(203)

(203)

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே

கரிய குழல்செய்ய வாய்மு கத்துக் காகுத்த நம்பீ வருக இங்கே

அரிய னிவன்எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசல கத்தார்

பரிபவம் பேசத் தரிக்க கில்லேன் பாவியே னுக்குஇங்கே போத ராயே.

பதவுரை

இங்கே

இவ்விடத்திலே
வருக வருக வருக

சடக்கென வருவாயாக;

வாமன நம்பீ! இங்கே வருக-;

கரிய குழல்

கருநிறமான கூந்தலையும்
செய்ய வாய்

செந்நிறமான வாயையும்
முகத்து

(ஒப்பற்ற) முகத்தையுமுடைய
காகுத்த நம்பீ

இராமமூர்த்தி!
இங்கே வருக-;

(என்று கண்ணனையழைத்து, தன் பிள்ளைமேல் குற்றம்சொன்னவளை நோக்கி யசோதை)

நங்காய்

குணபூர்ணையானவளே!
இவன்

இந்தப்பிள்ளை
எனக்கு

எனக்கு
இன்று

இப்போது
அரியன்

அருமையானவனாயிற்றே;

(என்று சொல்லி மீண்டும் கண்ணனை நோக்கி)

அஞ்சனம்

மைபோன்ற
வண்ணா

வடிவுபடைத்தவனே!
அசல் அகத்தார்

அசல் வீட்டுக்காரர்கள்
பரிபவம் பேச

(உன்மேல்) அவமாநகரமான சொற்களைச் சொன்னால்
தரிக்ககில்லேன்

பொறுக்கவல்லேனல்லேன்;
பாவியேனுக்கு

(இப்படி பரிபவங்களைக் கேட்கும்படியான) பாகத்தைப் பண்ணின எனக்கு

(இவ்வருத்தந்தீர)

இங்கே போதராய்

இங்கே வாராய்

(என்று யசோதை கண்ணனையழைக்கிறாள்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் யசோதையிடம் ஒரு இடைச்சி வந்து  ‘உன் பிள்ளையை உன்வசம் அழைத்து வைத்துக்கொள்’ என்று சொல்லவே, யசோதைப்பிராட்டி அவனுடைய நற்குண நற்செய்திகளை யெடுத்துரைத்து ‘இங்கே வா’என்றழைக்க, முறையிட்டுக் கொள்ளவந்து அருகே நிற்குமவள் ‘நீ இப்படிப் புகழ்ந்து அழைக்கலாமோ? அச்சமுறுத்தியன்றோ அழைக்க வேண்டும்’ என்று சொல்ல, யசோதை அதற்கு “இவன் எனக்குச் செல்வப்பிள்ளையாயிற்றே” என்று விடைகூறிவிட்டுக் கண்ணனை நோக்கி ‘அஞ்சனவண்ணா! உன்னைப் பிறர் பழித்துச் சொன்னால் என்னால் காதுகொடுத்துக் கேட்டிருக்க முடியாது; ஆகையால் பிறர் ஒன்றுஞ் சொல்ல இடமில்லாதபடி நீ இங்கே வந்து சேரவேணும்’ என்றழைக்கிறாள்.  வருக வருக வருக – விரைவுப்பொருளில் மும்முறை வந்த அடுக்கு.  கரிய குழற் செய்ய வாய் – முரண்தொடை; “சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே.” பாவியேனுக் கென்றது – வெறுப்பினால்.  அரியன் – நியமநத்துக்கு உட்படிந்து நடக்கமாட்டாதவன் என்றவாறு.  பரிபவம் – வடசொல்.

English Translation

“Come here, come here, come here, O Vamana Lord, come here. O Lord Kakuthstha with dark hair and red lips, come here! O Ladies, he is hard to catch for me today! O Dark Lord, I cannot bear to hear the complaints of the neighbours. Come here to this wicked self!”

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top