(2282)
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழு
மருக்கனணிநிறமுங் கண்டேன்* செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்*
என்னாழி வண்ணன்பா லின்று
பதவுரை
இன்று |
– |
எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம்பெற்ற இப்பொது |
என் ஆழி வண்ணன் பால் |
– |
கடல்வண்ணனான எம்பெருமானிடத்திலே |
திரு |
– |
பெரிய பிராட்டியாரை |
கண்டேன் |
– |
ஸேவிக்கப்பெற்றேன், |
பொன் மேனி |
– |
அழகிய திருமேனியையும் |
கண்டேன் |
– |
ஸேவிக்கப் பெற்றேன் |
திகழும் |
– |
விளங்குகின்ற |
அருக்கன் |
– |
ஸூர்யன்போன்று |
அணி |
– |
உஜ்வலமான |
நிறமும் |
– |
ப்ரகாசத்தையும் |
கண்டேன் |
– |
ஸேவிக்கப்பெற்றேன் |
செரு |
– |
யுத்த பூமியிலே |
கிளரும் |
– |
பராக்ரமங்காட்டுகின்ற |
பொன் ஆழி |
– |
அழகிய திருவாழியையும் |
கை |
– |
திருக்கையில் |
கண்டேன் |
– |
ஸேவிக்கப்பெற்றேன் |
புரி சங்கம் |
– |
வலம்புரிச்சங்கையும் (மற்றொரு திருக்கையிலே) |
கண்டேன் |
– |
ஸேவிக்கப்பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முதலாழ்வார் மூவரும் ஒருவரையொருவர் அறியாமல் தேசஸஞ்சாரம் செய்து கொண்டிருக்கையில், இம்மூவரையும் ஓரிடத்திலே சேர்த்து ஆட்கொண்டு இவர்கள் முகமாக உலகத்தை வாழ்விக்க வேணுமென்கிற குதூஹலங்கொண்ட எம்பெருமானுடைய திருவுள்ளம் நிறைவேறுவதற்காக, ஒருநாள் ஸூர்யன் அஸ்தமித்தபின்பு பொய்கையாழ்வார் திருக்கோவலூரையடைந்து அங்கு ம்ருகண்டு மஹர்ஷியின் திருமாளிகையிற்சென்று அதன் இடைகழியிற் பள்ளிகொண்டிருக்கையில் பிறகு பூதத்தாழ்வாரும் அங்கே வந்து சேர, “***“ என்கிற சாஸ்திரமுறைப்படி ஒருவரையொருவர் வந்தனை வழிபாடுகள் செய்தவுடன் ‘இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் உட்கார்ந்திருக்கலாம்‘ என்று பொய்கையார் விண்ணப்பஞ்செய்ய, அவ்விதமே இருவரும் அங்கு உட்கார்ந்திருக்கையில், பேயாழ்வாரும் அவ்விடத்திற்கே வந்துசேர, ஒருவரையொருவர் தண்டன்ஸமர்ப்பித்து உபசரித்துக்கொண்டபின் ‘இவ்விடம் ஒருவர்படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்‘ என்று பொய்கை பூதத்தாரிருவரும் சொல்ல, அவ்விதமே மூவரும் அவ்விடத்திலே நின்றுகொண்டு பரஸ்வரம் பகவத் குணங்களை சொல்லுதலும் கேட்டலுஞ் செய்து களித்திருக்கையில்- உலகளந்த மூர்த்தி அவர்கள் திறத்திலே திருவருள் செய்யும் பொருட்டுப் பெருத்த இருளையும் கனத்தமழையையு முண்டாக்கி, பெரிய வடிவத்தோடு அவர்களிடையே சென்றுநின்று பொறுக்க முடியாத மிக்க நெருக்கத்தைச் செய்தருள, அதன்மேல் இவர்கள் ‘இதுவரையிலும் இல்லாத நெருக்கம் இப்போது உண்டானதற்குக் காரணமென்கொல்? பிறரெவரேனும் இங்கு வந்து புகுந்தவருண்டோ?‘ என்று சங்கிக்கையில் –பொய்கையாழ்வார் பூமியாகியதகழியில் கடல்நீரையே நெய்யாகக்கொண்ட ஸூரியனை விளக்காக ஏற்ற, பூதத்தாழ்வார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தையைத் திரியாகவுங்கொண்டு ஞான தீபத்தை ஏற்ற, இவ்விரண்டி னொளியாலும் இருளற்றதனால் இப்பேய்யாழ்வார் எம்பெருமானைத் தாம் ஸேவிக்கப் பெற்றமைக்கு இப்பாசுரத்தாலே வெளியிடுகிறார்.
