(2350)
வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க்
கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,
பூண்டநா ளெல்லாம் புகும்.
பதவுரை
|
வெற்பு என்று |
– |
ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும் |
|
வேங்கடம் |
– |
திருமலையைப் பற்றி |
|
பாடும் |
– |
பாடுகின்றான், |
|
கற்பு என்று |
– |
குலமரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று |
|
வியன் துழாய் |
– |
விலக்ஷணமான திருத்துழாயை |
|
கரு குழல் மேல் |
– |
(தனது) கரிய கூந்தலில் |
|
சூடும் |
– |
அணிந்து கொள்ளுகிறாள். |
|
மல் |
– |
மல்லர்களை |
|
பொன்ற |
– |
பொடிபடுத்தின |
|
நீண்ட தோள் |
– |
நீண்ட திருத்தோள்களையுடைய |
|
மால் |
– |
ஸர்வேச்வான் |
|
கிடந்த |
– |
சயனித்திருக்கப்பெற்ற |
|
நீள் கடல் |
– |
பாந்த திருப்பாற்கடலிலே |
|
நீராடுவான் |
– |
தீர்த்தமாடுவதற்காக |
|
பூண்ட நாள் எல்லாம் |
– |
விடிந்த விடிவுகள் தோறும் |
|
புகும் |
– |
புறப்படுகிறான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானை யநுபவித்தல் பலவகைப்பட்டிருக்கும். அவனுடைய திருநாமங்களைச் சொல்லியநுபவித்தல், திருக்கல்யாண குணங்களைச் சொல்லியனுபவித்தல், திவ்யசேஷ்டிதங்களைச் சொல்லியனுபவித்தல், வடிவழகை வருணித்தநுபவித்தல், அவனுகந்தருளின திவ்யதேசங்களின் வளங்களைப் பேசியநுபவித்தல், அங்கே அபிமாநமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமையைப் பேசியநுபவித்தல் –என்றிப்படி பலவகைப் பட்டிருக்கும் பகவதநுபவம். இவ்வகைகளில் பாமவிலக்ஷணமான மற்றொரு வகையுமுண்டு, அதாவது –தாமானதன்மையை (ஆண்மையை) விட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக் கொண்டு வேற்றுவாயாலே பேசியநுபவித்தல். இப்படி யநுபவிக்குந்திறத்தில் தாய்பாசுரம், தோழிபாசுரம், மகள்பாசுரம் என்று மூன்று வகுப்புகளுண்டு, இவை நம்மாழ்வார் திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில் விசேஷமாக வரும் முதலாழ்வார்களின் திருவந்தாதிகளில் ஸ்த்ரீபாவநையினாற் பேசும் பாசுரம் வருவதில்லை. ச்ருங்கார ரஸத்தின் ஸம்பந்தம் சிறிதுமின்றியே கேவலம் சுத்த பக்திரஸமாகவே பாசுரங்களருளிச் செய்வர்கள் முதலாழ்வார்கள். ஆயினும் இப்பாசுரமொன்று தாய் வார்த்தையாகச் செல்லுகிறது. பேயாழ்வாராகிற பெண்பிள்ளையின் நிலைமையை அவளைப்பெற்றுவளர்த்த திருத்தாயார் பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம் இது.
“என்னுடைய மகளானவள்“ என்ற எழுவாய் இதில் இல்லை யாதலால் கற்பித்துக் கொள்ளவேண்டும். என் மகள் ஏதேனுமொரு மலையைச் சொல்லப்புகந்து திருவேங்கடமலையைப் பாடுகின்றாள். திருத்துழாய் மலரைச் சூடிக்கொள்வதே தனது கற்புக்கு உரியதென்று தன்குழல்மேல் அதனைச் சூடிக்கொள்ளுகின்றாள். மல்லவதம் செய்தருளின பெருமான் பள்ளிக்கொண்டருளும் திருப்பாற்கடலில் நீராடுவதே தகுதியென்று அங்கேறப் புறப்படுகின்றாள் என்றதாயிற்று.
