(2023)

(2023)

சீற்றமுள வாகிலும் செப்புவன், மக்கள்

தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றஞ்சி,

காற்றத் திடைப்பட்ட கலவர் மனம்போல,

ஆற்றத் துளங்கா நிற்பனா ழிவலவா.

 

பதவுரை

ஆழி வலவா

சக்கரப்படையைப் பிரயோகித்தலில் வல்லவனே!

சீற்றம் உள ஆகிலும்

நீ கோபிக்கும்படியான குற்றங்கள் (என்னிடம்) உள்ளனவானாலும்

செப்புவன்

(உன்னையன்றி எனக்கு வேறுகதியில்லை யாகையால் உன்பக்கல் என் குறையைச் சொல்லிக்கொள்வேன்

மக்கள் தோற்றம்குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி

மனிதர்கள் (கர்மாதீனமாகப்) பிறக்கும் பிறவியிலே என்னையும் புகுவிப்பையொ வென்று எண்ணி அச்சமுற்று

காற்றத்து இடைபட்ட கலவர் மனம் போல்

பெருங்காற்றில் அகப்பட்டுக் கொண்ட மரக்கலத்திலே யுள்ளாரது மனம்போல

ஆற்ற

மிகவும்

துளங்கா நிற்பவன்

நடுங்கிநிற்பேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ் ‘மாற்றமுளவாகிலுஞ் சொல்லுவான்’ என்று தொடங்கித் தாம் விண்ணப்பஞ் செய்தபோது ‘ஆழ்வீர்! நீர் பல பிழைகளையுடையரா யிருந்தும் அவற்றையுணராமல் உம்மை நல்லவர்போலக் கொண்டு, கண்ணோட்ட மில்லாதவனைக் கூறுமாறுபோல என்னைத் ‘தோற்றக்குழியின்னந் தோற்றுவிப்பாய்கொல்’ எனக் குறைசொல்லுவதென்? என்று எம்பெருமான் தமது பிழைகளைக் குறித்துச் சீறியதாகக் கொண்ட ஆழ்வார் சீற்றமுளவாகிலுஞ் செய்புவன்; என்கிறார். நீ சீற்றங்கொள்ளும்படியான பிழைகள் என்பக்கல் இல்லாமையாற் சொல்லுகிறேனல்லேன்; உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லாமையாலே உன்னிடமே சரண்புக்குக் கூறுகிறேனென்றபடி. எம்பெருமான் பொறுக்கவொண்ணாது திவுள்ளத்தில் கோபங்கொள்ளும்படி நிலவுலகத்தரிடம் நேர்கின்ற குற்றங்கள்-பகவதபசாரமும் பாகவதாபசாமும் பிறவுமாம். எம்பெருமானுக்கே அடிமைப்பட்டதான ஆத்மஸ்துவை எனது என்று ஸ்வாந்த்ரம் பாராட்டுதலும், அப்பெருமான் துஷ்டநிக்ரஹ சிஷ்டபாரிபாலனஞ்செய்து தருமத்தை நிலைநிறுத்தி உலகத்தைச் சீர்திருத்துதற் பொருட்டுத் தன் ஸங்கல்பத்தினாற் கொள்ளும் பலபல திவவதாரங்களைக்க கருமவசத்தாலாகும் பிறப்போடொப்ப மதித்தலும், அவனது பிரவேசம் பெற்ற அர்ச்சாவிக்ரஹங்களைக் கல்பொன் வெள்ளி செம்பு என்று அவமதித்தலும் முதலானவை பகவதபசாரங்களாகும். அப்பெருமானடியார்க்ளை நன்குமதியாது அவாகள் பக்கல் செய்யும் பொல்லாங்குகள் பாகவதாபசாரங்களாகும். பிறவுயிர்களுக்கு நலிவு செய்தலும், பகவானுடைய ஆஜ்ஞாரூபமான வேதசாஸ்திரவிதிகளின்படி நடவாதிருத்தலும், சப்தாதி விஷயாந்தரங்களிலே ஊன்றி எம்பெருமான் பக்கல் பராமுகஞ் செய்தலும் முதலானவை ‘பிற’ எனப்படுமபசாரங்களாகும். இப்படிப்பட்ட அபசாரங்கள் இவ்விருள்தருமா ஞாலத்திலுள்ள ஆழ்வார் தமக்கும் நேரக் கூடியனவாகக் கொண்டு, இவை நிமித்தமாக அடியேன் மீது சீற்றமுண்டானாலும் வேறு புகலிட மில்லாமையாலே.  குற்றம் பார்க்கில் சுற்றமில்லையாதலால் என் பிழைகளைப் பாராட்டாது பொறுத்தருள வேணுமென்பது பிரார்த்திக்கிறே னென்பதாக முதலடியின் கருத்துக்காண்க.

