(3058)
பலபலவேயாபரணம் பேரும்பலபலவே,
பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்,
பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,
பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ.
பதவுரை
|
பாம்பு அணை மேலாற்கு |
– |
ஆதிசேஷனைப் பள்ளியாகக் கொண்டிருக்கும் பெருமானுக்கு |
|
பண்பு எண்ணில் |
– |
(என்னோடு கலவியாலுண்டான அழகை) நிரூபித்துப் பார்க்குமிடத்து, |
|
ஆபரணம் |
– |
திருவாபரணங்கள் |
|
பலபல |
– |
மிகப் பலவாயிருக்கும் |
|
சோதி வடிவு |
– |
ஒளியுருவான திருமேனி |
|
பல பல |
– |
மிகப் பலவாயிருக்கும் |
|
கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் |
– |
பார்த்தும் உண்டும் கேட்டும் ஸ்பர்சித்தும் மோந்தும் (உண்டாகிற) சுகங்களும் |
|
பல பல |
– |
மிகப்பலவாயிருக்கும்! |
|
ஞானமும் |
– |
ஞானங்களும் |
|
பல பல |
– |
மிக மிகவாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆழ்வார் தம்மோடே எம்பெருமான் கலக்கும்போது ஒரு வடிவோடே கலந்து த்ருப்தி பெற மாட்டாதே பலவடிவுகள் கொண்டு கலந்து அநுபவிக்கும் படியை அருளிச்செய்கிறார்.
பாம்பணை மேலாற்கு என்றது திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக் கொண்டாப்போலே என்னோடு பெருமானுக்கு என்றபடி. பண்பு எண்ணில் –அவனுடைய ஸ்வபாங்களை ஆராய்ந்து பார்த்தால், ஆபரணம் பலபல = “செங்கமலக்கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன்மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமுங் கிறியும் மங்கல வைம்படையுந் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்” என்கிறபடியே திருவாபரணங்கள் எண்ணிறந்தவை.
பேரும் பலபலவே ஸ்ரீ அவனுடைய திருக்குணங்களுக்கும், திருவவதாரங்களுக்கும் திவ்ய சேஷ்டிதங்களுக்கும், வாசகங்களான திருநாமங்களும் பலபலவாயிருக்கும். அநுபவிக்குங் காலத்தில் நாமக்ரஹணத்திற்கு இழிந்தவிடமெல்லாம் துறையாகும். சீலப்பேர்கள் வீரப்பேர்கள் என்று அநேகமாயிருக்குமே.
பலபலவே சோதிவடிவு=இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி;– “லௌபாரியைப் போலே அனேகம் வடிவு கொண்டாயிற்று இவரை யநுபவிக்கிறது; முக்தன் தன்னை யநுபவிக்கும்போது படுமாப்போல, தான் என்னையநுபவிக்கப் பலவடிவு கொள்ளா நின்றான்” என்பதாம்.
கண்டுண்டு கேட்டுற்று மோத்தின்பம் பலபல= கண்டின்பம், உண்டின்பம், கேட்டின்பம், உற்றின்பம், மோந்தின்பம் பலபல என்று அந்வயித்துக்கொள்க, கண்டுகளிக்கப் பெறுவதான ரூபமும், உண்டுகளிக்கப் பெறுவதான ரஸமும் கேட்டுகளிக்கப் பெறுவதான சப்தமும், தொட்டுக்களிக்கப் பெறுவதான ஸபா;சமும், மோந்நுகளிக்கப் பெறுவதான மணமும் பலபல என்றபடி. எம்பெருமான் நித்யாநந்தத்ருப்தனாயிருக்கச் செய்தேயும் ஆழ்வாரை யனுபவிக்குங் காலத்தில் அவனுடைய பஞ்சேந்திரியங்களும் திருப்திபெற்றவிதம் பலவகைப்பட்டது என்றவாறு.
ஞானமும் பலபலவே=நித்யஸர்வஜ்ஞனாயிருக்கச் செய்தேயும் ஆழ்வாரை யநுபவிக்குங் காலத்திலே புதிய புதிய பலவகை ஞானங்களைக் கொள்ளாநின்றானென்றபடி. “தாம் தம் பெருமையறியார்” என்றும் “தனக்கும் தன் தன்மையறிவாரியான்” என்னுஞ் சொல்லுகிறபடியே
எம்பெருமான் தன்னுடைய பெருமைகளைப் பற்றின உணர்வு இல்லாதவனாயிருந்து ஆழ்வாரோடு கலந்தபின அவற்றை நன்கு உணரப் பெற்றானாம் அதைச் சொல்கிறது என்று கொள்ளலாம்.
English Translation
My Lord reclines on a serpent, let me count his ways. His ornaments are many, his names are many, his lustrous forms are many, their sensations too are many, through seeing, eating, touching, hearing and smelling, he give me pleasure.