இப்பிபந்தத்தில் அந்யாபதேசப் பாசுரம் வேறொன்றுமில்லாதிருக்க இஃதொன்றைமாத்திரம் இங்ஙனே தாய்பாசுரமாகக் கொள்ளுதல் சிறவாதென்றும், ‘என்மகள்‘ என்ற எழுவாய் இல்லாமையாலும் இவ்வர்த்தம் உசிதமென்று என்றும் சிலர் நினைக்கக் கூடுமாதலால் இப்பாசுரத்திற்கு வேறுவகையான நிர்வாகஹமும் பூருவர்கள் அருளிச்செய்துள்ளார். எங்ஙனே யெனின்? பாடும், சூடும், புகும் என்ற வினைமுற்றுக்களை முன்னிலையில் வந்தனவாகக் கொண்டு, ‘ஓ உலகத்தவர்களே! நீங்கள் ஏதாவதொரு மலையைப் பாடவேண்டில் திருவேங்கடமலையைப் பாடுங்கள், ஏதேனுமொரு மலரைக் குழலில் சூடவேண்டில் திருத்துழாய்மலரைச் சூடிக்கொள்வதே சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு அதனைச் சூடுங்கள், நீராடுவதற்குத் திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‘ என்பதாக.
இங்கே பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகாண்மின், “இப்பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேச மின்றிக்கே யிருக்க இப்பாட்டொன்றும் இப்படி கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள், திருமலையைப் படுங்கோள், திருத்துழாயைச் சூடுங்கோள், விரோதி நிரஸந சீலனானவன் கிடந்த திருப்பாற்படலிலே முழுகுங்கோள்.“ என்று.
நன்னூல் வினையியலில் “பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில், செல்லாதாகும் செய்யுமென்முற்றே“ என்ற சிறப்புவிதிக்கு மாறாக, பாடும், சூடும், புகும் என்ற செய்யுமென் முற்றுக்களுகு முன்னிலைப்பொருள் கொள்ளலாமோ வென்னில், இதனைப் புதியன புகுதலாகக் கொள்க. “நீர் உண்ணும் என முன்னிலையிற் பன்மையேவலாய் வருதல் புதியனபுகுதல்“ என்று நன்னூலுரைகாரர்களும் சொல்லிவைத்தார்கள். “பழையன கழிதனும் புதியன புகுதலும், வழுவல காலவகையினானே“ என்ற நன்னூற் சூத்திரமும் காண்க.
மற்பொனற நீண்ட தோள்மால் என்றவிடத்து அறியவேண்டும் வரலாறு வருமாறு – கண்ணபிரான் கம்ஸனது ஸபையிற் செல்லும்போது எதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகள் முதலிய பெருமல்லர்கள் சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய அவர்களை யெல்லாம் கண்ணபிரான் மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனன்.
கண்ணபிரான் பாண்டவதூதனாய்த் துரியோதனனிடஞ் சென்றபொழுது துரியோதனன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து அப்படுகுழியைப் பிறர் அறிய வெண்ணாதபடி மூங்கிற் பிளப்புக்களால் மேலேமூடி அதன்மேற்சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸநத்தின்மீது தன்னை வீற்றிருக்கச் சொல்ல அங்ஙனமே தான் அதன்மேலேறின மாத்திரத்திலே மூங்கிற்பிளப்புக்கள் முறிபட்டு ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில் மிகப்பெரியதாக விச்வரூப மெடுத்துப் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்த்து அப்பிலவறையிலிருந்த மல்லர்களை மடிவித்தனன் என்ற வரலாறு முணர்க.
பூண்டநாளெல்லாம் – ஸூர்யனுடைய தேரிலே குதிரை பூட்டின நாளெல்லாம் என்றபடியாய் ‘விடிந்த விடிவுகள் தோறும்‘ என்று பொருள்பட்டது.
English Translation
Singing, “Venkatam is the hill”, devotees wrap the Lord’s Tulasi on their coiffure and proceed to bathe on all fasting days, taking it as a dip in the ocean where the strong armed lord reclines.
