(2537)
முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும், கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பரமே பெருமான்
மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே.
பதவுரை
| முலையோ |
– |
ஸதனங்களோ வென்னில் |
| முழு முற்றும் போந்தில் |
– |
மிக முழுவதும் தோன்றினவில்லை; |
| மொய் பூ குழல் |
– |
அடர்ந்த மென்மையான தலைமயிர்கள் |
| குறிய |
– |
(முடிகூடாமல்) குட்டையுள்ளன; |
| கலையோ |
– |
அடையோ வென்னில் |
| அரை இல்லை |
– |
இடையிற் பொருந்த உடுக்கப்படுவதில்லை; |
| நாவோ |
– |
நாக்கோவென்னில் |
| குழறும் |
– |
(திருத்தமாக வார்த்தை சொல்லமாட்டாமல்) குதலைச்சொல் பேசுகின்றது. |
| கண் |
– |
கண்களோ வென்னில் |
| கடல் மண் எல்லாம் விலையோ என |
– |
கடல் சூழ்ந்த உலகமுழுவதும் (இவற்றுக்கு) விலைப்பொருளோவென்று சொல்லும்படி |
| மிளிரும் |
– |
(ஒரு நிலையில் நில்லாமல்) பிறழ்ந்து நோக்குகின்றன; |
| பெருமான்மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம். |
– |
‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ? என்று பலகாலுஞ் சொல்லிப் பயில்கிற வார்த்தை |
| இவள் பரமே |
– |
(இப்படி இளமைப் பருவமுடைய) இவளிடம் உண்டாகக் கடவதோ?. |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தலைமகளின் இளமையை நோக்கிச் செவிலித்தாய் இரங்கிக் கூறும் பாசுரம் இது. நாயகனோடு களவொழுக்கத்திற் புணர்ந்த நாயகி அவன் பிரிந்த நிலையில் ஆற்றாது வருந்தி வாய் பிதற்றிக் கண்ணீர் சொரிந்து உடலிளைத்து வடிவம் வேறுபட, அவ்வேறுபாடு மாத்திரத்தைக் கண்ட தாய் இதற்கு காணமென்னோ வென்று கவலைப்பட்டு அவளது உயிர்த்தோழியைக் கேட்க, அவள் ஒளிக்காமல் உண்மையான காரணத்தைக் கூறியிட, அது கேட்ட தாய், இவளது இளமையைக் கருதி இரங்கிக் கூறிய துறை இது. உண்மையில் நாயகி யௌவன பருத்தை அடைந்திருந்தும் இவள் தாய்மார்க்கு அன்பு மிகுதியால் இவளது மிக்க இளமையே தோற்றுவதென்க. “செய்யநூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லளல்லள்” “வாயிற்பல்லு மெழுந்திட மயிரும் முடி கூடிற்றில… மாயன் மாமணி வண்ணன் மேலிவள் மாலுறுகின்றானே” “கொங்கையின்னங் குவிந்தெழுந்தில” என்று பெரியாழ்வார் பாசுரங்களும் “முள்ளெயிறேய்ந்தில கூழை முடி கொடா,தெள்ளியளென்பதோர் தேசிலன்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும் காண்க.
முலையோ முழுமுற்றும் போந்தில் – முலைகளான ஆண்முலைக்கும் பெண்முலைக்கும் வாசிதோற்ற முகத்திரண்டு கிளர்ந்தனவில்லையென்க. யௌவந ஸூசகமாதலால் முலை முந்துறக் கூறப்பட்டது. குழல் அறிய = மயிரும் சேர்ந்து முடிக்கலாம்படி கூடின வில்லை. கலையோ அரை இல்லை= சிற்றாடையை உடுக்கும் அடைவு அறிந்து நன்றாக உடுக்கவும் மாட்டாள் என்றபடி, நாவோ குழறும் = கட்டுத் தடங்கலின்னிறப் பேசப் பழகின பருவமல்லாமையாலே பேச்சுக்குளறும், ‘கடல் மண்ணெல்லாம் விலையோ’ என்பதற்கு ரத்நாகரமான கடல்களும் பூலோகமும்மற்ற வுலகங்களும் விலைபோதா என்றும் உரைப்பர். மிளுரும் கண் = ஒரு பொருளை விசேஷித்துக் குறிப்பாக நோக்குதலனின்றிப் பொதுநோக்கு நோக்குதலே யொழியக் காதற்குறிப்பை வெளிப்படுத்துகிற சிறப்பு நோக்கு இல்லை என்றபடி. நாயகனை வசப்படுத்துவது முலையழகாலேயாதல் சொற் சாதுரியத்தாலேயாதல் கருத்தோடு கடைக் கணித்துப்பார்க்கும் குறிப்புநோக்கினாவாதல் கூடுவதாயிருக்க முலையும் அரும்பாதே குழலும் முடிகூடாதே ஆடையும் செவ்வனுடுக்க அறியாதே சொல்லும் குதலையாய்க் கண்ணும் ஒதுக்கிப் பாராமற்செவ்வே நோக்கும்படியான இந்தப் பேதைக்கு இப்படி தலைவனிடம் வினாவுதலுண்டானவாறு என்கொள்க? என்று அதிசயப்பட்டாளாயிற்று.
