(3134)

(3134)

கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்,

எல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய்,

பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா,

சொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே.

 

பதவுரை

கொல்லா

கொல்லுகைக்குக் கருவியல்லாமல்

பா

குதிரையை நடத்துவதான

கோல்

சாட்டையே கருவியாக

கொலை செய்து

(எதிரிகளை) முடித்து

பாரதம் போர்

பாரத யுத்தத்தில்

எல்லார் சேனையும்

(பூமிக்குச் சுமையாயிருந்த) எல்லாப் படைகளையும்

இரு நிலத்து

இப்பெரிய பூமியில்

அவித்த

தொலைத்த

எந்தாய்

ஸ்வாமியே!

பொல்லா

துன்பங்களுக்குக் காரணமான

ஆக்கையின்

சரீரத்தினுடைய

புணர்வினை

சம்பந்தத்தை

அறுக்கல் அரு

அறுக்க எண்ணினாலும் அது அறுபடாது:

யான்

(இதிலே அகப்பட்ட) நான்

உன்னை

(ஸர்வசக்தனான) உன்னை

சார்வது

கிட்டுவதாகிய

ஓர் சூழ்ச்சி

ஒரு பாயத்தை

சொல்லாய்

சொல்லியருள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ஸ்ரீவாமன மூர்த்தியான காலத்தில் தப்பினவர்களையும் விஷயீகரீப்பதற்காக ஸ்ரீக்ருஷ்ணனாய் வந்து அவதரித்த காலத்திலும் தப்பினேனென்கிறார்.

பாரதப்போரில் பஞ்சபாண்டவர்களே எதிரிகளை முடித்தார்கள் என்று அவிவேசிகள் நினைப்பார்கள்; அவர்களை வியாஜ மாத்திரமாக வைத்துக்கொண்டு கண்ணபிரானே பூமியின் பாரங்களைத் தொலைத்தருளினன் என்பது உண்மை; அப்போது கண்ணபிரானது திருக்கையில் ஒரு கோல் இருந்தது; அதுதான் துரியோதனாதியரைக் கொலை செய்யக் கருவியாயிருந்தது, அதனை ஆழ்வார் இங்குக் “கொல்லாமாக் கோல்” என்கிறார். கொல்லுகைக்குக் கருவியாக அல்லாமல் குதிரையை நடத்தக் கடவதான முட்கோலாலே கொலை செய்ததாக அருளிச் செய்கின்றார். இங்கு உணர வேண்டிய விஷயமாவது:- கண்ணபிரான் பள்ளிகொண்டிருக்கும்போது துரியோதனனும் அர்ஜுநனுமாகக் கடைத்துணை வேண்டிவந்தார்கள். துரியோதனன்  தான் மஹாப்ரபுவாகையாலே திருமுடிப் பக்கத்திலே யிருந்தான். அர்ஜுநன் திருவடி வாரத்திலேயிருந்தான். கண்ணபிரான் பள்ளியுணர்ந்து எழுந்தவுடனே திருவடி வாரத்தில் அர்ஜுநனை முந்துறு முன்னம் கடாக்ஷிக்கும்படியாயிற்று. பிறகு துரியோதனனையும் பார்த்தான். இருவரையும் குசலப்ரச்நம் பண்ணிவிட்டு ‘நீங்கள் இங்கு வந்த காரியம் என்?, என்று கேட்கையில், துரியோதனன் ‘நான் முன்னே வந்தேன்; என் காரியமே முக்கியமாகச் செய்யவேணும்’ என்ன; அது கேட்ட கண்ணபிரான் ‘நீ முன்னம் வந்திருக்கலாம்; ஆனாலும் நான் முன்னம் பார்த்தது அர்ஜுனனையே; அது கிடக்கட்டும்; உங்களுடைய அபேக்ஷிதம் இன்னதென்று சொல்லிக் கொள்ளுங்கள்’ என்ன; ‘இப்போது நடக்கப்போகிற யுத்தத்திற்குத் துணை செய்ய வேண்டும்’ என்று இருவரும் அபேக்ஷிக்க; முந்துறமுன்னம் இவ்விடம் வந்தானென்கிற காரணம் பற்றித் துரியோதனனுக்கும், முந்துறமுன்னம் காணப்பட்டானென்கிற காரணம் பற்றி அர்ஜுநனுக்கும் ஆக இருவர்க்கும் நான் உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கின்றேனென்று தெரிவித்து, “நவகோடி நாராயணர்கள் நல்ல வல்லமையுடன் போர் புரியக்கூடியவர்கள்; நான் ஒரு காரியமும் செய்ய மாட்டேன்” என்று கண்ணபிரான் சொல்ல, ‘ஒரு காரியமும் செய்யமாட்டேனென்கிற கண்ணனைக் காட்டிலும், மிக வல்லவர்களான நாராயணர்களே நமக்கு இருக்கத் தகும்’ என்றெண்ணிய துரியோதனன் அவர்களை வேண்டினான்; ஒரு கார்யமுஞ் செய்யாவிடினும் கண்ணபிரானுடைய பக்ஷபாதமே நமக்குப் பாங்கு என்றெண்ணிய அர்ஜுநன் கண்ணனை வேண்டினன். பிறகு பீஷ்மர் முதலானார் துரியோதனனது மூடத்தனத்திற்கு மிகவும் மனம் நொந்து ‘மூர்க்கா! இப்படியுஞ் செய்வாயோ? இனி அனுதபித்துப் பயனில்லை; கண்ணனிடம் கடுக ஓடிச்சென்று நீ ஆயுதமெடுத்துக் காரியம் செய்யாமல் வெறுமனே யிருக்கவேணுமென்று உறுதிபெற்றுக் கொள்” என்று சொல்லியனுப்ப, அவனும் ஓடி வந்து அங்ஙனமே வேண்டி உறுதிபெற்றுக்கொண்டானாதலால் கண்ணபிரானது கையிலிருந்த கோல் எதிரிகளின் கொலைக்கு உபகரணமன்றியே குதிரையை நடத்துகிற கோலாகவே யிருந்ததென்று இங்கு ஆழ்வார் அருளிச் செய்தாராயிற்று.

