(260)

(260)

சாலப்பல் நிரைப்பின் னேதழைக் காவின் கீழ்தன் திருமேனி நின்றொளி திகழ

நீல நல்நறுங் குஞ்சி நேத்திரத் தால ணிந்துபல் லாயர்குழாம் நடுவே

கோலச் செந்தா மரைக்கண் மிளிரக் குழலூதி யிசைபா டிக்குனித்து ஆயரோடு

ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டுஎன் மகளயர்க் கின்றதே.

பதவுரை

சால பல்நிரை பின்னே

பற்பல பசுத்திரளின் பின்னே
தழை

பீலிக்குடைகளாகிற
காலின் கீழ்

சோலையின் கீழே
தன்

தன்னுடைய
திருமேனி

திருமேனியானது
ஒளிதிகழ நின்று

பளபளவென்று விளங்கும்படி நின்று
நீலம்

நீலநிறத்தை யுடைத்தாய்
நல்

சுருட்சி,  நீட்சி முதலிய அமைப்பையுடைத்தாய்
நறு

பரிமளம் வீசாநின்றுள்ள
குஞ்சி

திருக்குழற் கற்றையை
நேத்திரத்தால்

பீலிக்கண்களினால்
அணிந்து

அலங்கரித்துக்கொண்டு
பல் ஆயர் குழாம் நடுவே

பல இடையர்களின் கூட்டத்தின் நடுவில்
கோலம் செந்தாமரை கண் மிளிர

அழகிய செந்தாமரை மலர் போன்ற (தனது) திருக்கண்கள் ஸ்புரிக்கப்பெற்று
குழல்

வேய்ங்குழலை
ஊதி

ஊதிக்கொண்டும்
இசை

(அதுக்குத்தக்க) பாட்டுக்களை
பாடி

பாடிக்கொண்டும்
குனித்து

கூத்தாடிக்கொண்டும்
ஆயரோடு

இடைப்பிள்ளைகளுடனே
ஆலித்து வருகின்ற

மகிழ்ந்து வருகின்ற
ஆயர்பிள்ளை

இடைப்பிள்ளையான கண்ணபிரானுடைய
அழகு

வடிவழகை
என் மகள் கண்டு

என் மகள் பார்த்து
அயர்க்கின்றது

அறிவு அழியாநின்றாள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானுடைய வடிவழகில் ஈடுபட்டுச் சைதந்யத்தை யிழந்து தம்பகம் போலத் திகைத்துநிற்பாளொரு ஆய்ப்பெண்ணின் தாய் சொல்லும் பாசுரம் இது.  “சால உறு தவ நனி கூர் கழி மகில்”  என்ற நன்னூலின்படி மிகுதியைச் சொல்லக்கடவதான ‘சால’ என்ற உரிச்சொல்லோõடணைந்த ‘பல்’ என்ற சொல், பசுக் கூட்டங்களின் எண்ணிறவைக் காட்டுமென்க.  (கோலச்செந்தாமரை யித்யாதி.) “இத்தால், திருத்தோழன்மாருடைய திரளை இடம் வலங் கொண்டு பார்த்து மகிழ்ந்து கொண்டுவரும்படி சொல்லுகிறது” என்ற ஜீயருரையைக் காண்க.  “என் மகள் அயர்க்கின்றாள்”  என்ன வேண்டியிருக்க, “அயர்க்கின்றது”  என்று அஃறிணையாகக் கூறியது வழுவமைதியின் பாற்படுமென்க; அன்றி, அயர்க்கின்றதே – திகைத்து நிற்கிறபடி என்னே! என்று முரைக்கலாம்.

English Translation

Behind a huge herd of cattle, in the midst of a parasols, his face brightly lit, his long dark curls adorned with a peacock feather, his beautiful lotus eyes sparkling, he plays his flute singing songs, and dances with his friends. Seeing such a beautiful lad, my daughter has swooned.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top