(2558)
உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பில ராய்,இவளைப்
பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் துழாய்குழல்வாய்த்
துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தாலிவ ளாகம்,மெல் லாவி எரிகொள்ளவே!
பதவுரை
|
ஓர்ப்பு இலர் ஆண் |
– |
(இவளுக்கு நேர்ந்துள்ள கோயில் தன்மையையும் அதன் காரணத்தையும் அத்தனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய் |
|
கூறுகின்ற |
– |
(இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற |
|
கன்மங்கள் |
– |
(வெறியாட்டு முதலிய) காரியங்கள் |
|
மேலன |
– |
மேன்மேலும் உண்டாகாகின்றன; |
|
இவளை பெறுகின்ற தாயர் |
– |
இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார். |
|
மெய் நொந்து பெறார் கொல் |
– |
உடம்பு வருந்திப்பெற்றாரில்லையோ? |
|
குழல்வாய் |
– |
(இவளது) கூந்தலிலே |
|
துழாய் |
– |
(எம்பெருமானது) திருத்துழாயை |
|
கூறுகின்றிலர் |
– |
சூட்டுகின்றாரில்லை; |
|
தொல்லை வேங்கடம் |
– |
பழமையான திருவேங்கட மலையிலே |
|
ஆட்டவும் |
– |
இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் |
|
சூழ்கின்றிலர் |
– |
ஆலோசிக்கின்றாரில்லை; |
|
இவள் ஆகம் |
– |
இவளது உடம்பு |
|
மெல் ஆவி எரி கொள்ள |
– |
மென்மையான உயிரை விரஹித்தீக் கவர்ந்துகொள்ளும்படி |
|
இறுகின்றது |
– |
முடிகறிவளவாகா நின்றது. |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-வெறிவிலக்கத் தொடங்கிய தோழி இரங்கிக்கூறும் பாசுரம் இது. தலைமகள், திருமாலாகிய தலைமகன் விஷயமாக வேட்கைநோய் கொண்டு மேனி மெலிந்து வடிவுவேறுபட, அதுநோக்கிய தாய்மார் ‘இது முருகக் கடவுள் ஆவேசித்ததனாலானது என்று மாறாகத் துணிந்து அதற்குப் பரிஹாரமாக வேலனைக் கொண்டு வெறியாடுவித்தல், ஆடு பலிகொடுத்தல், கள்ளிறைத்தல், இறைச்சிதூவல், கருஞ்சோறு, செஞ்சோறுவைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது ஒன்றன்மேலொன்றாகச் செய்யத் தொடங்க, நொயொன்றும் மருந்தொன்று மாதலால், தான் காதலித்த நாயகனுடைய தகுதிக்கு ஏற்றிராத அக்காரியங்களை நோக்கி நாயகி மேன்மேலும் மிக வருந்த, அது நோக்கித் தலைவி நினைவறிந்து வெறிவிலக்கவந்த தோழி, அத்தாய்மார் செவிப்பட முன்னிலைப்படர்க்கையாகக் கூறியதாயிது. இப்போது அவளுக்கு நேர்ந்துள்ள நோயின் ஸ்வரூபத்தையும் அதன் காரண மின்னதென்பதையும் அதனைத் தீர்க்குமுபாயம் இன்னதென்பதையும் ஆராய்ந்து தெளிய கில்லாத இவள் தாய்மார் ஓயாது நடத்துகிற வெறியாட்டு முதலிய காரியங்கள் மேன்மேலும் உண்டாகாநின்றன; அந்தோ! இவளைப்பெற்றதாய் பெறுகின்ற பொழுது மெய்ந்நொந்து பெற்றவளாயும், வளர்க்கின்ற செவிலித்தாயார் தாம் தாம் வருந்திப் பிள்ளை பெற்றவராயுமிருத்தால் இவள் பிழைக்கும்வழியிலே முயலாது இங்ஙனம் இவளை இழக்கைக் குறுப்பான வழியல்லாவழியிலே தலையிடுவார்களோ? விபரீதமான காரியங்களையே இவர்கள் செய்யக் காண்கையாலே இவளை மெய்ந்நொந்து பெறாதே எங்கேனும் விலைகொடுத்து வாங்கினாபோலும். எம்பெருமானது திருத்துழாயை முடியிறச் சூட்டுதலும் அவனது போகஸ்தானமான திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு போதலுமே இந்நோய்க்கு ஏற்ற பரிஹாரமாயிருக்க அவையொன்றுஞ் செய்யக் காண்கிறீலோமே! ஸுகுமாரமான இவளது உயிரை விரஹாக்கி கவர்ந்து கொள்ளும்படி இவட்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றதே! என்ன பரிதாபம்!! என்றாளாயிற்று.
“ஓர்ப்பு இலராய்” என்பதற்கு- ‘இவளுக்கு இனி ஆகக் கடவனவாய நிலைமைகளை ஆராயாதவர்களாய்’ என்று முரைப்ப- ‘இவளுக்கு இனி ஆகக் கடவனான நிலைமைகளை ஆராயாதவர்களாய்’ என்று முரைப்ப. எம்பெருமானுகந்தருளின திவ்யதேசத்தை இவள் தாபந் தீர்ப்பதற்கு உரியதொரு பொய்கையாக நினைத்தனளாதலால் ‘வேங்கடம் ஆட்டவும்’ என்றது. அன்றி ‘வேங்கடமாட்டவும் சூழ்கின்றலர்’ என்பதற்கு- திருவேங்கடமலைக்கு இவளை யழைத்துக்கொண்டு வருகிறேனென்று பிரார்த்தனை பண்ணிக்கொண்டு அதற்கு உரிய ஆவேசத்தை ஆடுவிக்க ஆலோசிக்கின்றேனென்று பிரார்தத்னை பண்ணிக்கொண்டு அதற்கு உரிய ஆவேசத்தை ஆடுவிக்க ஆலோசிக்கின்றாரில்லை என்றாவது, திருவேங்கடத்திலே இவளை நடையாடச் செய்தற்கு எண்ணுகின்றிலர் என்றாவது உரையிடலாம். இம்மகளுக்கு இந்த நோய் தீர்ந்தால் இவளை திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு வந்து ஸேவை பண்விக்கிறோம் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாமே. அது செய்யக் காணோமே; வீண் செயல்களே செய்து நோயை வளர்த்திக் காலங்கழிக்கின்றனரே! என்று இறங்கிக் கூறியவாறு.
இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரை ஆற்று விக்கவேணுமென்று ஞானிகள் தங்கள் பரிவால் வேறுசிலவிதமான பரிஹாரங்களைச் செய்யப்புக, இவரது தன்மையையயறிந்த அன்பவர்கள் இவராற்றாமையைத் தணிக்கும் வழிகளயில் இழியாமல் வேறு வழிகளில் இழிந்து என்னபயனென்று வெறுத்து உரைக்கும் வார்த்தையாம். பகவத்ப்ரஸாதமும் திவ்யதேச ஸரஸமுமே இவராற்றாமைக்குப் பரிஹாரம்; அவை செய்யாமையான் இவர்க்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது என்கை.
English Translation
It would apepar that these ladies who surround her, not inquiring of the best ways to retrieve her, never really begot her the hard way. They do not swathe her coiffure with the Lord’s Tulasi, nor go circum-ambulating the Venkatam hill. Alas, a burning love sickness is consuming her soul!
