(2593)
நுமக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென்?, மாலார்
தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால் – எமக்கினி
யாதானு மாகிடுகாண் நெஞ்சே! அவர்த்திறத்தே
யாதானும் சிந்தித் திரு.
பதவுரை
|
நெஞ்சே |
– |
ஓ மனமே! |
|
(மாலார்) அவர் தாம் |
– |
எம்பெருமானாகிற அப்பெரியவர் தாம் |
|
சார்வு அரியர் ஆனால் |
– |
நமக்குக்கிட்ட முடியாதவராயிருக்கும்போது |
|
நொந்து உரைத்து என் |
– |
வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்? |
|
இனி |
– |
இன்று முதலாக |
|
எமக்கு ஆதானும் ஆகிடு காண் |
– |
நமக்கு எது வேணுமானாலும் நேரட்டும்; |
|
மாலார் தமக்கு |
– |
அவ்வெம்பெருமானை நோக்கி |
|
நுமக்கு அடியோம் என்று என்று |
– |
“நாங்கள் உமக்கு அடிமைப்பட்டவர்கள்” என்று பல தடவை |
|
அவர் திறத்தே |
– |
அப்பெருமான் விஷயமாகவே |
|
யாதானும் சிந்தித்து இரு |
– |
எதையாவது சிந்தித்துக்கொண்டு கிடப்பாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (நுமக்கடியோம்.) எம்பெருமானுடைய திருமேனியை ஸேவிக்கப் பெறவேணுமென்று ஆசை கொண்ட தம்முடைய மநோரதப்படியே அவன் ஸேவை தந்தருளாமையால் அவனிடத்தில் வீணாக அன்புவஹிப்பதில் என்ன பயன்? என்று நினைத்த ஆழ்வார் ‘இனி நாம் எம்பெருமானை நோக்கிப் பஞ்சைப் பாட்டுகள் பாடுவது அநாவச்யகம்; “எனக்கு நீயே கதி, எனக்கு நீயே கதி” என்று பலகாலும் சொல்லுவதில் என்னப்ரயோஜனம்? எவ்வளவு கதறினாலும் அந்தப் பெரியவர் நம்மை லக்ஷியம்பண்ணுகிறதில்லை; ஆகையால், இனி நாம் அப்பெருமானை நோக்கி “நுமக்கு அடியோம்” என்று சொல்வதை நிறுத்திவிட வேண்டியது- எனக் கருதி அக்கருத்தை இப்பாட்டில் முன்னடிகளில் வெளியிடுகிறார். அதற்கு மேல், இந்த உறுதியுடனே நாம் இருந்து விட முடியுமா’ என்று ஆலோசித்துப் பார்த்தார்; க்ஷணசாலமும் இப்படியிருந்திட முடியாதென்று துணிந்து, நெஞ்சை நோக்கி ‘நெஞ்சே! அப்பெருமாள் நம்மை அநுக்ரஹித்தாலும் அநுக்ரஹிக்கட்டும், நிக்ரஹித்தாலும் நிக்ரஹிக்கட்டும்: திருவுள்ளமானபடி செய்திடட்டும். நீ மாத்திரம் சிந்தனையை அவர் விஷயத்திலேயே செலுத்திக்கிட’ என்கிறார் பின்னடிகளில்.
“மாலார் தாம் சார்வரியரானால் (அந்த) மாலார் தமக்கு நுமக்கடியோமென்றென்று நொந்து உரைத்து என்?” என்று முன்னடிகளின் அந்வயம். மாலார்தாம்- ஆச்ரிதர்களிடத்தில்யாமோஹமே வடிவு கொண்டவர்’ என்று பேர் மாத்திரமேயா யிருக்கிற அவர் என்றவாறு. சார்வு அரியரானால் என்றது- நமக்கு நெருங்கியநுபவிக்கக் கூடாதவராயிருக்கையினால் என்றபடி நாம் ஆர்த்தியோடே நுமக்கடியோம் நமக்கடியோம் என்று எத்தனை தடவை சொன்னாலும் அவர் ஸேவைஸாதியாதிருக்குமளவில் அந்த வார்த்தையை நாம் வாய் நொவ வீணாகப் பலகால் சொல்லிக் கதறுவதில் யாது பயன்? நெஞ்ச உலரக் கத்துவது எதுக்கு? என்கை. நொந்து உரைத்தலாவது- ஆர்த்தியோடே சொல்லுதல்; வாய் நோவச் சொல்லுதலுமாம். பசித்தபோது சோறிடாதவனை நோக்கிச் சோறு சோறு என்று பலகால் கத்தினாலும் வாய்தானே நோகும்.
