(2297)

(2297)

வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்

அந்தி விளக்கும் அணிவிளக் காம், – எந்தை

ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,

திருவல்லிக் கேணியான் சென்று.

 

பதவுரை

ஒரு அல்லி தாமரையாள்

அழகிய இதழ்களையுடைய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பிராட்டி

சென்று ஒன்றிய சீர் மார்பன்

வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்

வந்து உதைத்த வெண்திரைகள் செம் பவளம் வெண் முத்தம்

வந்து வீசுகின்ற வெளுத்த அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்

அந்த விளக்கும் அணி விளக்குஆம்

ஸ்ந்தியாகாலத்தை விளக்குகின்ற மங்களதீபங்களாக ஆகப்பெற்ற

திருவல்லிக்கேணியான்

திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்

எந்தை

எனக்கு ஸ்வாமி

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருப்பாற்கடலில் நின்றும் தம் திருவுள்ளத்துக்கு வரும்போது திருவல்லிக்கேணியில் தங்கி வந்தானென்கிறார் போலும். முதலிரண்டடிகள் திருவல்லிக்கேணிக்கு விசேஷணம், அருகிலுள்ள கடலில் அலைகள் மோதும்போது சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும் கொழிக்கப்படுகின்றன, அவை ஸாயம்ஸந்தியா காலத்தில் ஏற்றப்படுகின்ற மங்கள தீபமோ என்னலாம்படி யிருக்கின்றனவாம். சில விளக்குகள் செந்நிறமான ஒளியை யுடையனவாயும். சில விளக்குகள் வெண்ணிறமான வொளியை யுடையனவாயும் இருப்பதுண்டாகையாலே செந்நிறப் பவழங்களும் வெண்ணிற முத்துக்களும் திருவிளக்காகச் சொல்லப்பட்டன. திருவல்லிக்கேணியில் எப்போது பார்த்தாலும் திருவிளக்கேற்றப்பெற்ற மாலப்பொழுதாகவே காணப்படுமென்று கருத்து. இப்படிப்பட்ட திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருக்கின்ற திருமாமகள் கொழுநன் எனக்கு ஸ்வாமி – என்றாராயிற்று.

‘ப்ரவாளம்‘ என்னும் வடசொல் பவள மெனவும், ‘முக்தா‘ என்னும் வடசொல் முத்து எனவும் ‘ஸந்த்யா‘ என்னும் வடசொல் அந்தி யெனவும் திரிந்தன.

 

English Translation

By the tossing sea of Tiruvallikeni, -Where corals and pearls washed ashore liken the evening sky and the lamps they light of dusk, -they Lord has come to reside, along with the lotus lady who graces his auspicious chest. He is my master.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top