சீற்றமுளவாகிலுஞ்செப்புவன் என்ற விதற்கு = வசநபூஷண ரீதியிலே யோஜநாபேதமான அர்த்தமுமொன் றுண்டு சீற்றமுளவாகிலும்-(மக்கள் தோற்றக்குழி தோற்றுவிப்பாய் கொல்; என்று யான் உன்மேற் குறைகூறுவதனால் உனக்குக்) கோபமுண்டாகுமானாலும் செப்புவன்-(சீற்றத்தை ஜீவிக்கவொட்டாத உன்னுடைய க்ருபையையும், சீற்றங்கண்டு அஞ்சி வாய்மூடியிருக்க வொண்ணாதபடி கரையழிந்து செல்லுகிற ஸம்ஸார் ஆர்த்தியையும், சீறியெடுத்து எறியிலும் வேறுபுகலில்லாமையாகிற அநந்ய கதித்வத்தையுங்கொண்டு) விண்ணப்பஞ் செய்கிறேன் என்பதாம். ‘கீழ்ப்பண்ணின அபசாரங்களாலே சீற்ற மிருந்தாலும்’ என்பது பெரியவாச்சான்பிள்ளை கொண்ட பொருள்; ‘இப்போது அடியேன் சொல்லப்போகிற வார்த்தையினாலே சீற்றமுண்டானாலும்’ என்பது பிள்ளைலோகாசாரியா; கொண்ட பொருள். இவ்வளவே வாசி. (ஸ்ரீ வசந பூஷணம் மூன்றாம்  பிரகரணத்தின் முடிவில்- “சீற்றமுள வென்ற அநந்தரத்திலே இவ்வார்த்தத்தைத் தாமே அருளிச்செய்தரிறே. சீற்ற முண்டென்றறிந்தால் சொல்லும்படி யென்னென்னில்; அருளும் ஆர்த்தியும் அநந்யகதித்வமும் சொல்லப்பண்ணும். சீறினாலும் காலைக்கட்டிக் கொள்ளலாம்படி யிருப்பானொருவனைப் பெறறறால் எலலாம் சொல்லலாமிறே” என்றுள்ள ஸ்ரீஸூக்திகளும் அவற்றின் வியாக்கியானமும் இங்கு அறியத்தக்கன.

“மக்கள் தோற்றக்குழி தோற்றவிப்பாய்கொல்” என்றதன் கருத்தாவது – நீ சீற வேண்டும்படியான கருமங்களை நான்செய்து அவற்றின் பயனாகச் சில பிறப்புக்களிலே நான் செல்லநேர்ந்தால் தடுத்து என்னை மீட்காமல் அநுமதிபண்ணி உதாஸீநர்போலே யிருந்து விடுகிறாயோ? என்பதாம். வுரிலக்காமையே மக்கள் தோற்றக்குழி தோற்றுவிப்பதாகக் கூறப்படுகிறது. பரமாத்மா கைவிடுதலே ரிவாத்மாவின் பிறவித் துயர்க்கு ஹேது. கிணற்றில் விழுங் குழந்தையைத் தாய் எடாதிருந்தால் தாயே தள்ளினாள் என்கைக்குத் தட்டில்லையே.

கீழ்ப்பாட்டில் தம்முடைய அச்சத்திற்கு ஆற்றங்கரை வாழ்மரத்தை த்ருஷ்டாந்தமாக அருளிச்செய்தவர் இப்பாட்டில்  காற்றத்திடைப்பட்ட கலவர் மனத்தை த்ருஷ்டாந்தமாக்க கூறுகின்றார். பெருங்காற்றிலே அகப்பட்ட மரக்கலத்தினுள்ளே கிடப்பபவாக்ளின் நெஞ்சுபோலே என்னெஞ்சும் துளங்குகின்ற தென்கிறார். அவாகட்கு அச்சம் மேலிடுமேயன்றி அச்சத்தின் காரணத்தைத் தவிர்க்கும் சக்தியில்லாமையென்பார் அவாகள் மனத்தைத் தமக்கு உவமைகூறி ‘அஞ்சித் துளங்காநிறபன்’ என்றார். அம்மரக்கலத்திலுள்ளார் பலர்க்கும் உண்டாகிற அச்சத்தினளவு அச்சம் இவரொருவர்க்குமே உண்டாயிற்றென்பது தோன்ற ‘கலவர்’ எனப் பன்மையாற் கூறினார். அவர்களுக்குக் கவலை உடம்பு அழிதலில் மாத்திரம் இவர்க்குக் கவலை-உயிர்பேறுபெறாது அழிதலில், என நுண்ணிய வேறுபாடு தோன்றுமாறு ‘ஆற்றத் துளங்காநிற்பன்’ என்றார். அம்மரக்கலத்தாறு கலக்கத்தினும் தோன்றுமாறு ‘ஆற்றத் துளங்காநிற்பன்’ என்றார். அம்மரக்கலத்தராது கலக்கத்தினும் தமது கலக்கம் மிக்கதென வெளியிட்டவாறு ஆதலால், கலவர்மனம் இவர்க்கு ஒருபுடையுவமையேயன்றி முற்றுவமையன்றென்க. “வந்ததே ஆழ்கலத்தன்னகலும்” “பண்ணார்களிறேபோற் பரயோங்குயர்நாவாய், கண்ணார்கடன்மண்டிக் காற்றி கவிழுங்கால் மண்ணார் மணிப்பூணோய் மக்களுறுந் துன்பம், நண்ணாநரகத்தின் நான்காமடியன்றே” எனப் பிற நூல்களிலும் கலங்கவிழ் மக்கள் படுந்துன்பமே மிகப்பெருந் துன்பத்துக்கு எடுத்துக்காட்டப்படுதல் காண்க.

ஆழிவலவா! = சரணாகதர்களுடைய எவ்வகைக் கலக்கத்தையும் ஒழிப்பதற்கு ஏற்ற கருவியும் ஆற்றலுமுடையாய்! என்றபடி வலவன்-வல்லவன். வலக்கையிலேயுடையவன்  என்றும் பொருள் கூறலாம்.

சீற்றம்-தொழிற்பெயர்; சீறு-பகுதி: இது இங்குக் காரியவாகு பெயராய், கோபகாரணத்தின்மேல் நின்றது: உள என்ற பன்மையால் அக்குற்றமும் பலவென்க. காற்றத்திடை-காற்றிடை; அத்து-சாரியை பெறாது நின்றது சாரியை பெறுமிடத்துக் கலத்தவர் என நிற்கும்.

 

English Translation

O Deft discuss spinner! This may vex you, but say it I must.  Like seafarers caught in a storm, my heart shudders.  I dread the thought that you may cast me into the dungeon of Birth and worldly life again!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top