நெஞ்சே! எமக்கு இனி யாதானுமாகிகொண்; அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு= “நல்லவென் தோழி!நாகணைமிசை நம்பார், செல்வர் பெரியர், சிறுமானிடவர் நாம் செய்வதென்?” (நாச்சியார் திருமொழி 10-10) என்றாற்போலே, மிக்க பெரியவரான அவரை இன்னபடி செய்கவென்று நியமிக்க ஆராலாகும்; அவர் – நெறிகாட்டி நீக்கினாலும் நீக்கட்டும்,- கருமாமுறிமேனி காட்டினாலும் காட்டட்டும்; நீ அவர் விஷயமாகவே எதையாவது சிந்தித்திரு.
இவ்விடத்தில் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்:- (அவர் திறத்தேயாதானும் சிந்தித்திரு.) பெறும் இழவும் இரண்டு மொக்குமென்றிருக்கலாமோ? நம்முடைய ஸத்தைக்கு (அவன் வேணுமேயென்றது- அவனுடைய அநுக்ரஹம் வேறுமே என்றபடி) அவன் வேணுமேயென்ன; ஸத்தைக்கு இதெல்லாம் வேண்டாகாண்; அவர் நம்மை வேண்டாவென்றத்தை நினைத்திருக்கவமையும்; நம்முடைய ஸத்தைக்கு அவர் ஸத்தையிறே காரணம்.” என்று. இந்த ஸ்ரீஸூக்திகளின் ஆழ் பொருளை என்சொல்வோம். ‘எம்பெருமானுடைய அநுக்ரஹத்தை நினைத்துக் கொண்டிருந்தால்தானே நமக்கு ஸத்தை; அவன் நம்மை அநுக்ரஹியாது நிக்ரஹித்து விட்டாலும் அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமென்று சொல்லலாமோ? “எமக்கினியாதானு மாகிடுகோண்” என்று எப்படி சொல்லலாம்? என்னில்; அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே. நம்மைப்பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம். அது அநுக்ரஹரூபமாகவோ நிக்ரஹரூபமாகவோ எதுவாகிலுமாகலாம். திருவாய் மொழியிலும் (47-3.) “கூவிக்கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால், பாவி நீ யென்றென்று சொல்லாய் பாவியேன் காண வந்தே” என்றருளிச் செய்ததன் கருத்து நோக்கத்தக்கது. எம் பெருமான் விருப்பான வார்த்தையோ வெறுப்பான வார்த்தையோ எது சொன்னாலும் அதில் ஒரு நிர்பந்தமில்லை; கண் முன்னே வந்து தோற்றிச் சொல்ல வேணுமென்பதொன்றே வேண்டுவது என்கிறாரன்றோ. ஆண்டாளும் ·“செம்மையுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9) என்றாள்; – கண்ணபிரான் தனது திருமார்பிலே எனது கொங்கைகளை அணைத்துக் கொள்ள வேணுமென்று விரும்பியிருக்கிற என் விருப்பத்திற்படி அவன் அணைத்துக்கொள்வனேல் நன்று; அப்படி அணைத்துக்கொள்ளத் திருவுள்ளமில்லையாகில், என் முகத்தை நேராகப் பார்த்து ‘எனக்கு உன்மேல் அன்பு எள்ளளவுமில்லை, உன்னைக் கைவிட்டேன், நீ போ’ என்று வாய் திறந்தொன்று சொல்லிவிடட்டும்; அஃது எனக்கு மிகவும் ப்ரியம் என்றாளன்றோ. உன்னைக் கைவிட்டேனென்று சொல்லுகிற வார்த்தையையாவது அவன், முகம் நோக்கிச்சொல்லுவனாகில் அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும் கண்ணிலே தன்பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால் ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள வழியுண்டாகலா மென்றும் நினைத்துச் சொல்லுகிறபடியிறே இவை. அதுபோல, இவ்விடத்திலும் ‘அவன் திருவுள்ளத்தில் அநுக்ரஹமில்லாமல் நிக்ரஹமே கொண்டிருந்தாலும் அதையாகிலும் சிந்தித்துக் கொண்டிரு’ என்றது- நல்லபடியாகவோ தீய தீயபடியாகவோ ஏதேனுமொருவிதமாக நம்மைப்பற்றின எண்ணம் அவனது திருவுள்ளத்தே பட்டிருக்குமாகில் அதுவே போதுமானது. நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது நம்மை ஒரு வயக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்; அந்த நினைவுதானே நமக்கும்போதுமானது என்கை.
ஆகிடு – ஆகிடுக. காண் – முன்னிலையசை.
English Translation
O Heart! When even his beloved ones find it difficult to approach him, what use our pleading, “We are your slaves”, thus and thus piteously? Let anything happen to us, you keep on thinking about him.
