோர் கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவது“ என்ற பெரியாழ்வார் திருமொழியை நினைப்பது.

மெய் பொய் – ஸத்யேந லோகாந் ஜயதி. * என்னும்படியாக ஸத்யம் வீறுபெறுதற்கு ஒரு அவதாரமும் “பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை“ “பொய்யாவுன்னைப்புறம் பல பேசுவ புத்தகத்துக்குள கேட்டேன்“ என்னும்படி அஸத்யம் வீறுபெறுதற்கு ஒரு அவதாரமும். * பொய்யர்க்கே பொய்யனாகும் – மெய்யர்க்கே மெய்யனாகும் * என்றதுமுன்டே.

இளமை முதுமை – “பேதைக்குழவி“ என்னும்படான இளம்பிராயமாயிருக்கச் செய்தேயும் “எந்தை தந்தைதந்த தந்தைதந்தை தந்தைதந்தைக்கும் முந்தை“ என்னும்படியாக புராண புருஷத்வத்திலும் குறையில்லை.

புதுமை பழமையும் – மிகப்பழைய அநுபவமாயிருக்கச்செய்தேயும் “எப்பொழுதும் நாள் திங்களாண்டூழியூழிதோறும் அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே“ என்னும் படியாக அப்போதப்போது புதுமைக்கும் குறையில்லாதிருக்குமே.

English Translation

The doer is the colours fair and red, black and white, truth and falsehood, youth and age, the new and the old. The Lord is in Tiru-vinnagar, fortified by walls.  See, he laid out this garden-world and all the good in it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top