(3013)

(3013)

ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு,

தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற,

வாழியவானமே, நீயும் மதுசூதன்,

பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே

 

பதவுரை

உலகுக்கு நீர்கொண்டு

உலகுக்கெல்லாம் ஆகும்படி நீரை முகந்து கொண்டு

ஊழி ஊழி தோறு

காலமுள்ளவளவும்

நீர்ஆய்

நீர்வடிவமாய்

நெகிழ்கின்ற

விழுகின்ற

வானமே

மேகமே !

நீயும்

நீயும்

தோழியரும் யாமும் போல்

(எமது) தோழிமார்களும் நாங்களும்போல

மதுசூதன் பாழிமையில் பட்டு

எம்பெருமானது பெருமிடுக்கிலே அகப்பட்டு

அவன் கண் பாசத்தால்

அவனிடத்து விருப்பத்தினால்

நைவாயே

அழிகின்றனையோ?

வாழிய

(இந்தத் துன்பம் தீர்த்து) வாழ்வாயாக.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீராய் இற்று விழுகின்ற மேகத்தைக்கண்டு, நீயும் என்னைப்போலே எம்பெருமானுடைய குணசேஷ்டிதம் முதலியவற்றில் அகப்பட்டு நோவுபடுகிறாய் போலுமென்று சோகித்துச் சொல்லுகிற பாசுரம் இது.  மேகம் நீர்சொரிவதைக் கண்ணீர்விட்டு அழுகிறபடியாக வெண்ணிச் சொல்லுகிறாள்.

“உலகுக்கு நீர்கொண்டு” என்பதற்குச் சிலர் பொருள் ப்ரமிப்பார்கள்–“உலகுக்கெல்லாம் உதவுகைக்காக நீரைக்கொண்டு என்று பொருள் எண்ணுவார்கள்; அந்தப்பொருள் பிரகரணத்திற்குச் சேராது; உலகமெல்லாம் வெள்ளமிடவேண்டும்படியான நீரைச்சொரிந்து கொண்டு’ என்றே பொருள் கொள்ளவேணும்  இங்ஙனமே பூருவாசார்யர்களெல்லாரும் வியாக்கி யானித்தருளினர். உலகுக்கு உதவுவதகற்காக நீரை  யெடுத்துக் கொண்டென்றால் இது மேகத்தின் இயற்கையாதலால் ஆழ்வார் அவ்வியற்கையைத் தாம் அறிந்துகொண்டாரென்று சொல்லிவிட்டால் “நீயும் மதுசூதன் பாழிமையிற்பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே” என்கிற வார்த்தைக்கு ப்ரஸக்தியே இல்லையாய்விடுமென்க.

தோழியரும் யாமும் போல் = தோழியும் தானும் உலகம் வெள்ளங் கோக்கும்படியாகக் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருக்குந்தன்மை இதனால் காட்டப்படும்.

வானமே! வாழிய=உலகுக்கு உதவி செய்வதற்கென்று ஏற்பட்டிருக்கிற நீ இத்துயர் நீங்கி வாழ்ந்திடுக வென்று மங்களாசாஸநம் பண்ணுகிறாள்.  வானமென்று இங்கு ஆகாசத்தைச் சொல்லுவதாகவும் ஒரு நிர்வாஹமுண்டு மிக நுண்ணிதான ஆகாசம் நீரை முகந்துகொண்டு சிதறியுருகி நீராய் விழுகின்றதென்று நினைத்துச் சொல்லுகிறாளென்று கொள்க.

மதுசூதன் பாழிமையிற்பட்டு=மது என்னு மசுரனைக் கொன்றவன் மதுசூதன்.  மதுவைச் சொன்னது அவனோடு கூடவேயிருந்த கைடபனையுஞ் சொன்னபடி.

 

English Translation

O Blessed clouds, bringing water to the world!  Age after age, like me and my sisters, you melt, were you too caught in the Lord Madhusudana’s vice and made to suffer the pangs of love?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top