(2054)

(2054)

திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,

பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம் பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,

ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்,

கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக் கட்டுரையே யாரொருவ ர் காண்கிற் பாரே?

 

பதவுரை

திரு வடிவில்

விலக்ஷணமான வடிவுகளில்,

கருநெடுமால்

காளமேகச்யாமமான வடிவை

பெரு வடிவின்

பெரிய கூர்மரூபத்தோடே

கடல்

கடலினின்றும்

அமுதம் கொண்ட காலம்

(தேவர்களுக்கு) அமுதமெடுத்துக்கொடுத்த காலமாகிய கிருதயுகத்திலே

வளைஉரு ஆய் திகழ் ந்தான் என்றும்

சங்குபோலே வெளுத்த நிறத்தையுடையவனாக விளங்கினானென்றும்

திரேதைக்கண்

த்ரேதாயுகத்திலே

சேயன் என்றும்

சிவந்த நிறத்தையுடையவனாக விளங்கினானென்றும்

(கலியுகத்தில்)

கரு நீலம் வண்ணன் என்றும்

இயற்கையான) நீலநிறத்தை யுடையவனாய் விளங்குகிறானென்றும்

ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்

எப்போதும் நின்று துதிப்பதல்லாமல்

ஒரு வடிவம் என்று ஓர் உரு என்று உணரல் ஆகா

வடிவும் நிறமும் இன்ன தென்றும் இவ்வள வென்றும் அறியப்போகாமலிருக்கிற

கரு வடிவின் செம்வண்ணம் கண்ணன் தன்னை பெருமானை

கறுத்த திருமேனியையும் செந்நிறமான திருக்கண்களையுமுடையனான எம்பெருமானை

யார் ஒருவர்

ஆரேனுமொருவர்

காண்நிற்பாரே

(ஸ்வப்ரயத்நத்தால்) காணக் கூடியவரோ?

கட்டுரை

 

(நெஞ்சே!) சொல்லு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திரிமூர்த்தி ஸாம்ய ப்ரமத்தை எம்பெருமான் தமக்குப் போக்கித் தந்தருளின படியை அருளிச்செய்தார் கீழ்ப்பாட்டில். எம்பெருமான் தனது நிர்ஹேதுக க்ருபையினால் தமக்குக் காட்டித் தந்தருளின திருமேனியின் வைலக்ஷண்யத்தை அநுபவித்துப் பேசுகிறார் இப்பாட்டில். எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறைத்தைக் கொள்வன்; க்ருதயுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகக் கிருதயுகத்தில் பால்போல் வெளுத்த நிறத்தைக்கொள்வன்; த்ரேதாயுகத்திலே சிவந்த நிறத்தைக்கொள்வன்; த்வாபரயுகத்தில் பசுமைநிறத்தைக் கொள்வன்; கலியுகத்தில் இயற்கையான நீல நிறத்தைக் கொள்வன்-என்பது நூற்கொள்கை. ஸ்ரீபாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்தில் ஐந்தாவது அத்யாயத்தில் இருபதாவது ச்லோகம் முதலாக இவ்விஷயம் விரியக் காணத்தக்கது. இப்பாட்டில் த்வாபரயுகத்திற் கொள்ளும் பசுமை நிறம் சொல்லப்படா தொழியினும் அதுவும் இங்கு அநுஸந்திக்கத்தக்கது. பொருட்சேர்த்திருக்குத்தகுதியாக “பெருவடிவிற் கடலமுதங்கொண்ட காலம் வளையுருவாய்த் திகழ்ந்தான்“ என்பது முந்துற அந்வயித்துக்கொள்ள வுரியது.

“திரேதைக்கண்“ சேயனென்றும் = இவ்வாக்கியம் முன்னேயிருந்தாலும் அர்த்தச் சேர்த்திக்குத் தகுதியாகப் பின்னே அந்வயிக்கவுரியது. க்ருதயுகத்திற்குப் பிறகுதானே திரேதாயுகம். ஆழ்வாரும் யுகக்ரமமாகவே அருளிச்செய்யாலாமே; மாறுபட்ட அருளிச்செய்வானென்? என்னில்; ஸத்வாஜஸ்தமோமயமான ப்ரக்ருதிக்கு நிறங்கள் சொல்லப்புகுந்த வேத வாக்கியத்தில் * அஜாமேகாம் லோஹிதசுக்லக்ருஷ்ணாம் * என்று சிவப்பு வெளுப்பு கறுப்பு என்கிற அடைவிலே ஓதியிருக்கையாலே அந்தச்சாயையாலே அருளிச் செய்கிறபடி எனலாம்.

“கருநீலவண்ணன்“ என்றது கலியுகத்தின் நிறத்தைச் சொன்னபடி. (ஒருவடி வத்தோருருவென்றுணரலாகா) “மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்க் காணோரேனமுமாய்க் கற்கியாம்“ இத்யாதிப்படியே தேவமநுஷ்ய திர்யக்ஸ்தாவரயேநிகளிலே பலவகைப் பட்ட வடிவுகளையும் சிவப்பு வெளுப்பு கறுப்பு என்றாற்போலே வகைப்பட்ட நிறங்களையும் எம்பெருமான் என்றுகொண்டாலும் இவை யெல்லாம் இச்சையினால் பரிக்ரஹிக் கப்பட்டவையத்தனையே யாதலால், அப்படி ஸங்கல்பத்தினாற் கொள்ளும் வடிவுகளும் நிறங்களும் ஒருவராலும் எல்லைகாண வொண்ணாதபடி யிருக்கிறானாயிற்று எம்பெருமான். பல வடிவுகளையும் சில நிறங்களையும் ஒருவாறு அவரவர்கள் பாசுரமிட்டுப் பேசித் துதிக்கலாமத்தனையல்லது உள்ளபடி அறியக்கூடாதவனா எம்பெருமானை யார்தாம் அறிய வல்லார்? – நிர்ஹேதுக பகவத்ப்ரஸாதத்தாலே நான் கண்டு பேசினாப்போலே எவர்தாம் கண்டுபேசவல்லார்? நான் கண்டாப்போலே காணவல்லாருண்டோ? நான் பேசினாப்போலே பேச வல்லாருண்டோ? என்றாராயிற்று.

கட்டுரை – ஏவலொருமை வினைமுற்று; தம்முடைய திருவுள்ளத்தை விளிக்கின்றமை கொள்க. இனி, ‘கட்டுரை‘ என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல் பெயர்ச்சொல்லாகக் கொண்டு உரைப்பினுமாம்; அவரவர்கள் ஏதோபேசுவது வெறுங்கட்டுரையே யன்றி உள்ளபடி கண்டு பேசினதன்று என்க.

 

English Translation

The dark blue-hued Lord is a picture of auspiciousness.  In each age he takes a different form, suited to that age, In the Tretayuga he took the huge form of a tortoise to chum ambrosia from the ocean, other than praising him as the fair Lord of dark hue and lotus eyes, can anyone describe him in totality?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top