(3338)
விளம்பும் ஆறு சமய மும்அ வை யாகியும் மற்றும் தன்பால்,
அளந்து காண்டற் கரிய னாகிய ஆதிப்பி ரானமரும்,
வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனை,
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.
பதவுரை
|
விளம்பும் |
– |
கண்டபடி சொல்லுவது தவிரப் பொருட்பொருத்தம் சிறிதுமில்லாதவைகளான |
|
ஆறு சமயமும் |
– |
ஆறுவகைப்பட்ட பாஹ்ய மதங்களும் |
|
அவை ஆகிய |
– |
அந்த பாஹ்யமதங்கட்குப் பரியாயமான |
|
மற்றும் |
– |
குத்ருஷ்டி மதங்களும் |
|
தன் பால் |
– |
தன் விஷயத்திலே |
|
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய |
– |
எல்லைகாணவொண்ணாதனாயிருக்கிற |
|
ஆதி பிரான் |
– |
ஸகலஜகத காரணபூதனான ஸர்வேச்வரன் |
|
அழகும் |
– |
நித்யவாஸம் பண்ணுமிடமாய் |
|
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய |
– |
வளம்மிக்க குளிர்ந்த நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான |
|
திருகுருகூர் அதனை |
– |
திருநகரியை |
|
(நீங்கள்) |
||
|
உம்மை |
– |
உங்களை |
|
உய்யக் கொண்டு போகுறில் |
– |
உஜ்ஜிவிப்பித்துக்கொண்டு நடக்கவேண்டியிருந்தீர்களாகில் |
|
உளம் கொள் ஞானத்து |
– |
அந்தரங்கஜ்ஞானத்துக்குள்ளே |
|
வைம்மின் |
– |
வைத்துச் சிந்தனை செய்யுங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வேதபாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் பண்ணுகிற துஸ்தர்க்கங்களால் அழிக்கவொண்ணாத ஐச்வர்யத்தையுடையனான எம்பெருமானெழுந்தருளியிருக்கிற திருநகரியை ஆச்ரயியுங்கோள் பிழைக்கவேண்டியிருந்தீர்களாகில் என்கிறார்.
வேதம் முதலிய சாஸ்த்ரங்களை ப்ரமணமாக இசையாதவர்கள் வேத பரஹ்யர்கள் எனப்படுவர்; அவற்றை ப்ரமாணமாக இசைந்துவைத்தும் அவற்றுக்குத் தவறான அர்த்தங்களைப்; பண்ணுமவர்கள் (அதாவது) எம்பெருமானொருவன் தவிர மற்ற தத்துவமொன்றுமேயில்லையென்றும், அவனுக்குத் குணமில்லை, நிக்ரஹமில்லை யென்றும் சொல்லுமவர்கள் குத்ருஷ்டிகளெனப்படுவார்; இவ்விருவகுப்பினரையும்பற்றிக் கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் ஒரு ச்லோக மருளிச்செய்கிறார்; அதாவது-*…- பாஹ்யா: குத்ருஷ்டய இதித்விதயேப்பாரம் கோரம் தமஸ் ஸமுபயாந்தி நஹீக்ஷஸே தாந், ஜக்தஸய காநநம்ருகைர் ம்ருகத்ருஷ்ணிகேப்ஸோ: காஸாரஸத்வநிஹதஸ்ய ச கோ விசேஷ:?* என்பதாம். இதன் பகவத் கடாக்ஷத்திற்கு இலக்காகமாட்டாமல் நசித்துப்போவர்கள். வேதத்தை அடியோடே ப்ரமாணமாக அங்கீகரியாதே துர்ஷிக்கின்ற பாஹ்யர்கள் நசித்துப்போவது யுக்தம்; அப்படியல்லாமல் வேதத்தை ப்ரமாணமாக அங்கீகரித்து வைதிகர்களென்று பேர்பெற்றிருக்கின்றவர்களும் நசித்துப்போவர்களென்னலாமோ என்ன; இருவகுப்பினரும் துல்ய யோகக்ஷேமர்களேயென்பது ஒரு த்ருஷ்டாந்த முகத்தாலே