(2272)

(2272)

பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,

முன்னால் வணங்க முயல்மினோ, – பன்னூல்

அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம்

அளந்தா னவஞ்சே வடி.

 

பதவுரை

பின்னால்

சரீரம் விழுந்தபின்பு

அரு நகரம்

கடினமான நரகத்தை

சேராமல்

அடையாமலிருக்கும் படிக்கு

பேதுறுவீர்

மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!

பல் நூல்

பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்

அளந்தானை

நிச்சயிக்கப்படுபவனும்

கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்

கரிய கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம் அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய

சே அடி

செவ்விய திருவடிகளை

முன்னால்

இப்போதே

வணங்க

வணங்குமாறு

முயல்மின்

முயற்சிசெய்யுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டுத்தொடங்கி மேல் நான்கு பாட்டுக்களாலே பரோபதேசம் பண்ணுகிறார். உலகத்தவர்களே! நீங்கள் செய்யும் காரியங்களைப்பார்த்தால் நரகமார்க்கத்திற்கே செல்லப்பார்க்கிறீர்களென்று நினைக்கும்படியா யிராநின்றது. ‘நரகவேதனை நமக்குக் கிடைத்தால் என்செய்வோம்‘ என்று கலங்கி நிற்கிறீர்களாகில் அதைத் தப்புவதற்கு இப்போதே உபாயம் சொல்லுகிறேன் கேளுங்கள், உலகளந்த பெருமானுடைய சேவடியை வணங்குதற்கு முயற்சி செய்தீர்களாகில் பின்னால் அருநரகம் சேராமல் பிழைக்கலாம் என்கிறார்.

‘சேவடியை வணய்குமினோ‘ என்னாமல் – ‘வணங்கமுயல்மினோ‘ என்றமையால் – எம்பெருமான் திருவடிகளை வணங்கவேணுமென்னும் முயற்சியுண்டான மாத்திரமே நரகம் தவிரும் என்பது விளங்கும்.

 

English Translation

O, Foolish people lest you attain hell after life, learn to worship His feet while you live.  He measured all the Earth and ocean.  All the texts declare him as the supreme lord!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top