(3462)
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்புநா னதஞ்சுவன்,
மன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் னினியது கொண்டு செய்வதென்,
என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ!
பதவுரை
| மின் உடை இலங்கை |
– |
அரசனையுடைத்தா யிருந்த லங்காபுரியினுடைய |
| அரண் |
– |
கோட்டைகளையெல்லாம் |
| காய்ந்த |
– |
சீறியழித்த |
| மாயவனே |
– |
ஆச்சரியசேஷ்டிதங்களை யுடையவனே |
| நம்பி |
– |
ஸகலருணபரிபூரணனே! |
| நின் அருள் சூடுவார் |
– |
உனது கிருபையை அநுபவிப்பவர்களான |
| மின் இடை மடவார்கள் முன்பு |
– |
மின்னற்கொடிபோன்ற இடையை யுடையவர்களான மாதர்களின் முன்னிலையில் |
| நான் அது அஞ்சுவன் |
– |
நான அதைப்பற்றி அஞ்சாநின்றேன், (அவர்கள் உன்னை உபேக்ஷிக்க நேருமென்பதுபற்றி அஞ்சுகின்றே னென்கை) |
| உன்னுடையகண்டாயம் நான் அறிவன் |
– |
உன்னுடைய க்ருத்ரிம்மெல்லாம் நானறிவேன் |
| இனி அது கொண்டு செய்வது என் |
– |
உனக்கும் எனக்கும் ஸம் பந்தமற்றவின்பு உன்னுடையக்ருத்ரிமத்தால் உனக்கு ஸாத்யமானது என்ன இருக்கிறது? |
| என்னுடைய பந்தும் கழலும் தந்து |
– |
எனது பந்தையும் அம்மானையையும் தீருப்பிக் கொடுத்துவிட்டு |
| போகு |
– |
உனக்கு விருப்பமான விடத்தேபோய்ச்சேர் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மின்னிடைமடவார்கள்) இப் பாசுரத்தில் “என்னுடைய பந்துங்கழலும் தந்துபோகு நம்பீ!“ என்றிருக்கையாலே பந்தும் கழலுமாகிற சில லீலோபகரணங்கள் எம்பெருமான் கையில் இருப்பதாகவும் அவற்றைப் பராங்குச நாயகி அபேக்ஷிப்பதாகவும் தெரிகிறது. பந்து கழல்கள் எம்பெருமான் கையில் இருக்கக் காரணமென்னென்னில், இதற்கு முன்னே இவளும் தானுமாக லீலைகள் செய்துகொண்டிருந்தார்கள். அப்படியிருக்கையில் திடீரென்று பிரிந்து போனான், போனவன் சிறிதுகாலம் கழித்து மீண்டு வந்துநின்றான். அப்போது நாயகிக்கு ப்ரணயரோஷம் தலையெடுத்திருந்ததனால் பேசாதே கிடந்தாள். எப்படியாவது இவளைப் பேச்சு செய்யவேணுமென்று கருதிய அவன் பல விலாஸ சேஷ்டிதங்கள் செய்து பார்த்தும் ஒன்றும் அவற்றிலேயே அளவுகடந்த அபிநிவேசம் வாட்டினான், பந்தே! நாயகிதான் பேசாவிட்டாலும் நீயாவது என்னோடு பேசுவாயன்றோ, கழலே! நாயகியின் கழல் எனக்குக் கிடைக்காவிட்டாலும் நீயாவது கிடைத்தாயன்றோ? என்றிப்படிப் பலவுஞ் சொல்லித் தன்னுடைய வியாமோஹாதிசயத்தை வெளிக்காட்டத் தொடங்கினான், அப்போது நாயகி பேசாதிருக்க முடியாமல் பேசத் தொடங்கி இங்ஙனே கூறுகின்றாளென்க.