மூதலிக்கப்படுகிறது; விடாய்மிகுத்துத் தண்ணீரைத் தேடியோட இரண்டு ம்ருகங்கள் புறப்பட்டன; அவற்றில் ஒரு ம்ருகமானது தடாகத்தில் புகாதே கானலைக்கண்டு தண்ணீர்ப்பெருக்காக மயங்கி ஓடிக் கொண்டேயிருக்கையில் வழியிடையிலே நேர்பட்ட புலி முதலிய கொடிய விலங்குகளினால் அடித்துத் தின்னப்பட்டதாயிற்று. இது இப்படியாக, மற்றொரு மிருகமானது விடாய்த்தீரத் தடாகத்திலேயே சென்று சேர்ந்தது; ஆனால் அடைவே இழியவேண்டிய துறையிலே யிழியாமல் துறைதப்பியிழியவே அங்குக் கிடந்த வொரு கொடிய விலங்குகளினால் அடித்துத் தின்னப் பட்டதாயிற்று. இது இப்படியாக, மற்றொரு மிருகமானது விடாய்தீரத் தடாகத்திலேயே சென்று சேர்ந்தது; ஆனால் அடைவே இழியவேண்டிய துறையிலே யிழியாமல் துறைதப்பியிழியவே அங்குக் கிடந்த வொரு கொடிய ஜலஜந்துவாலே அது பகூஷிக்கப்பட்டொழிந்தது. ஆக இரண்டு மிருகங்களும் தடாகப்ரவேச-அப்ரவேசங்களாலே சிறிது வாசி பெற்றிருந்தாலும் விநாசத்திலே வாசியற்றவர்களேயாவர். என்றதாயிற்று. கானலிலே மயங்கியொழிந்த ம்ருகத்தின் ஸ்தானத்தில் பாஹ்யர்கள்; தடாகத்திலே யிழந்து துறைதப்பியொழிந்த ம்ருகத்தின் ஸ்தானத்திலே குத்ருஷ்டிகள் என்றுணர்க.
விளம்பும் ஆறுசமயமும் = சாக்ய, உலுர்க்ய, அக்ஷபாத, க்ஷபண. கபில, பதஞ்சலி மதங்கள் எனப்படுகிற ஆறும் பாஹ்யஸமயங்களாம்; சாக்யர்-பௌத்தர்; உலுர்க்யர்-சார்வாகர்; அக்ஷபாதரென்று கௌதமரைச் சொல்லி நையாயிகவைசேகூஷிகர்களை நினைக்கிறது. க்ஷபணர்-ஜைநர்.
அவையாகிய மற்றும்ஸ்ரீமற்றும் அவற்றோடொத்த குத்ருஷ்டிகளும் என்றபடி. “அவையாகியும்” என்பது பன்னீராயிரப்படி யுரைக்.கு மாத்திரம் பாடம்.
மற்றும் என்பதற்கே குத்ருஷ்டிவர்க்கமெனப் பொருள்கொண்டு, அவையாகியும் என்பதற்கு ‘ஸபையாகத் திரண்டாலும்’ என்று பொருள் கூறினர் பன்னீராயிரவுரைகாரர். அவை-ஸபை; பாஹ்யர்களும் ருத்ருஷ்டிகளும் பெருந்திரளாகக் கூடினாலும் பரிச்சோதித்து அறிய முடியாதவன் எம்பெருமான் என்றபடி.
ஆறுசமயங்களுக்கு விளம்பும் என்று அடைமொழி கொடுத்தது-அர்த்தமில்லாத வெறும். சொற்களையே பிதற்றுகிறவர்களென்று காட்டினபடி. ஆக, பாஹ்யர்களாலும் குத்ருஷ்டிகளாலும் சலிப்பிக்கவொண்ணாது ஸ்வரூபரூபகுண விபூதிகளையுடைய ஸர்வேச்வரன் எழுந்தருளி யிருக்குமிடமாய், வளம்மிக்க நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான திருநகரியை, உளங்கொள் ஞானத்து வைம்மின்-மாநஸஜ்ஞானத்துக்கு விஷயமாக்குங்கள் என்றபடி. இது யாரைநோக்கி யுரைக்கிற தென்னில்; உம்மில் உய்யக்கொண்டு போகுறில்= உஜ்விக்க விருப்பமுடையீராகில்.
போக + உறில், போகுறில்; தொகுத்தல்.
English Translation
The six expounded doctrines and those like them cannot fathom Him; thus he sits, as Adipiran in kurugur surrounded by beautiful fields. If you seek liberation, bear him in your heart