எல்லாச் சேனையும் அவித்த = “சத்ரு ஸேனையோடு பாண்டவ ஸேனையோடு வாசியற பூபாரமான ஸமஸ்த ஸேநையையும் நசிப்பித்த” என்பது பன்னீராயிரப்படி ஈட்டு ஸ்ரீஸூக்தி:- “துர்வர்க்கமடையத் திரண்டதிறே உபய ஸேகையிலும். இங்கே நாலைந்து பேரும் அங்கே ஒன்றிரண்டு பேருமொழிய முடித்துப் போகட்டானாயிற்று.” (இங்கே நாலைந்து பேறென்றது தர்ம புத்திராதிகளை; அங்கே ஒன்றிரண்டு பேரென்றது அஸ்வத்தாம க்ருபாசார்ய க்ருதவர்மாக்களை.)

பொல்லாவாக்கையின் புணர்வினை அறுக்கம் அறா = ‘புணர்வினை’ என்றதை முழுச் சொல்லாகக் கொள்வதுண்டு. புணர்- வினை என்று இரண்டு சொல்லாகக் கொள்வதுமுண்டு. முழுச் சொல்லாகக்கொள்ளுமளவில், (புணர்வு இன் ஐ) என்று கொள்க. இன்- சாரியை; ஐ- இரண்டனுருபு. புணர்வை என்றபடி; சரீர  ஸம்பந்தத்தை என்றதாயிற்று. ‘அறுக்கலறா’ என்றதற்கிணங்கப் ‘புணர்வு’ என்று முதல் வேற்றுமையாகவேயிருக்கவுரியது. இரண்டாம் வேற்றுமையாகச்  சொன்னது வார்த்தைப்பாடு இனி, புணர்- வினை என்று பிரிக்குமளவில் ‘ஒன்றோடொன்று பிணைந்திருக்க பாபங்கள்’ என்றவாறு. சரீரத்திற்கு மூலமான பாபங்களைச் சொன்னபடி.

அறுக்கல் அறா = இராவணன் தலைபோலே முளையாநிற்கும்

யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சி சொல்லாய் = சிறையிலே கிடப்பாரைப்போலே ப்ரக்ருதியோடே பிணையுண்டிருக்கிற நான், ஒரு தேச விசேஷத்திலே நித்யஸூரிகள் அநுபவிக்கவிருக்கிற வுன்னைக் கிட்டி வாழ்வதற்குறுப்பான ஒரு உபாயமருளிச் செய்யவேணும். *அஹம் த்வா ஸர்வபாபேய்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுக: என்று சொல்லி ஈரக்கையாலே தடவியருள வேணுமென்கை.

 

English Translation

O Lord who steered the chariot in the battlefield.  Smiting death to the wicked in the Bharata war!  Pray tell me how I may join your feet, cutting as under my bodily connexions.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top