பராங்குச நாயகியை நோக்கி “மின்னல்போலே இதொரு நுண்ணிய இடையழகு இருந்தபடி என்!“ என்று வருணித்துப் பேசினாள் பெருமான், இதுகாறும் நம்மை மதியாதே இதர ஸ்த்ரீகளுடன் கலந்து போந்தவிவர் இப்போது இங்கே வந்து நம்மை வருணிப்பது நன்றாயிருக்கிறது! என்று சீறி, மின்னிடை மடவார் நானல்லேன், நின்னருள் சூடும் மின்னிடை மடவார் வேறேயுண்டு என்கிறாள்.
முன்பு நான் அதஞ்சுவன் – நீ இங்கே வந்து செய்கின்ற பிரணய விலாஸ சேஷ்டிதங்கள் உன்னுடைய மின்னிடை மடவார்கட்குத் தெரிந்தால் அவர்கள் உன்னை மாத்திரம் தண்டியாதே என்னையும் சேர்த்துத் தண்டிப்பர்களே யென்று அஞ்சுகின்ற னென்றவாறு. மற்றும் பலவாறு கருத்துக்கூறலாம்.
முன்பு நான் அதஞ்சுவன் – நீ இங்கேவந்து செய்கின்ற பிரணய விலாஸ சேஷ்டிதங்கள் உன்னுடைய மின்னிடை மடவார்கட்குத் தெரிந்தால் அவர்கள் உன்னைமாத்திரம் தண்டியாதே என்னையும் சேர்த்துத் தண்டிப்பர்களே யென்று அஞ்சுகின்ற னென்றவாறு. மற்றும் பலவாறு கருத்துக்கூறலாம்.
மன்னுடை யிலங்கை அரண்காய்ந்த மாயவனே! – இங்கு ‘மாயவனே!‘ என்பது உயிரான விளி. * உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்துப் பெண்ணாக்கையாப்புண்டு தாமுற்ற பேது * என்று பெண்பிறந்தார் சொல்லும்படி ஸீதாபிராட்டிக்காக நீ செய்த செயலும் – இப்படி ஒரு செயல்செய்து பெண்களுக்குக் காரியம் செய்பவன்போலு ப்ரஸித்தி ஸம்பாதித்துப் பெண்களை வலையிலகப்படுத்திக்கொண்டு துடிக்க விடுவதற்காகச் செய்த செயலே யாதலால் அதுவும் மாயமே யென்றவாறு. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி – “ஒரு துறையிலே ஒரு மெய் பரிமாறாவிடில் நமக்கு மேலுள்ளதெல்லாம் ஒரு தொகையில் அகப்படாது என்று செய்தாயத்தனையன்றோ, அபலைகளை அகப்படுத்திக் கொள்ள இட்டவழியன்றோ.“
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவேன் – சுண்டாயமாவது ஸ்வார்த்த பரத்வம். நீடிசய்கிற காரியமெல்லாம் உன்னுடைய க்ருத்ரிமமான எண்ணங்களுக்கு இணங்கியவையே யல்லது ருஜுவான எண்ணத்தோடு நீ ஒரு காரியமும் செய்பவனல்லை யென்பதை நான் அறிவேன் என்றபடி. நான் அறிந்தாலென்ன? அறியாவிடில் என்ன? இனி உனக்கும் எனக்கும் ஏதேனுமொரு தொடர்பு வைத்துக்கொள்வதாக இருந்தாலன்றோ இந்த விசாரம் – என்னுங்கருத்துத் தோன்ற இனி அது கொண்டு செய்வதென்? என்கிறாள்.
ஆகில் நான் போகிறேனென்று பந்துகழல்களோடு போகப்புறப்பட்டான், போனால் போகிறானென்று இருக்கவல்லளோ இவள்? * ஆகிலும் கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே * என்கிறவளாகையாலே விடமாட்டாதே மீண்டும் வார்த்தைக்கு இடம் வைக்கிறாள் என்னுடைய பந்துங்கழலும் தந்து போகுநம்பீ என்று. – இவை உன்னுடையவை எப்படி? என்னுடையவையே யென்று அவன் பிணக்குச்செய்ய இடம் தந்தபடி.
English Translation
O Lord who destroyed the fortress of Lanka! Thin-waisted damsels will worship your grace. I fear what may follow. I know your tricks, what can you do with them now? Sire, return my bat and ball and leave!
