(2291)
தேசும் திறலும் திருவும் உருவமும்,
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் – பேசில்
வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,
நலம்புரிந்து சென்றடையும் நன்கு.
பதவுரை
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் |
– |
வலது பக்கத்தில் சுழித்திருக்கிற சிறந்த சங்கை ஏந்தியுள்ள பெருமானுடைய |
பேர் ஓத |
– |
திருநாமங்களை அப்யஸிக்க வேணுமென்று |
பேசில் |
– |
சொன்னமாத்திரத்தில் |
தேசும் |
– |
தேஜஸ்ஸும் |
திறலும் |
– |
பராக்ரமமும் |
திருவும் |
– |
செல்வமும் |
உருவமும் |
– |
அழகிய ரூபமும் |
மாசு இல் குடி பிறப்பும் |
– |
குற்றமற்ற நற்குலமும் |
மற்றவையும் |
– |
மற்றுமுள்ள நன்மைகளும் |
நலம் புரிந்து நன்குசென்று அடையும் |
– |
தாமே ஆசைப்பட்டு நன்றாக வந்து சேரும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற அழகை எல்லாரும் பேசி விடலாகுமோ? பலவகை நன்மைகளைப் பெற்ற மஹான்களே யன்றோ அவ்வழகைப் பேசவுரியார் என்று சிலர் நினைக்க, அப்பெருமானுடைய திருநாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ண நினைத்த மாத்திரத்திலே எல்லாவகை நன்மைகளும் தன்னடையே மேல்விழுந்துவந்து சேருங்கிடீர் என்கிறார்.
கண்டவர்களெல்லாரும் நன்கு மதிக்கும்படியான தேஜஸ்ஸும், எதிரிகளை வாய்மாளப் பண்ணவல்லமிடுக்கும், கண்டார் நெஞ்சையுங் கண்ணையும் கவரும்படியான வடிவழகும், குற்றமற்ற நற்குடிப்பிறப்பும், மற்றும் நன்மையாகச் சொல்லப்படுமவைகளும் தானேவந்து சேரும், யாரிடத்திலென்னில், சங்குதங்கு தடங்கையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கற்கவேணுமென்பாரிடத்து.
இழிகுலத்திற் பிறந்திருந்தாலும் பகவத் பக்திவை பவத்தாலே அவ்விழிகுலம் நீங்கித் தொழுகுலம் உண்டாகு மென்பது இரண்டாமடியில் விளங்கும். “பண்டைக் குலத்தைத் தவிர்த்து“ என்றார் பெரியாழ்வாரும்.
English Translation
Really speaking, he has a dextral conch on his left, strength, radiance, wealth, beauty, high birth, and all else will accrue of their own accord through reciting the names of the Lord.