(2186)
அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய், – படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அறிந்து.
பதவுரை
|
படிநின்ற |
– |
பூமியிலே அவதரித்து நின்ற |
|
நீர் ஓதம் மேனி நெடுமாலே |
– |
கடல்வண்ணனான ஸர்வேச்வரனே!, |
|
அன்று இ உலகம் |
– |
முன்பொரு காலத்தில் இவ்வுலகத்தை |
|
அடிமூன்றில் அளந்தாய் போலும் |
– |
மூவடியாலே அளந்து கொள்பவன் போல |
|
அடிமூன்று அவனி |
– |
மூவடி நிலத்தை |
|
இரந்து கொண்டாய் |
– |
(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்றாய்; |
|
நின் அடியை |
– |
இப்படிப்பட்ட உனது திருவடிகளை |
|
அறிந்து |
– |
நன்றாகத் தெரிந்து கொண்டு |
|
ஓதவல்லார் ஆர் |
– |
பேசவல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் மாணுருவாய்ச்சென்று மாவலியிடத்தில் மூவடி நிலம் வேண்டினதன் கருத்து எதுவாயிருந்ததென்னில், மூன்று அடிகளாலே மூன்று லோகங்களையும் அளந்து ஆக்ரமித்துக் கொள்ள வேணுமென்பதே முதலில் அபிப்பிராயமாக இருதது; பிறகு அளக்கிற ஸமயத்தில் கீழுலகங்களை ஓரடியாலும், மேலுலகங்களை மற்றோரடியாலும் அளந்துகொள்ளுகையாலே மூன்றாவது அடி இரந்து பெற்றது வீணாய்விடும்போலிருந்தது; அது வீணாகாமைக்காக மாவலியைக் கேட்க, அவனும் தனது தலையையே அதற்கு இடமாகக் காட்ட அதன்மேல் மூன்றாமடியை வைத்து அவனைப் பாதாளத்திலே கொண்டு தள்ளினனாக இவ்வாழ்வாருடைய அநுஸந்தான முள்ளதாகக் கொள்க.
இந்தலோகம் அந்தரிக்ஷலோகம் ஸ்வர்க்கலோகம் என்னும் மூவுலகங்களையும் மூன்றடிகளாலே நீ அளப்பதாயிருந்தால் மூவடி நிலம் நீ யாசித்துப் பெறலாம். காரியத்தில் அப்படி இல்லையே. மூவடி நிலம் யாசித்துப்பெற்று அந்த மூவடிகளாலே மூவுலகங்களை நீ அளந்தாயோ? அஃது இல்லையே! யாசிக்கிறபோது இருந்த எண்ணம் வேறாகவும் அளக்கிறபோது உண்டான எண்ணம் வேறாகவும் ஆயிற்றே! இது என்ன? என்றபடி.
உண்மையில், மூன்றடி யாசிக்கிறபோதே ‘இரண்டடிகளாலே கீழ்மேலுலகங்களை யளந்துகொண்டு மூன்றாமடிக்காக மாவலியைச் சிறையில் வைக்கவேணும்’ என்னும் அபிப்பிராயம் எம்பெருமானுக்கு இருந்திருக்கச் செய்தேயும் இவ்வாழ்வார் அபிப்ராயபேதம் தோற்ற அருளிச்செய்தது ஒரு சமத்காரமுமாகும்.
அவநி – வடசொல்; பூமி. படிநின்ற – ‘படி’ என்று உபமானத்துக்கும் வாசகமுண்டு; ஒப்பாகநின்ற கடல் என்னலாம்.
மூன்றாமடியில் “நின்படியை” என்ற பாடமும் பொருந்தும்.
English Translation
“Three feet of land”, you said, and took the Earth! But why ask for three, when two would have sufficed? O Lord of ocean-deep hue! Who can understand this?
