(2560)

(2560)

விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை,

முளரிக் குரம்பை யிதுவிது வாக, முகில்வண்ணன்பேர்

கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல் லாவியும்

தளரில்கொலோ வறியேன்,உய்ய லாவதித் தையலுக்கே.

 

பதவுரை

விளரி

விளரியென்னும் இசையையுடைய

குரல்

குரலையுடைய

அன்றில்

அன்றிற்பறவை

மெல் பெடை

மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான

மூன்றில் பெண்ணை முளரி குரம்பை

முன்வாசலிலுள்ள பனைமரத்திலுள்ளதும் முட்களையரிந்து செய்யப்பட்டதுமான கூடு

மெல் அவியும்

(இவளது) மெலிவடைந்த உயிரும்

நையும்

(உடம்பின் ) இளைப்பும்

எல்லாம்

என்னும் இவையாவும்

இது இது ஆக

இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க,

(இவ்வாற்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு)

முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும்

காயமேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை (வலியின்மையால் வருந்தியெடுத்தெடுத்துக் கூறி வாய்பிதற்றும் படியான

தளரின் கொலோ

முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ

இ தையலுக்கு

இம்மகளுக்கு

உய்யல் ஆவது

(அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது?

அறியேன்

அறிகிறேனில்லை.

 

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கிக் கூறம் பாசுரம் இது. காமவிரஹத்தா ண்டாகும் வேதனைகளுள் சிந்தனை பசலை மேனிமெலிவு அழுங்கல் மொழி பல பிதற்றல் முதலிய பலவும் இவளுக்கு நிகழ்ந்தாய் விட்டன; இதுவரையிலும் இவளுடைய தலைவன் இவளை வந்துகூடி உய்யச் செய்யக் காண்கின்லோன்; இனி மரணமொன்றே நிகழாது நிற்பது; அதுவும் நிகழ்ந்த பின்புதான் இவளை வந்து கூடி உய்யச் செய்வதாகவிருக்கிறானோ? என்று தோழி இரங்குகின்றாள். இதனால்,இனி இவளுக்கு ஜீவித்திருத்தல் அரிதாம் என்றவாறு.

வடநூலார் க்ரௌஞ்ச மென்று கூறுவதே அன்றிற்பறவையாகாது; இது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் கூடியே நிற்கும்; கணநேரம் ஒன்றை ஒன்றுவிட்டுப் பிர்ந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றையொன்று இரண்டு மூன்றுதரம் கத்திவிட்டு அதன்பின்பும் தன் துணையைக் கூடாவிட்டால் உடனே இறந்து படும். (பகல் முழுவதும் புணர்ந்திருந்து இரவிற்பிரிந்து வருந்துவதாகிய சக்கரவாகப் பறவையும் அன்றிலெனப்படுவது உண்டு.) அன்றிலும் அதன் குரலும் காமாத்தீபகமாய்ப் பிரிந்தார்க்கு விரஹவேதனையை வளரச் செய்யுமென்க. இப்பறவையைப் பனைமரத்தில் வாழ்வதாகவே பலரும் பலவிடத்துங் கூறுவர்; “காவார்மடற் பெண்ணையன்றி லரிகுரலும்” “பெண்ணைமேற் பின்னுமவ்வன்றிற் பெடை வாய்ச் சிறுகுரல்” என்பன திருமங்கையாழ்வார் பாசுரஙகள்.

ஸம்ஸ்க்ருதத்தில், ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்தியமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்னும் ஸப்தஸ்வரங்கள் தமிழில் முறையே குரல் துத்தம் கைக்கிளை உழை இளி யிளரிதாரம் என்னும் ஏழிசையெனப்படுதலால் விளரியென்றது. தைவத மென்னும் ஸ்வரமென்னலாம்; அன்றி, வடமொழிநிகண்டில் “க்ரௌஞ்ச: க்வணதி மத்யமம்” என்றதால் அன்றில் மத்யம்மென்னும் ஸ்வரத்தை யொலிக்கிறதென்று தெரிதலால் விளரி யென்பதற்கு மத்யம ஸ்வரமென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று. விளரியென ஓர் பண்ணுமுண்டு.

மென்பெடை = பிரிவுபொறாத ஸௌகுமார்யத்தையுடைய பேடை. ‘முளிரிக்குரம்பை’ என்பதற்கு- தாமரையிலைகளையும் பூக்களையும் கொண்டுவந்து செய்த கூடு என்று உரைப்பாருமுளர். ‘இதுவலிது- நட்புலனாகும் பலவற்றைச் சுடடியது. * மாறன்பணிதத் தமிழ் மறைக்கு ஆறங்கங்கூற அவதரித்த வீறுடைய திருமங்கையாழ்வார், இங்கு, “அன்றில் மென்பெடைமேகின்ற முன்றில் பெண்ணை முளரிக் குரம்பையிது” என்றதையடியொற்றி (பெரியதிருமொழி 11-1-6) “முள்நிற் பெண்ணைமேல் முளிரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடருமென்னையே” என அருளிச் செய்திருத்தல் காண்க.

மேகின்ற- மேவுகின்ற. குரம்பை- குடம்பை. மூன்றில்- இல்முன் என்பது முன்பின்னாகமாறித் தொக்க மரூஉமுடிபு; தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியலில் (60) “முன்னென்கிளவி முள்ளர்த்தோன்றும், இல்லென்கிளறி மிசை றகர மொற்றல், கொல்லின் மருங்கின் மரீஇய மரபே” என்றது காண்க: இதனை இலக்கணப் போலியில் அடக்குவர் இக்காலத்தார். தையல்- அழகு; அதனையுடையவளுக்கு ஆகுபெயர். ‘பிதற்றும்’ என்பதற்கு முதனிலைத் தொழிற்பெயராக, பிதற்றுதலும், என்றுரைக்கவுமாம். ‘ஆவியும் நையும்,’ ‘ஆவியின் நையும்’ என்பட பாடபேதங்கள்.

இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- பாகவதநுபவம் பெறாமையால் ஆழ்வார் தளர்தலைக்கண்ட அன்பர் ‘பாதகமான லௌதிக பதார்த்தங்கள் அருகிலிருத்தலால் இவர் ஆறியிருப்பது  அரிதாயிந்தது’ என்று கூறுதலாம். இவர்தம் இருக்கிற விடத்திலே அருகிலுள்ளார் சிலர் எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிக்கப் பெறுதலைக்கண்டு தமக்கு அத்தன்மை கிடைத்திடாமையாலே ஆற்றாமைமிக்கு எம்பெருமான் திருநாமங்களை வாய்மாறாமல் எடுத்துக்கூறி புலம்பி, நெஞ்சந்தளர்ந்து நைகிற தன்மையைக் கண்டு ‘இங்ஙனம் மெலிகிற இவர்க்கு தேஹவியோகம் ஆனபின்போ எம்பெருமான் வந்து இவரைச் சேர்த்துக் கொள்வது!’ என்ற வெறுக்கக் கூறினரென்க

 

English Translation

Hearing the repeated curlew-sound of the Anril bird mingling with its tender mate in the thorny nest on a Palm tree in the yard, this girl too repeats the cloud-hued Lord’s names firelessly, ruining her health and well being.  Is it only after she breaks down completely that she will find her salvation?  I do not know.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top