(2095)

(2095)

அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி, இவரிவ

ரெம்பெருமா னென்று, – சுவர்மிசைச்

சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த

மூர்த்தி யுருவே முதல்.

 

பதவுரை

அவர் அவர்

ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்

தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி

(தங்களுடைய ரஜஸ்தமோ குணங்களுக்குத்தக்கபடி) தாங்கள் எப்படி அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து

இவர் இவர் எம்பெருமான் என்று

தாங்களறிந்த சில தேவதாந்த

ரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு

சுவர்மிசை சார்த்தியும்

சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்

வைத்தும்

பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்

தொழுவர்

தொழுகின்றார்கள்;

(எவர் என்ன செய்தாலும்)

உலகு அளந்த மூர்த்தி

(எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய

உருவே

திருமேனியொன்றே

முதல்

முக்கியமானது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [அவரவர்தாந்தாம்.] கீழ்ப்பாட்டில் “ஆதியாய் நின்றாரவர் என்றதை விவரித்துப்பேசுகிறது இப்பாட்டு. உலகத்திலுள்ள ஜனங்கள் ஒவ்வொரு தெய்வங்களைப் பரதேவதையாகக்கொண்டு தாம் தாம் கற்ற சொற்களைக்கொண்டு அத்தெய்வங்களைத்துதித்து விக்ரஹாராதநம் விசேஷ மென்றறிந்து சுவர்களிலே சித்திரரூபமாக அத்தெய்வங்களை யெழுதியும் லோஹமய பிம்பங்களாக ஆலயங்களில் பிரதிஷ்டைசெய்தும் தொழா நின்றார்களாகிலும், அம்மன் பிடாரி முதற்கொண்டு சிவன் முடிவாகவுள்ள தெய்வங்களுக்கெல்லாம் ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே பிரதான தேவதையாம் என்றாராயிற்று. கீழ்ப்பட்ட தெய்வங்களுக்கெல்லாம் எம்பெருமானை ஆச்ரயித்தே ஸத்தை பெறவேண்டும்படி அவனே முழுமுதற் கடவுள் என்கை.

அவரவர் என்ற சுட்டு – அவர்களின் குணக்குறைவைக்காட்டும். ஸத்வகுண பூர்த்தியில்லாத ஜனங்களெல்லாம் என்றபடி. தாந்தாமறிந்தவாறாவது- சாஸ்த்ரங்களையும்  சிஷ்டா சாரங்களையுங்கொண்டு அறியகில்லாமல்

தங்களுடைய ராஜஸ தாமஸபுத்திகளுக்கு எட்டியவாறு.

இப்பாட்டில் ஸ்ரீமந் நாராயணனை ‘உலகளந்தமூர்த்தி’ என்ற திருநாமத்தால் குறிப்பிட்டது கருத்தோடு கூடியதாம்; புருஷோத்தமனான எம்பெருமானை விட்டு க்ஷூத்ர தெய்வங்களைப் பணிகின்ற ஸம்ஸாரிகளோடு அத்தெய்வங்களோடு வாசியின்றியே எல்லாரும் தன்னுடைய திருவடியின் கீழே துகையுண்ணுமாறு உலகங்களை வியாபித்தவனென்று சொல்லுமாற்றால் இவனே முழுமுதற் கடவுளென்று மூதலித்தாராய்த்து. மூர்த்தி- ஸ்வாமி.

 

English Translation

According to their nature, and each according to his understanding, they all worship their chosen deity, placed on a pedestal or drawn on the wall, as their god. Yet the lord who measured the Earth is the first-cause lord and foremost of all.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top