(2439)

(2439)

என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,

மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், – என்னெஞ்ச

மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்

தாயனுக் காக்கினேன் அன்பு.

 

பதவுரை

என் நெஞசம் மேயான்

என்னுடைய நெஞ்சிலே நித்யவாஸம் செய்பவனும்

இருள் நீக்கி எம்பிரான்

(நெஞ்சிலுள்ள) அஜ்ஞான விருளைப் போக்குமவனான உபகாரகனும்

முன் ஒருநாள்

முன்பொருகாலத்தில்

மன் அஞ்ச

மஹாபலிச்க்ரவர்த்தி பயப்படும் படியாக

மண் அளந்தான்

பூமியை அளந்து கொண்டவனும்

என் நெஞ்சம் மேயானை

(அந்த திருக்கோலத்துடனே) என்னெஞ்சை விடாமலிருப்பவனுமான எம்பெருமானை

இல்லா

நெஞ்சில் உடையனாகாத

விடை ஏற்றான்

ரிஷபவாஹநனான ருத்ரனுடைய

வெம்வினை

மஹாபாதகத்தை

தீர்த்து

தொலைத்து

ஆயானுக்கு

(அதனால்) ஸத்தை பெற்றவனான பெருமானுக்கு

அன்பு ஆக்கினேன்

என் அன்பைச் செலுத்தினேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம் நெஞ்சில் இருளையறுத்துக்கொண்டு அங்கே நிரந்தரவாஸம் பண்ணுகிற ஆபத்ரக்ஷகனான எம்பெருமான் பக்கலிலே தமக்கு அன்பு விளைந்தமையை அருளிச்செய்கிறார். இப்பாட்டில் “என்னெஞ்சமேயான்“ என்பது இரண்டிடத்தில் வந்துள்ளது. பொருள் ஒன்றேயாயினும் கருத்தில் வாசியுண்டு, முதலடியில் என்னெஞ்சமேயான் என்றது பொதுவான வ்யாப்தியைச் சொன்னபடி. இரண்டாமடியில் “மண்ணளந்தானென்னெஞ்ச மேயான்“ என்றது உலகளந்த திருக்கோலம் தம் நெஞ்சிலே பொலியும்படி காட்சி தந்தருள்கின்றமையைச் சொன்னவாறு. “இருள் நீக்கி“ என்றது வினையெச்சமன்று, பெயர்ச்சொல், இருளை நீக்குகின்றவன் என்கை. விளையெச்சமாக்கொண்டால், இருனை நீங்கச் செய்து அதனால் எம்பிரான் – எனக்கு உபகாரகனானவ் என்க.

இப்படிப்பட்ட எம்பெருமான் நெஞ்சிற்கொள்ளமாட்டாத (துர்மாநியான) ரிஷபவாஹநனாகிய ருத்ரனுடைய வெவ்வினையுண்டு ப்ரஹ்மஹத்யாரூபமான பாபம், அதனைத்தீர்த்து, தன் காரியம் ஆனதுபோல் உவந்தவனான எம்பெருமானுக்கு என்னுடைய அன்பைச் செலுத்தினேன் என்றாராயிற்று.

 

English Translation

Then in the yore the lord of all hearts came and measured the Earth, frightening everyone.  The lord in my heart dispelled darkness, and saved me from the throes of death, I gave my love to him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top