‘எம்பெருமானைக் கண்டேன்‘ என்று சொல்லிவிட்டால் அவனிடத்திலுள்ளவையெல்லாம் கண்டமை சொல்லப்பட்டதாக ஆகுமாயிலும், தம்முடைய மகிழ்ச்சியின் மிகுதியினால் ‘அதுகண்டேன் இதுகண்டேன்‘ என்று சிலவற்றைப் பிரித்துப் பேசுகின்றார்.
புருஷகாரபூதையான பிராட்டியைக் கண்டேன், அவளுடைய சேர்க்கையினாலே நிறம்பெற்ற திருமேனியைக் கண்டேன், மரதக கிரியிலே உதித்து ஒளிவிட்டுக்கிளருகிற பாலஸூர்யனைப்போலே விளங்காநிற்பதாய் இருவருடைய ஒளியும் தன்னிலே கலசி விளங்காநின்றுள்ளதான அழகியநிறத்தையும் கண்டேன், இந்தச் சேர்த்திக்கு என்னதீங்கு வருகிறதோ வென்று அஸ்தாநே பயசங்கைப்பண்ணி யுத்தஸந்நத்தனாய் கண்டார்மேலே சீறிவிழாநின்றவனாய், ச்யாமளமான அவன்வடிவுக்குப் பரபாகமாம்படி பொற்கென்ற நிறத்தையுடையனான திருவாழியாழ்வாணையுங் கண்டேன் கைத்தலத்திலிருந்துகொண்டே பெருமுழக்கத்தாலே சத்துருக்களை உயிர்மாளப்பண்ணும் ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானையும் கண்டேன் என்றாராயிற்று.
நூல் இயற்றுவார் மங்கல மொழி முதலிலே வகுத்துக் கூறுவராதலால் ‘திரு‘ என்று தொடங்கினர். பொன்மேனிகண்டேன் –“ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்“ என்கிற சுருதியின்படி பொன்னின் நிறம் போன்ற நிறமுடையளான பிராட்டியின் நித்யஸம் ச்லேஷத்தாலே அப்படியே பொன்னிறமாகப் பெற்றதாம் எம்பெருமானுடைய கரிய திருமேனியும். அன்றியே, பொன்போல் விரும்பத்தக்க மேனி என்றுமாம். “உருவுகரிதாய் முகம் செய்தாய் உதய பருப்பதத்தின் மேல், விரயுங்கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே“ என்ற நாச்சியார் திருமொழிப்பாசுரம் இங்கு நினைக்கத்தகும்.
“புரிசங்கம் கை கண்டேன்“ என்றும் “புரிசங்கு அம் கை கண்டேன்“ என்றும் பிரிக்கலாம். புரி என்றது வலம்புரி என்றபடி. அன்றியே ஸ்புரிக்கின்ற – விளங்குகின்ற சங்கமென்றுமாம். புரி புரிந்துபார்க்கிற (எங்கே யெங்கேயென்று சுற்றுமுற்றும் சீறிப்பார்க்கிற) சங்கு என்றுமாம். சேஷத்வத்தாலே எப்போதும் வணக்கத்தையுடைய சங்கு என்றுமாம்.
ஈற்றடியில் எம்பெருமானை ஆழிவண்ணன் என்றது மிகப்பொருந்தும், பிராட்டி, சங்கு, கௌஸ்துபமணி முதலியவை கடலில் தோன்றினவாதலால், அப்படிப்பட்ட வஸ்துக்களை இன்று இக்கடலில் காணப்பெற்றே னென்கிறார் போலும்.
English Translation
Today I have seen the lotus-dame on the frame of my ocean-hued Lord. He wields a fiery discus and a dextral conch in his hands. He has the radiance of the golden sun.