(3226)

(3226)

துன்பமும் இன்பமு மாகிய செய்வினை யாயுல கங்களுமாய்,

இன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய்,

மன்பல் லுயிர்களு மாகிப் பலபல மாய மயக்குகளால்,

இன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற் றேதுமல் லலிலனே.

 

பதவுரை

துன்பமும் இன்பமும் ஆகிய

துக்கத்திற்கும் சுகத்திற்கும் காரணமாகக் கூடிய

செய் வினை ஆய்

புண்ய பாபரூப கருமங்களுக்கு நிர்வாஹனாய்

இனிய நல்வான் சுவர்க்கங்களும் ஆய்

மிகவும் நன்றாய்ச் சிறந்த ஸ்வர்க்க ப்ரதேசங்களுக்கும் நிர்வாஹகனாய்

மன் பல் உயிர்களும் ஆகி

நித்யரான வல பிராணிகளுக்கும் நிர்வாஹகனாய்

பல பல மாயம் மயக்குக்களால்

பலவகைப்பட்ட ப்ரக்ருதி விகாரரூபமான மோஹ விகாரங்களாலே

உலகங்களும் ஆய்

உலகங்களுக்கும் நிர்வாஹகனாய்

இன்பம் இல் வெம் நரக ஆகி

இன்பமற்றகொடிய நரகலோகத்திற்கும் நிர்வாஹகனாய்

இன்பு உறும் இ விளையாட்டு உடையானை

ரஸாவஹமான விளையாடல்களை யுடையவனான எம்பெருமானை

பெற்று

அநுபவிக்கப்பெற்றதனால்

ஏதும் அல்லல் இலன்

சிறிதும் துக்கமுடையே னல்லலேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  புண்யபாய ரூபகருமங்களுக்கும், அவற்றைச் சம்பாதிப்பதற்குரிய இடமான லோகங்களுக்கும், அவற்றின் பலன்களை யனுபவிக்குமிடான லோகங்களுக்கும், அப்பலன்களை அனுபவிக்குமவர்களான ஆன்மாக்களுக்கும் நியாமகனாய் லீலாரஹமநுபவிக்கின்ற எம்பெருமானை யடையப் பெற்றதனால் ஒருவகையான அல்லலும் தமக்கில்லை யென்கிறார்.

“துன்பமுமின்பமுமாகிய செய்வினை” என்றது- துன்பங்களுக்குக் காரணமாயும் இன்பங்களுக்குக் காரணமாயுமுள்ள செய்வினை என்றபடி. து: க்க ஹேதுவான பாபங்களையும், ஸுக ஹேதுவான புண்யங்களயும் சொன்னவாறு. புண்யபாபங்கள் எம்பெருமானிட்டவழக்கு என்றராயிற்று. “யத் த்வத்ப்ரியம் தததிஹ புண்யம் அப’ண்யமந்யத்” (அநுமாநுஷஸபுதவம்) என்றார் கூரத்தாழ்வான்.

உலகங்களுமாய்=புண்யபாவங்களை ஆர்ஜிக்குமிடங்களும் எம்பெருமானிட்ட வழக்கு என்றபடி.

பாபங்களின் பலன்களை யநுபவிக்குமிடமான நரகமும். புண்யங்களின் பலன்களை யனுபவிப்பகுமிடமான ஸ்வர்க்கமும் முதலிய லோகங்களும் எம்பெருமானிட்ட வழக்கு என்கிறது இரண்டாமடி. வான்-சிறந்த என்படி. நரகு – வடசொற்சிதைவு.

மன்பல்லுயிர்களுமாகி=புண்யபாப ரூபகருமங்களைச் செய்பவர்களும், பிறகு அவற்றின் பலன்களை யனுபவிப்பவர்களுமான உயிர்களும் அவனிட்ட வழக்கு என்கை. மன் என்றது ஆத்மாக்களின் நித்யத்வத்தைச் சொன்னபடி. பல் என்றது அவர்களின் எண்ணிறந்தமையைச் சொன்னபடி.

பலபலமாயமயக்குக்களால் இன்புறுமிவ்விளையாட்டுடையான்= “வணங்குந்துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால் பிணங்குஞ்சமயம் பலபலவாக்கி, அவையவை தோறு அணங்கும் பலபலவாக்கி நின்மூர்திபரப்பிவைத்தாய்” (திருவிருத்தம்) என்கிறபடியே பலவகைப்பட்ட உபாயங்களயும் வேறு வேறு மதங்களையும் நானாவகைத் தெய்வங்களையுமுண்டாக்கி வைத்து இங்ஙனே லீலாரஸங் கொண்டாடுகின்ற எம்பெருமானுடைய லீலைகளையனுபவிக்கப் பெற்றதனால் ஒரிரு கிலேசமுமுடையேனல்லேன் என்றாராயிற்று.

“இன்புறு மிவ்விளையாட்டுடையான்” என்றவிடத்து “லோகவத் து லீலா கைவல்யம்” என்ற ப்ரஹ்மஸூத்ரம் ஸ்மரிக்கத்தக்கது.

 

English Translation

Through his many tricks of Maya he made the Karmas, -of pleasure and pain, -the worlds and the countless souls, the lowely Hell and the sweet Heaven.  All this in his cosmic Lila-play, so I end despair and praise him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top