(2780)-(2785)

………       …….          ……..    ஊரகத்துள்

அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை,

என்னை மனங் கவர்ந்த ஈசனை, – வானவர்தம்       (2780)

 

முன்னவனை மூழிக் களத்து விளக்கினை,

அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை,

நென்னலை யின்றினை நாளையை, – நீர்மலைமேல்       (2781)

 

மன்னும் மறைநான்கும் ஆனானை, புல்லாணித்

தென்னன் தமிழி வடமொழியை, நாங்கூரில்           (2782)

 

மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,

நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, – நான்வணங்கும் (2783)

 

கண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர்

மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,

கன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது

என்னிலைமை யெல்லாம் அறிவித் தால் எம்பெருமான்,

தன்னருளும் ஆகமும் தாரானேல், – தன்னைநான்         (2784)

 

மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்,

தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,

கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்

தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன்……..  ……    (2785)

 

பதவுரை

ஊரகத்துள் அன்னவனை

திருவூரகத்தில் விலக்ஷணனாய்

அட்ட புயகரத்து எம்மான் எற்றை

அட்டபுயகரதலத்திலுள்ள அஸ்மத் ஸ்வாமி சிகா மணியாய்

என்னை மனம் கவர்ந்த ஈசனை

எனது நெஞ்சைக் கொள்ளைகொண்ட தலைவனாய்

வானவர் தம் முன்னவனை

தேவாதிராஜனாய்

மூழிக்களந்து விளக்கினை

திருமூழிக்களத்தில் விளங்குபவனாய்

அன்னவனை

இப்படிப்பட்டவனென்று சொல்ல முடியாதவனாய்

ஆதனூர்

திருவாதனூரில்

ஆண்டு அளக்கும் ஐயனை

ஸகல காங்களுக்கும் நிர்வாஹகனான ஸ்வாமியாய்

நென்னலை இன்றினை நாளையை

நேற்று இன்று நாளை என்னும் முக்காலத்துக்கும் ப்ரவர்த்தகனாய்

நீர்மலை மேல் மன்னும்

திருநீர்மலையிலெழுந்தருளியிருக்கிற

மறை நான்கும் ஆனானை

சதுர்வேத ஸ்வரூபியாய்

புல்லாணி

திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற

தென்னன் தமிழை வடமொழியை

உபயவேத ப்ரதிபாதயனாய்

நாங்கூரில்

திருநாங்கூரில்

மணிமாடக்கோயில் மன்னு மணாளனை

மணிமாடக் கோயிலில் நித்ய வாஸம் பண்ணுகிற மணவாளப் பிள்ளையாய்

நல் நீர் தலைச் சங்கம் நாண்மதியை

நல்ல நீர்சூழ்ந்த தலைச்சங்க நாட்டிலுள்ள நாண் மதியப் பெருமாளாய்

நான் வணங்கும் கண்ணனை

நான் வணங்கத்தக்க கண்ணனாய்

கண்ணபுரத்தானை

திருக்கண்ணபுரத் துறைவானாய்

தென் நறையூர்மணி மாடக்கோயில் மன்னுமணுள்னை

திருநறையூர் மணிமாடமென்று ப்ரஸித்தமான ஸந்நிதியில் எழுந்தருளியிருக்கிற மணவாளனாய்

கல் நவில் தோள் காளையை

மலையென்று சொல்லத்தக்க தோள்களையுடைய யுவாவாயுள்ள ஸர்வேச்வரனை

ஆங்கு கண்டு கை தொழுது

அவ்வவ்விடங்களில் கண்டு ஸேவித்து

என் நிலைமை எல்லாம் அறிவித்தால்

எனது அவஸ்தைகளையெல்லாம் விண்ணப்பஞ்செய்து கொண்டால் (அதுகேட்டு)

எம்பெருமான்

அப்பெருமான்

தன் அருளும் ஆக மும் தாரான்ஏல்

தனது திருவருளையும் திருமார்பையும் எனக்குத் தக்க தருவானாகில்

தன்னை

அவ்வெம்பெருமானை

நான்

(அவனது செயல்களையெல்லாமறிந்த) நான்

மின் இடையார் சேரியிலும்

ஸ்த்ரீகள் இருக்கும் திரள்களிலும்

வேதியர்கள் வாழ்வு இடத்தும்

வைதிகர்கள் வாழுமிடங்களிலும்

தன் அடியார்முன்பும்

அவனது பக்தர்கள் முன்னிலையிலும்

தரணி முழுதும் ஆளும் கொல் நலிலும் வேல்வேந்தர் கூட்டத்தும்

பூ மண்டலம் முழுவதையும் ஆள்கின்றவராயும் கொடிய படைகளை யுடையவராயுமிருக்கிற அரசர்களுடைய ஸபைகளிலும்

நாடு அநத்து

மற்றுமு தேசமெங்கும்

தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன்

அவன் படிகளை யெல்லாம் பிரகாசப்படுத்தி விடுவேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஊரகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள உலகளந்த பெருமாள் ஸந்நிதி. இத்தலத்தில் திருமாள் உரகருபியாய் ஸேவை சாதிப்பதுபற்றி இத்திருப்பதிக்கு ஊரகம் என்று திருநாமமென்பர், உரகம் – பாம்பு வடசொல்.

அட்டபுயகரம் –இத்தலத் தெம்பெருமானுக்கு எட்டுத் திருக்கைகள் உள்ளது பற்றி அஷ்டபுஜன் என்று திருநாமமாய் அவன் எழுந்தருளியிருக்கின்ற கரம் – க்ருஹம் ஆதல்பற்றி அட்டபயக்ரமென வழங்கப்படும் அட்டபுயவகரம் என்பதன் மரூஉ வென்பாருமுளர்.

