(2587)
இவையன்றே நல்ல இவையன்றே தீய,
இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,
என்னால் செயற்பால தென்?
பதவுரை
|
இறையவனே |
– |
எம்பெருமானே! |
|
இவை அன்றே நல்ல |
– |
உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவையன்றோ நல்லது; |
|
இவை அன்றே தீய |
– |
உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதுமாகிற இவையன்றோ கெட்டது; |
|
இவை இவை என்ற அறவனேனும் |
– |
(ஆகவே) ‘இன்னது இப்படிப்பட்டது’ என்று நான் உண்மையில் தெரிந்து கொண்டிருக்கிறேனாகிலும் |
|
இவை எல்லாம் |
– |
புகழாமையும் மதியாமையும், புகழ்தலும் மதித்தலுமாகிய இவையெல்லாம் |
|
என்னால் |
– |
என்னாலே |
|
அடைப்பு நீக்கு ஒண்ணாது |
– |
பற்றவும் முடியாது, விடவும் முடியாது; |
|
என்னால் செயற்பாவது என் |
– |
(சபலனான) என்னாலே செய்யக்கூடியது என்ன இருக்கிறது? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (இவையன்றே நல்ல.) “சீறல் நீ” என்று திருவுள்ளத்தில் இரக்கமுண்டாம்படி பிரார்த்திக்க ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்-, “ஆழ்வீர்! என்னுடைய சீற்றம் கிடக்கட்டும்; நீர் என்ன தீர்மானம் செய்து கொண்டீர்? ‘புகழ்வது தகுதிதான்’ என்று கொண்டீரா? அல்லது புகழத்தகாது என்றே கொண்டீரா? அதை நிஷ்கர்க்ஷித்துச் சொன்னீராகில்; பிறகு பார்ப்போம்” என்றான்; அதற்கு உத்தரமாயிருக்கிறது இப்பாட்டு. இதில் சொல்லுகிறது யாதெனில்; எம்பெருமானே! இது யுத்தம், இது ஆயுக்தம் என்கிற விஷயம் அடியேனுக்குத் தெரியாமையில்லை; அற்ப ஞானிகள் உன்னைப் புகழ்வது அயுக்தம். புகழாதிருப்பது யுத்தம்- என்பதை அடியேன் நன்று அறிவேன். அதில் ஸம்சயமில்லை; ஆனால், அறிந்தபடியே அநுஷ்டிக்க என்னாலாகாது. நான் அறிந்திருக்கிறபடியே அநுஷ்டிக்க வேணுமானால், உன்னைப் புகழ்வதை விட்டுப் புகழாமையைப் பற்றவேணுமிறே இந்த வீடுபற்றுக்கள் என்னால் செய்யப்போகாது. (உன்னைப் புகழாதிருக்க என்னால் முடியாது என்றபடி.)
* என்னால் செயற்பாலது என்? = என்னுடைய இஷ்டப்படி காரியம் நிறைவேறுமாகில் உன்னைப் புகழாமலிருந்துவிடுவேன்; அதில் தடையில்லை; *“என் நா முதல் வந்து புகுந்து நல்லீன்கவி, தூமுதல் பத்தர்க்குத்தான் தன்னைச்சொன்ன என்வாய் முதலப்பன்” (திருவாய்மொழி 7-9-3) என்றபடி என்னுடைய வாக்குக்களுக்கு ப்ரவர்த்தகன் நீ யாகையாலே, அது புகழ்வதோ இகழ்வதோ உன் காரியமேயொழிய என்னுடைய காரியமாக யாதொன்றுமில்லைகாண் என்றவாறு.
இனி, “என்னால் செயற்பாலதென்” என்பதற்கு – எனது அன்பு செய்கிறதேயொழிய நான் செய்வதொன்றுமில்லை என்பதாகவும் உரைக்கலாம்.
நல்ல, தீய- பலவின்பால் குறிப்பு விலைமுற்று. அடைப்பு நீங்கொண்ணாது = அடைப்பாவது பரிந்தரஹித்தல்; நீங்காவது பரித்யஜித்தல்… பரிக்ரஹிந்தக்கதான புகழாமையைப் பரிக்ரஹிக்கவும், பரித்யஜிக்கத் தக்கதான புகழ்வதைப் பரித்யஜிக்கவும் என்னாலாகாது என்றபடி, ஏன் உம்மாலாகாது? என்னில்; அதற்கு மைதானம் என்னால் செயற்பாலதென்? என்பதாம் … …
English Translation
O Lord! I do not know what is good, what is bad, what is what, and what is what not. And even if do, I cannot take out or retain anything on my own. What is there that I can do?
