(2110)
இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,
அறைபுனலும் செந்தீயு மாவான், – பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,
செங்கண்மால் கண்டாய் தெளி.
பதவுரை
|
இறையும் |
– |
ஸ்ரீவைகுண்ட நாதனாயும் |
|
நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான் |
– |
பூமியென்ன பரவிய ஆகாச மென்ன வாயுவென்ன அலை யெறிகிற ஜலமென்ன சிவந்த நிறமுள்ள அக்நியென்ன ஆகிய பஞ்ச பூதங்களினாலாகிய லீலா விபூதியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான், |
|
பிறை மருப்பின் |
– |
பிறைபோன்ற தந்தத்தையுடையதும் |
|
பைங்கண் |
– |
பசுமைதங்கிய கண்களையுடையதுமான |
|
மால் யானை |
– |
பெரியகஜேந்திரனை |
|
படு துயரம் |
– |
(முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும் |
|
காத்து அளித்த |
– |
ரக்ஷித்தருளின |
|
செம் கண் மால் கண்டாய் |
– |
புண்டரீகாக்ஷனான பெருமான்காண்; |
|
தெளி |
– |
[நெஞ்சே!] நீ இதனைத் தெரிந்துகொள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நித்யவிபூதி யென்னப்படுகிற பரமபதத்திற்கும் லீலாவிபூதியென்னப்படுகிற ஸம்ஸாரமண்டலத்திற்கும் நாதனாய்க்கொண்டு உபயவிபூதி நாதனென்று பேர் பெற்றிருக்குமெம்பெருமான் தன்பெருமையை நினைத்து மேனாணித்திருப்பவனல்லன்; அடியவர்கள் துன்புறுங்காலத்து நேரில் ஓடிவந்து காத்தருளும்படியான வாத்ஸல்யகுண முடையவன்காண் என்று தம் திருவுள்ளத்துக்கு உபதேசிக்கிற முகத்தால் எம்பெருமானது மேன்மையையும் வெளியிடுகிறார்.
இறை என்று ஸ்வாமிக்குப் பெயர்; 1. “ வீற்றிருந்தேழுலகும் தனிகோல் செல்ல வீ வில்சீர், ஆற்றல் மிக்காளுமம்மான்” என்றபடி: பரமபதத்தில் ஸர்வஸ்வாமித்வம் தோன்றுமாறு எழுந்தருளியிருக்கிற ஸ்ரீவைகுண்ட நாதத்வம் இங்கே விவக்ஷிதம். ஆகவே, இறை யென்றது இங்கே நித்யவிபூதிநாதனைச் சொன்னபடி. நிலனும் என்று தொடங்கிச் செந்தீயுமாவான் என்ற வளவால் லீலாவிபூதி நாயகத்வம் சொல்லப்படுகிறது; பஞ்சபூதங்களினாலாகிய பதார்த்தங்கள் நிறைந்தவிடமே லீலாவிபூதியாதலால் பஞ்ச பூதங்களையிட்டு அருளிச்செய்தாரென்க.
“இறையும்“ என்ற உம்மைக்குச் சேர (இரண்டாமடியில்) “ஆவான்” என்ற விடத்திலும் உம்மை கூட்டிக்கொள்ளவேணும்; ஆவானும் என்க. ஆக இவ்வளவால் – உபய விபூதி நாதனாயிருக்கும் பெருமையையுடையவனா யிருந்தாலும் என்றதாயிற்று . இதற்குப் பிரதிகோடியான நீர்மையைப் பின்னடிகளில் அருளிச்செய்கிறார். முதலைவாய்க் கோட்பட்ட கஜேந்திராழ்வான் துயரை அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து காத்தருளினது பிரசித்தம்.
[பிறைமருப்பின் பைங்கண்மால்யானை] யானைக்கு வெளுத்த தந்தமிருப்பதும் பசுமை தங்கிய கண்களிருப்பதும் அதிசயமான விஷயமன்றே; இதைச்சொல்லி வருணிப்பதற்குப் பிரயோஜன மென்னெனில்;- ஒரு குழந்தை கிணற்றில் விழுந்துபோக, அதனையெடுத்துக்கரையிலே போட்டவர்கள் ‘அந்தோ! இதொரு காலழகும் இதொரு கையழகும் இதொரு
முகவழகும் என்ன!’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போவர்களன்றோ; அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும் விடுவித்தபின் அதனுடைய தந்தத்தினழகிலும் கண்ணினழகிலும் ஆழ்ந்து கரைந்தமை தோற்ற அந்த பகவத் ஸமாதியாலே ஆழ்வார் யானையை வருணிக்கின்றாரென்க.
பசுமை + கண், பைங்கண். கண்டாய் – முன்னிலையசைச்சொல். இப்பாட்டில் நெஞ்சமே!’ என்கிற விளி வருவித்துக்கொள்ளவேண்டும்.
English Translation
The Lord who is manifest as the Earth, space, wind, water and fire is the adorable red-eyed senkanmal who gave refuge to the devotee-elephant in distress, Know it clearly.