நாயகனை வசப்படுத்துகிற ஸாதனங்களின் நிறைவில்லாமையை சொல்லுகிற அடைவில் ‘கடல் மண்ணெல்லாம் விலையோ வெனமிருங்கண்’ என்று சிறப்புறச் சொல்லுவானென்னென்னில்: பொதுகாவுள்ளது இச்சிறப்பு என்க. நாயகனை வசப்படுத்துதற்குரிய சிறப்பன்று. பருவத்தின் மிக்க இளமையைக் காட்டும் இது.
ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட ஞானிகள் ‘எம்பெருமானைச்சேரப் பெறுதற்கு உபாயமான பக்தி முதலியன நிறையாமலிருக்க, இவருக்கு உண்டாகிய விரைவு என்னோ!’ என்று சொல்லும் வார்த்தை இதற்கு உள்ளுறை பொருள். ஸ்வாபதேசத்தில் முலையென்று பக்தியைச் சொல்லுகிறது. (முலையோ முழுமுற்றும் போந்தில்) எம்பெருமானைச் சேர்ந்து அநுபவித்ததற்கு உபகரணமான பக்தி முதிர்ந்து பேற்றுக்குச் சாதனமான பரமபக்தியாகப் பரிணமித்ததில்லை. (மொய் பூங்குழல் குறிய) முடியழகில்லை; அதாவது- தலையாலே வசப்படுத்துகிற பிரணாமம் பூரணமாகத் தோன்றவில்லை. (கலையோ அரையில்லை) (திருக்குறள்-குடி செயல் வகை 3) “மடிதற்றுத் தான் முகதுறும்” என்றபடி அரையில் ஆடையை இறுக உடுத்துக்கொண்டு முந்துற்றுக கிளம்புமா முயற்சியில்லை; ‘முயற்சியை அதன் காரணத்தாற் கூறினபடி. (நாவோ குழறும் இடைவிடாத பககவந்த நாம ஸங்கீரத்தனமில்லை. (கண்மிளரும்) பொதுப்பட பொருள்களின் உண்மையறியும் தத்வஞானமொழிய அவ்வறிவை ஓரிடத்திலே ஒடுக்கி நிறுத்தும் தயாநருபமான ஞானமில்லை. “கடல் மண்ணெல்லாம் விலையோவென என்றதனால் ஆழ்வாரது ஞானத்தின் சிறப்புத் தோன்றும். (இவள்பரமே) கேவலம் பரதந்திரமாயிருக்க வேண்டுவார்க்கு ஸாதநமொன்றுமின்றியே யிருக்க விரைவை ஏறிட்டுக்கொள்றுளுதல் தகுமோ? (பெருமான் மலையோ வேங்கடமென்று கற்கினற் வாசகம்) “பெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே யென்கின்றாளால்” என்னுமாபோல அவனெழுந்தருளி நிற்கிற திருமாலாகிய போக ஸ்தானத்தையே வாய்புலத்தல்.
இப்பாட்டில், ஆழ்வார் திருவவதரித்த பொழுதே தொடங்கி எம்பெருமானாலல்லது தரியாமை வெளியாம்..
English Translation
Her breasts have not grown to the full, her soft hair does not gather into a tuft, her dress does not stay on her person, her tongue speaks in bladder. Yet her lips shine with a brightness that not the Earth or ocean can buy. She is always recliting the words, “The lod’s hill is Tiruvenkatam”
