(2003)
நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்தகாலம்,
மல்லாண்ட தடக்கையால் பகிரண்ட மகப்படுத்த காலத்து,
அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டுமிழ்ந்த எச்சில்தேவர்,
அல்லாதார் தாமுளரே? அவனருளே உலகாவ தறியீர்களே?
பதவுரை
|
நில்லாத |
– |
ஓரிடத்திலும் நிலைநில்லாத |
|
பெரு வெள்ளம் |
– |
மஹாப்ரளய வெள்ளமானது |
|
நெடு விசும்பின் மீது |
– |
நெடுகிய ஆகாசத்தின் மீது |
|
ஓடி |
– |
வழிந்தோடி |
|
நிமிர்ந்தகாலம் |
– |
ப்ரவஹித்தபோது |
|
மல் ஆண்ட தடகையால |
– |
மிடக்கையுடைய பெரிய திருக்கையினாலே |
|
பகிரண்டம் |
– |
பகிரண்டங்களை |
|
அகப்படுத்த காலத்து அன்று |
– |
(பிரளயங்கொள்ளாதபடி) அகப்படுத்திக்கொண்ட அந்த ஸமயத்திலே |
|
தேவர் எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் (என்று) எல்லோரும் அறியாரோ |
– |
தேவதைகளெல்லாம் எம்பெருமானது திருவயிற்றில் புகுந்து புறப்பட்ட எச்சில் என்பதை எல்லாரும் அறியமாட்டார்களே |
|
அல்லாதார் தாம் |
– |
அப்படி எச்சிலாகாத தேவதைகள் |
|
உளரே |
– |
உண்டோ? (இல்லை) |
|
உலகு |
– |
லோகமானது |
|
ஆவது |
– |
ஸத்தை பெற்றிருப்பது |
|
அவன் அருளே |
– |
அப்பெருமானுடைய க்ருபையின் அதீன மென்பதை |
|
அறியீர்களே |
– |
அறிகின்றிலீர்களோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஓரிடத்திலும் நிலைநில்லாதே பேராரவாரத்துடன் பெருகி வருகின்ற மஹாப்ரளயவெள்ளமானது அபாரிச்சிந்நமான ஆகாசத்துக்கு மேலேபோய்ப் பெருகுங்கால் “அண்டரண்டபகிரண்டத் தொருமாநில மெழுமால்வரை முற்றும்” என்கிறபடியே எல்லாப் பொருள்களையும் தனது மல்லாண்ட திண்டோளாலே வாரிப்பிடித்துத் திருவயிற்றிற் புகப்பெய்தருளின காலத்திலே அயனரனிந்திரன் முதலான எல்லாத் தெய்வங்களும் எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் என்பதை அறியாதாருண்டோ? அப்படி எச்சிலாகாதே தப்பிநின்ற தெய்வம் ஒன்றுமில்லை என்பதை இன்று நாமுரைக்கவேணுமோ? உலகத்தினுடைய ஸத்தை அப்பெருமானுடைய அநுக்ரஹரதீனமென்பதை அறியமாட்டீர்களோ? இனியாகிலுமறிந்து தொண்டர்காள்! அண்டனையே ஏத்தீர்களே.
பகிரண்டம் என்ற வடசொல் பரமபதத்துக்குப் புறம்பான மற்ற அண்ட ஸமூகங்களைச் சொல்லவுமாம்; பிரளயவெள்ளத்திற்கு வெளிநிலமான பரமபதத்தைச் சொல்லவுமாம்.-“ஸர்வேச்வரன் பிரளயம் சென்று அடராதபடி தன் திருக்கையாலே பரமபதத்தைத் தன் கைக்கீழ் யிட்டுக் கொண்டு நின்றகாலமென்னவுமாம்” என்ற வியாக்கியான வாக்கியங்காண்க.
ஈற்றடியில் “அவனருளே உலகாள்வது” என்றும் பாடம் வழங்குவதுண்டு; ‘உலகாவது’ என்ற பாடமே ஸம்ப்ரதாயம்.
English Translation
When the restless ocean flood rose to the sky and submerged everything, the Lord with battle-strong arms held the universal space outside its reach. Does no one remember those days? Is there a single god who is not the stuff that the Lord ate and regurgitated? Do they not see that the whole world exists by his grace?
