(2208)

(2208)

பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,

மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி – கதிமிகுத்தங்

கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,

மால்தேடி யோடும் மனம்.

 

பதவுரை

பதி

–

திருமலைத் திருப்பதியிலே

அமைந்து

–

வேரூன்றி நின்று

நாடி

–

எங்கேயென்று தேடிக்கொண்டு

பருத்து எழுந்த சிந்தை

–

மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரதத்தையுடையதாய்

மதி உரிஞ்சி

–

சந்திரபதத்தையும் உராய்ந்து கொண்டு

வான்முகடு நோக்கி

–

(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்துவிட்டு

(அங்கும் நில்லாமல்)

மால்தேடி

–

பரமபதநாதனைத் தேடிக்கொண்டு

கதிமிகுத்து ஓடும்

–

விரைவுமிகுந்து செல்லுகின்ற

மனம்

–

என்னெஞ்சமானது

அம்கோல் தேடி ஓடும்

–

அழகிய கொள் கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்லுகின்ற

கொழுந்து அது போன்றது

–

கொடியை ஒத்திரா நின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய திருமலையிலிருப்பை அநுஸந்தித்த ஆழ்வார் இவ்விடத்தில் தாம் தம்முடைய ஆசைதீர அப்பெருமானோடு பரிமாற வேணுமென்று பாரித்தார்; அர்ச்சாவதாரமாகையாலே அப்படிப்பட்ட பரிமாற்றம் ஒன்றும் பெற்றிலர்; விபவாவதாரங்கள் காலாதீதமாய்ப் போகையாலே இனி பரமபதநாதனோயேயாகிலும் கலந்து பரிமாறப் பெறலாமோ என்று பார்த்துத் தம் திருவுள்ளம் பரமபதத்தளவும் பதறிச் செல்லும்படியைப் பேசுகிறாரிப் பாசுரத்தில்.

முதலடியில் முடிவிலுள்ள ‘சிந்தை’ என்னுஞ்சொல் எழுவாய் போலத் தோற்றுமாயினும் அஃது எழுவாய்  அன்று; பாட்டின் முடிவிலுள்ள மனமே எழுவாய்; சிந்தை அதற்கு விசேஷணமாய் அந்வயிக்கும் எனது மனமானது திருவேங்கட மலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி எங்கேயெங்கேயென்று திருமாலைத் தேடி அங்குத் தன் நினைவு தலைக்கட்டப்பெறாமையாலே மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரகத்தையுடையதாகி மேலேமேலே சென்று திருநாட்டுத் தலைவனைத் தேடியோடா நின்றது; இஃது, அழகிய கொள்கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்கின்ற கொடியைப் போன்றுள்ளது – என்றாராயிற்று.

 

English Translation

The heart that longs for the Lord and dwells on his form in vekatam grows like a creeper that seeeks the support of well grown trees, and quickly climbs to touch the moon in the sky.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top