(1857)
பெற்றம் ஆளியை பேரில் மணாளனை
கற்ற நூல்கலி கன்றி யுரைசெய்த
சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு
அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே.
பதவுரை
|
பெற்றம் ஆளியை |
– |
பசுக்களை ஆளப்பிறந்தவனும் |
|
பேரில் |
– |
திருப்பேர் நகரில் |
|
மணளனை |
– |
மணவாளப்பிள்ளையாக ;ஸேவை ஸாதிப்பவனுமான பெருமான் விஷயமாக, |
|
நூல் கற்ற கலிகன்றி உரைசெய்த |
– |
நூல்களைப் பயின்ற திருமங்கையாழ்வார் அருளிச்செய்த |
|
சொல் திறம் இவை |
– |
இந்த சப்தராசியை |
|
சொல்லிய தொண்டர் கட்கு |
– |
ஓதுகின்ற பாகவதர்களுக்கு |
|
அற்றம் இல்லை |
– |
(கைங்கரியத்திற்கு) இடையூறு (ஒருநாளும்) இல்லையாம். |
|
அவர்க்கு அண்டம் ஆட்சி |
– |
அவர்களுக்குப் பரமபதம் ஆளவுரியதாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வியாக்கியானத்தில், ‘பெற்றமாளிகை’ என்றும் ‘பெற்றமாளியை’ என்றும் பாடபேதங் கொள்ளப்பட்டது. முந்தினபாடத்தில், ‘பெற்றம்’ என்று பெருமையாய், பெருமைபொருந்திய மாளிகையுடைத்தான திருப்பேர்நகரிலுறையு மெம்பெருமானை என்றதாகிறது. பிந்தினபாடத்தில், ‘பெற்றம்’ என்று பசுக்களுக்குப் பெயராய், கோபாலனாகையாலே பசுக்களை ஆள்பவனும் திருப்பேர் நகரிலுள்ளவனுமான பெருமானை என்றதாகிறது.
கற்ற நூல்கலிகன்றி – ஆழ்வார் எம்பெருமானால் மயர்வறமதிநல மருளப்பெற்றவரேயன்றி ஒருவரிடத்திலே சாஸ்த்ராப்யாஸம் செய்தவரல்லரே, அப்படியிருக்க ‘கற்றநூல்கலிகன்றி’ என்றது எங்ஙனே; என்கிற கங்கைக்கு ஸமாதாநமாகப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்வது காண்மின், – “திருமந்த்ரம் கற்றவிடத்தலே கற்குமித்தனையிறே அல்லாதவையும்“ என்று ஸகலசாஸ்த்ரங்களும் திருமந்திரத்தில் அடங்கினவையாதலால் அத்திருமந்திரத்தை எம்பெரமான் பக்கதில் கற்றபோதே ஸகலசாஸ்த்ரங்களும் கற்கப்பட்டனவாதலால் இங்ஙனஞ் சொல்லக்குறையில்லை யென்க.
English Translation
This is a garland of songs in praise for the bridegroom of Tirupper, the Lord who grazed cows, sung by the well-learned Kalikanri. Those who master it will have no despair, they shall rule the skies as well
