(2562)
மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி,
ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த
மாணிக்கமே! என்மரகதமே! மற்றொப் பாரையில்லா
ஆணிப்பொன்னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே!
பதவுரை
|
உலகு அளந்த |
– |
உலகங்களை அளந்து கொண்ட |
|
மாணிக்கமே |
– |
மாணிக்கம்போலச் சிறந்தவனே |
|
என் மரகதமே |
– |
மரகதப்பச்சைப்போல் எனக்கு இனியனானவனே! |
|
மற்று ஒப்பாரை இல்லா |
– |
தன்னையொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத |
|
ஆணிபொன்னே |
– |
மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே! |
|
மாணிக்கம் கொண்டு குரங்கு |
– |
எறிவு ஒத்த |
|
மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால் அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல்போன்று |
||
|
துணிபொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும் |
– |
மாற்றுயர்ந்த பொன்போன்ற ஒளியையுடைய ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப்பெற்ற |
|
மாலை |
– |
மாலைப்பொழுதிலே |
|
அடியேன் அடி ஆவி அடக்கலாமே |
– |
இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமா உயிர் உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது. |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-மாலைப்பொழுது கண்டு வருந்திய நாயகி இரங்கி யுரைத்த பாசுரம் இது. “காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலுருமிந்தோய்” (திருக்குறள்- பொழுது கண்டிரங்கள்-7). என்கிறபடியே காமநோய் மிகவும் முதிர்வதற்கு உரிய காலமான மலைப்பொழுதில் ஆற்றாமை மிகுதியால் தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேறு கதியற்றவளாய்த் தலைமகள் தலைமகனைக் கருத்தி ‘உனக்கே என் உயிர் தஞ்சம்; ஆதலால் நீயே என்னை வந்து காத்தருள வேண்டும்’ என்று முறையிடுகிறாள். இப்பாட்டைத் தாய்வார்த்தை யென்பார்க்கு, ‘அடியேனடியாவி’ என்பதற்கு, எனது அடிமையான மகள் என்று பொருள்கொள்ள வேணும். ஆவி- உயிர்போல் அருமையான பெண் என்றபடி, ஆகுபெயர்- ‘அடியேனுடையாவி’ என்பதும் பாடமாம்.
ஒருவரால் எறியப்பட்டுக் குரங்கின் மீது சென்று விழுந்த மாணிக்கமான அதன் கையில் அகப்பட்டுத் திரும்பமாட்டாது அழிவதுபோல, இருளை அழித்தற் பொருட்டு அதன் மீது சென்று வீழ்ந்த ஸூர்யன் அவ்விருளிற்பட்டு மீளாது மறைந்திட்டானெனக் கற்பனை கூறுப்பட்டது. ஸூர்ய மண்டலத்திற்கு மாணிக்கம் உவமை; இவளுக்குக் குரங்கு உவமை. மாணிக்கம் மீளாக்காணாமற் போதற்கு ஸூர்யாஸ்தமநம் உவமை. மாணிக்கம் நவரத்நங்களுள் ஒன்று; இது செந்நிறமுடையது. நூல்களிற் கருமாணிக்க மென வருதல் அபூதோபமையென்க. இங்கு உபமேயமாகிய இருளின் தன்மையைக் கருதி, குரங்கு, கருங்குரங்கு எனக் கொள்ளப்பட்டது.
இனி, மிகச் சிறந்த மாணிக்கத்தை அதன் சீர்மையை யறியாத குரங்கு எடுத்து எங்கேனும் மங்கிப் போம்படி எறிந்து மாய்த்துப் போக்கிவிட்டாற்போல, ஸூர்யனை இருளிலேயெறிந்து போக்கின மாலைப்பொழுது என்றும் உரைக்கலாம்; இவ்வுரையில், மாலைக்குக் குரங்கும்,ஸூர்யனுக்கு மாணிக்கமும், அதன் வீழ்தற்கு அது எறியப்படுதலும், இருளுக்கு எறியப்படுமிடமும் உவமையாம்.
அழகியமணவாள சீயருரை காண்மின்;-“அன்றியே, மாணிகக்த்தைக் கொண்டு குரங்க எறிந்தாற்போலே யென்றுமாம். குரங்கதலாவது வளைதலாய், உதித்த ஆதித்யன் உயர் எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னபடி” என்று இவ்வுரைக்கு, குரங்க’ என்னும் செயவெனெச்சம் தொக்க தென்க.
ஆணிப்பொன்- மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்; இதுக்குமேலே மாற்றில்லையென்னும்படியான சிறந்த பொன் என்றும் உரைப்பர். மற்று ஒப்பாரையில்லா- தனக்குத்தானே உவமையாவதன்றி ஒருபடியாலும் வேறு நிகரில்லாத என்றபடி, “தனக்குவமையில்லாதான்” என்ற திருக்குறளும் அறிக. இதனால், தன்னையொழிந்தார் யாவரினும் தான் மேற்பட்டவனென்பது விளங்கும். “ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா” என்றார் திருவாய்மொழியிலும்.
இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- எம்பெருமானை யநுபவிப்பதற்கு உரிய காலம் வந்திருக்க, அவ்வநுபவம் கிடையாமையாலாகிய ஆற்றாமையின் மிகுதியால் வருந்திய ஆழ்வார், அவ்வருத்தம் தீரும்பொருட்டு ஸ்வாமயான எம்பெருமானை பக்கலிலே ஸொத்தாகிய தன்உயிரை அடைக்கலமாக ஸமர்ப்பித்தலாம். மிக்க விளக்கமுடைய விவேகம் மோஹாந்தகாரத்திலே விழுந்து அகப்படும்படியான இந்நிலையில் உன்னைச் சரணமடைந்த இவ்வுயிருக்கு நீயேயன்றோ ரக்ஷகனென்று உரைத்தனரென்க.
English Translation
O Gem Lord who measured the Earth! My Emerald! O Nugget of gold, lord without a peer! Like a monkey picking up a gem and throwing it away, the evening sky has thrown away the golden Sun into darkness. You are the sole refuge for my lowly soul!