 

என்னை மனங்கவர்ந்த வீசனை வானவர்தம் முன்னவனை – வானவர்தம் முன்னவனென்று தேவாதிராஜனான பேரருளானப் பெருமாளைச் சொல்லுகிறதென்றும், “என்னை மணங்கவர்ந்த வீசனை“ என்கிற விசேஷணம் இவ்வர்த்தத்தை ஸ்திரப்படுத்துகின்றதென்றும் பெரியோர் கூறுவர். திருமங்கையாழ்வாருடைய மனத்தைக் பேரருளாளன் கவர்ந்தானென்னுமிடம் இவரது. பைவத்திலே காணத்தக்கது. கனவிலே காட்சிதந்து வேகவதியில் நிதியைக் காட்டித் துயர் தீர்த்த வரலாறு.

மூழிக்களம் – மலைகாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று, நம்மாழ்வாராலும் போற்றப்பெற்ற தலம் “மூழிக்களத்து வளத்தனை“ என்றும் பாடமுண்டாம், வளமானது ஸம்பத்து, ஸம்பத் ஸ்வரூபனை யென்றபடி – ஆதனூர் – ஆதன் ஊர் காமதேநுவுக்குப் பிரத்யக்ஷமான கலமாதல்பற்றி வந்த திருநாம மென்பர் ஆ-பசு.

ஆண்டு அளக்கும்ஐயனை –ஆண்டு வருஷம் இது காலத்துக்கெல்லாம் உபலக்ஷணம் ஸகல காலங்களையும் பரிச்சோதிக்க ஸ்வாமி என்றப. காலசக்ரநிர்வாஹகனென்கை. நென்னல் – நேற்றுக் கழிந்தநாள், இறந்த காலத்துக்கெல்லாம் உபலக்ஷணம். “ஆண்டளக்குமையன்“ என்றதை விவரிக்கின்றார் மூன்று விசேஷணங்களாலே, பூத வர்த்தமான பவிஷ்யத் காலங்களுக் குநிர்வாஹக்னென்றவாறு.

நீர்மலை – நீரானது அரண் போலச் சூழப்பெற்ற மலையானது பற்றித் திருநீர்மலை யெனப்படும். புல்லணை யென்பதன் மருஉ, ஸீதையைத் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லும் பொருட்டு ஸ்ரீராமபிரான் வாநரஸேனையுடனே புறப்பட்டுச்சென்று தென்கடற்கரையை யடைந்து கடல்கடக்க உபாயஞ் சொல்ல வேண்டுமென்று அக்கடலரசனான வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பத்தில் பிராயோபவேசமாகக் கிடந்த ஸ்தரமாதலால் புல்லனை யெனப்பட்டது. தர்ப்பசயா க்ஷேத்ரமெனவும் படும்.

தலைச்சங்க நாண்மதியை –சிறந்த சங்கத்தை யேந்திய நாண்மதியப் பெருமானுடைய தலமாதல்பற்றித் தலைச்சங்க நாண்மதியமென்று திவ்யதேசத்தின் திருநாமம்.

கன்னவில் தோள்களியை – கீழே “இதுவிளைத்த மன்னன்“ என்று தொடங்கி இவ்வளவும் எம்பெருமானுடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளைப் பற்றிப் பேசினாராயிற்று. கீழே இரண்டாம் வேற்றுமையாக வந்த அடைமொழிகளெல்லாம் இங்கு அந்வயித்து முடிந்தன. இப்படிப்பட்ட எம்பெருமானை ஆங்காங்குச் சென்று ஸேவித்து “ஸ்வாமிந்! இப்படிதானா என்னைக் கைவிடுவது? விரஹம்தின்றவுடம்பைப்பாரீர்“ என்று என் அவஸ்தையை விண்ணப்பஞ்செய்வேன், அதுகேட்டு திருவுள்ள மிரங்கித் திருமார்போடே என்னை அணைத்துக்கொள்ளாவிடில் மாதர்களும் வைதிகர்களும் பக்தர்களும் அரசர்களும் திரண்டுகிடக்குமிடங்கள் தோறும் புகுந்து அவனது ஸமாசாரங்களை யெல்லாம் பலரறிய விளம்பரப்படுத்துவேனென்றாயிற்று. ஆண்டாள் ஆய்ச்சிமார்போன்ற பெண்ணரசிகளும், பெரியாழ்வார் வ்யாஸர் பராசர்ர்போன்ற வைதிகர்களும், இளையபெருமாள் ப்ரஹ்லாதன்போன்ற பக்தர்களும், குலசேகரப் பெருமான் தொண்டைமான் சக்கரவர்த்தி போன்ற அரசர்களும் இவனுடைய பெருமேன்மைகளைச் சொல்லிக்கொண்டு ப்ரமித்துக் கிடப்பர்களே, அங்கங்கெல்லாம் நான் சென்று அவனைப்போன்ற நிர்க்குணன் இவ்வுலகில் எங்குமில்லை“ என்று பறையடித்து எல்லாரும் அவனைக் கைவிடும்படி பண்ணி விடுகிறேன் பாருங்களென்கிறார்.

“லோகமடங்கத் திரண்டவிடங்களிலே சென்று “ஸேச்வரம் ஜகத்து“ என்று ப்ரமித்திருக்கிறவர்களை “நிரீச்வரம் ஜகத்து“ என்றிருக்கும்படி பண்ணுகிறேன்“ என்ற வியாக்கியான ஸூக்தியுங் காண்க.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top