(2602)
தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,
பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப்
பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.
பதவுரை
|
தாம்பால் ஆப்புண்டாலும் |
– |
(அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டியடிக்கப் பெற்றாலும் |
|
அத்தழும்புதான் இளக |
– |
அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி |
|
பாம்பால் |
– |
காளியனாகிய பாம்பினால் |
|
ஆப்புண்டு |
– |
கட்டப்பட்டு |
|
பாடு உற்றாலும் |
– |
கஷ்டங்களையடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்) |
|
சோம்பாது |
– |
(ஜகத்ஸ்ருஷ்டியில்) சோம்பல்படாமல் |
|
இ பல் உருவை எல்லாம் |
– |
இவ்வுலகில் காணப்படுகிற பலபல பிராணிகளையெல்லாம். |
|
படர்வித்த |
– |
விஸ்தாரமாக வுண்டாக்கின |
|
வித்தா |
– |
ஆதிமூலமே! |
|
உன் தொல் உருவை ஆர் அறிவார் |
– |
உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ? |
|
சொல்லு |
– |
நீயே சொல்லு. |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (தாம்பாலாப்புண்டாலும்.) ஸம்ஸாரிகள் அவக்ஷியம் பண்ணினாலும் எம்பெருமான் திருவுள்ளம் வெறுக்கமாட்டான் என்றது கீழ்ப்பாட்டில்; அவ்வளவேயன்று; ஸம்ஸாரிகள் எம்பெருமானுக்கு பலவகையான துன்பங்களை உண்டுபண்ணினாலும் அப்போதும் அவன் தன் காரியத்தைத் தான் விடுவதில்லையென்கிற மஹா குணத்தைப் பேசுகிறாரிதில்.
ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தகாலத்து யசோதைப் பிராட்டியாகிற மாதாவானவள் “நீராமிது செய்தீரென்றோ நெடுங்கயிற்றால், ஊரார்களெல்லராருங் காணவுரலோடே தீரா வெகுளியனாய்ச் சிக்கன ஆர்த்தடிப்ப, ஆரா வயிற்றினோடாற்றாதான்” (சிறிய திருமடல்) என்றபடி. வெண்ணெய் களவுகண்ட காரணத்திற்காகக் கண்ணிநுண் சிறுத் தாம்பினால் உரலில் பிணைத்து அடித்துப் பகவானுடைய திருமேனியில் கஷ்டத்தை யுண்டுபண்ணினாள்; “தாம்பே கொண்டார்த்த தழும்பு” (முதல் திருவந்தாதி 22) என்றபடி அவள் தாம்பினால் கட்டினவிடம் காய்ப்புக் காய்த்துக் கிடந்ததென்றும் தெரிகிறது. இது அநுகூலர் அன்பின் மிகுதியால் கட்டின கட்டாகையாலே எம்பெருமானுக்கு ஸஹ்யம் என்று கொண்டாலும், யமுனையில் ஒரு துறையிலிருந்து கொண்டு விஷத்தைக் கக்கி அனைவர்க்கும் கொடுமை புரிந்த காளிய நாகத்தோடு பிணங்க நேர்ந்தபோது, அந்த நாகம் கண்ணபிரானைத் தனது வாலால் கட்டிற்றென்றும், எசோதை கட்டின தாம்பினாலுண்டான காய்ப்பு அற்பமென்னும்படி காளியன் வாலால் கட்டின காய்ப்பு வலிதாயிருந்த தென்றும் சொல்லப்படுகிறது. இப்படி அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசியற எல்லாரும் அவனைக் கட்டியடித்துத் துன்பப் படுத்துவதே இந்த பிராகிருத லோகத்தின் காரியமாக இருக்கின்றது. இருந்தாலும் எம்பெருமான் தன்னுடைய கிருஷியில் நின்றும் கைவாங்குவதில்லை. ‘நமக்குத் தன்பத்தையே உண்டு பண்ணுகிற இவ்வுலகை அடியோடு ஒழித்திடுவோம்’ என்று நிக்ரஹிக்க நினையாமல் “சென்று சென்றாகிலுங் கண்டு சன்மங் கழிப்பானெண்ணி ஒன்றியொன்றி யுலகம் படைத்தான்” (திருவாய்மொழி 3-9-10) என்றபடி என்றைக்காவது ஒருநாள் இவ்வுலகம் சீர்படக் கூடுமென்றே திருவுள்ளம்பற்றிச் சிறிதும் சோம்பலடையாமல் பிரஜைகளைப் படைக்கின்றானென்று இதனால் சொல்லிற்றாயிற்று.
