(2255)
யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான், – யானே
இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,
பெருந்தமிழன் நல்லேன் பெரிது.
பதவுரை
|
எம்பெருமான் |
– |
ஸர்வஸவாமிந்! |
|
ஏழ் பிறப்பும் |
– |
எல்லா ஜன்மங்களிலும் |
|
எப்பொழுதும் |
– |
எல்லா அவஸ்தைகளிலும் |
|
தவம் செய்தேன் |
– |
தவம் புரிந்தவன் |
|
யானே |
– |
நானே |
|
தவம் உடையேன்யானே |
– |
அந்தத் தபஸ்ஸின் பலனைப்பெற்றவனும் யானே |
|
இரு தமிழ் நல்மாலை |
– |
சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல்மாலைகளை |
|
இணை அடிக்கே |
– |
(உனது) உபயபாதங்களிலே |
|
சொன்னேன் |
– |
விஜ்ஞாபித்தவனாய் |
|
பெரு தமிழன் |
– |
பெரிய தமிழ்க்கலையில் வல்லவனாய் |
|
பெரிது |
– |
மிகவும் |
|
நல்லேன் |
– |
உனக்கு நல்லவனாயிருப்பவன் |
|
யானே |
– |
அடியேனே |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- விஷயாந்தரங்களிலே மண்டி உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்தார் நடுவே தாம் அப்படியிராமல் எம்பெருமானுக்கே தொண்டுசெய்து திரியும்படியான பாக்கியம் பெற்றமை நினைக்குங்கால், இவ்விருள்தருமா ஞாலத்திலும் நமக்கு இப்படிப்பட்ட நற்காலக்ஷேபம் வாய்த்ததே! என்கிற ஸந்தோஷமிகுதியினால் ‘இல்லையெனக்கெதி ரில்லையெனக்கெதி ரில்லையெனக்கெதிரே‘ என்றாற்போன்ற வாசகங்கள் பரவசமாகவே வெளிவருவதுண்டு, இவ்வநுஸந்தாநம் ஹேயமான அஹங்காரத்தின் பாற்படாது, உத்தேச்யமான அஹங்காரமேயாம். அஃது இப்பாட்டில் விளங்காநிற்கும்.
காயிலே தின்றும் கானிலுறைந்தும் தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிகின்றசிலர், தங்களையே மஹாதபஸ்விகளாக நினைத்துக் கொள்ளுகின்றனர். உண்மையில், எம்பெருமானை இடைவிடாது சிந்தித்தும் இப்படிப்பட்ட இனிய தமிழ்ப்பாசுரங்களைப் பாடியும் அநுபவிக்கின்ற தானே தவஞ்செய்தவனாவேன், தவத்தின் பலனைப் பெற்றவனும் நானேயாவேன் – என்கிறார்.
முதலடியில் “யானை தவஞ்செய்தேன்“ என்றார்! தாம் முயற்சிகொண்டு ஒரு தபஸ்ஸு பண்ணினதாகத் தமக்குத் தெரியாமையாலும் தபஸ்ஸின் பலன்மாத்திரம் தம்மிடத்திலுண்டாயிருக்கக் காண்கையாலும் ‘யானே தவமுடையேன்‘ என்றார். இங்ஙனே தாம் சொல்லிக்கொள்வதற்குக் காரணம் இன்னதென்பதை விளக்குவன பின்னடிகள். என்னுடைய வாக்கு பகவத்விஷயத்தில் உபயோகப்படப் பெற்றதனால் நானே தவஞ்செய்தேன், நானே தவமுடையென் என்கை. மற்றுள்ள ஆழ்வார்களும் இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்ன பெருந்தமிழர்களாயிருந்தாலும் தம்முடைய அடங்காப் பெருமகிழ்ச்சியினால் “யானே இருந்தமிழ்நனமாலை யிணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது“ என்று சொல்லிக்கொள்ளக் குறையில்லையென்க.
English Translation
O Lord! Through seven lives and forever. I alone have done penance, I alone have received the fruits of penance. On your perfectly matching feet, I have sung this garland of sweet Tamil Songs, I am indeed the Greatest Tamil poet.