இப்பாட்டின் கருத்தைக் கூரத்தாழ்வான திருக்குமாரரான ஸ்ரீபராசரபட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் உத்தரசதகத்தில்- *** = ஸார்வ! த்வத்கம் ஸகலசரிதம் ரங்கதாமந்! துராசாபாசேப்யஸ் ஸ்யாந்ந யதிஜகதாம் ஜாது மூர்க்கோத்தராணாம். நிஸ்தந்த்ராளோஸ் தவநியமதோ நர்த்துலிங்க ப்ரவாஹா ஸர்கஸ்தேமப்ர ப்ருதிஷா ஸதாஜாகரா ஜாகடீதி.” என்ற ச்லோகத்தால் அநுஸந்தித்தமை அறியத்தக்கது.
தாம்பாலாப்புண்டாலும் = நம்மாலே படைக்கப்படுகிறவர்கள் நம்மையே கயிற்றால் கட்டி நலிகின்றார்களே!; இப்படிப்பட்ட பாவிகளை நாம் ஏன் ஸ்ருஷ்டிக்கவேணும்; இறகொடிந்த பறவைபோலே கரணகளேபரங்களற்று ப்ரளய ஸீமாவில் மங்கிக் கிடக்கிற சேதநவர்க்கங்கள் அப்படியே மங்கிக் கிடக்கட்டும்; அவற்றுக்குக் கையுங் காலும் உண்டாம்படி நாம் ஸ்ருஷ்டிக்கவேயன்றோ அந்தக் கையையும் காலையுங் கொண்டு அவை நம்மையே புடைக்கின்றன; அவற்றை அப்படியே மங்கிப் போகும்படி போட்டு வைத்தால் நம்மைக் கட்டியடிப்பார் ஆருமில்லையே என்று கருதி எம்பெருமான் வெறுமனிருந்து விடலாம்; ஆயினும் இந்த சேதநர்கள் பக்கல் உள்ள நப்பாசையானது அப்படி இருக்க வொட்டுகிறதில்லைஎன்று உணர்க.
அத்தழும்புதாளினகப் பாம்பலாப்புண்டு பாடுற்றலும் = காளியன் தனது வாலினால் கண்ணபிரானை அழுந்தக் கட்டி, திருமேனி தழும்பேறும்படி வருத்தத்தை உண்டுபண்ணினன்; இந்தத் தழும்பின் முன்னே எசோதையின் தாம்பாலாப்புண்ட தழும்பு அற்பமென்னவேண்டும்படி பாம்பாலாப்புண்ட தழும்பே வலிதாயிருந்ததென்பது விளங்க “அத்தழும்புதானிளக” என்றார். பாடு- வருத்தம் வித்தா = உலகங்கட்கெல்லாம் வித்தாக இருப்பவனே! என்றபடி. இப்படிப்பட்ட உன்னுடைய ஸ்வரூபத்தை அறியவல்லார் ஆர்? என்றது- ஸம்ஸாரிகள் உன்னைப் பரிபவித்தாலும் அவர்கள் மேல் ஆசாபாசம் விட்டு நீங்காமல் நன்மையையே நாடி யிருக்கையாகிற உன்னுடைய ஸ்வரூபம் ஒருவர்க்கும் நிலைகாண வொண்ணாதது என்றபடி.
English Translation
O Undiminishing seed that unfolds into all these variegated forms! You were bound by a leash of rope that let a mark, then you fought with a snake that left a mark, then you fought with a snake that left another mark erasing the previous one, And yet who realises your original form? Tell me.
