(1678)

(1678)

விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன்,

மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர்,

கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல்,

வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ.

 

பதவுரை

கோல் தும்பி

கொம்புகளில் திரிகின்றவண்டே!

விண்ணவர் தங்கள் பெருமான்

நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்

திரு மார்வன்

பிராட்டியைத் திருமார்பிற் கொண்டவனும்

மண்ணவர் எல்லாம் வணங்கும்

இந்நிலத்திலுள்ளார் எல்லாராலும் வணங்கப் படுபவனும்

மலி புகழ் சேர்

நிறைந்த கீர்த்தியை யுடையவனும்

கண்ணபுரத்து

திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருப்பவனுமான

எம்பெருமான்

ஸ்வாமியினுடைய

கதிர் முடிமேல்

ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள

வண்ணம் நறு துழாய்

அழகியதும் மணத்ததுமான திருத்துழாயைக் கொண்டு

வந்து

இங்கே வந்து

ஊதாய்

நீ ஊது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘தும்பி’ என்பது வண்டுகளில் ஒருவகைச் சாதி; கருவண்டு என்றுங் கூறுவர்.  மரக்கொம்புளிலே மதுவுக்காகத் திரியுமியல்வுடைமைபற்றக் ‘கோல்தும்பீ!’ என விளக்கப்பட்டது.  ஸத்தையற்றுக் கிடக்கின்ற என்னிடத்திலே இப்போது நீ வந்து சுழலமிடுவதால் என்ன பயனுண்டு? முன்போல் நான் ||தளிரும் முறியுமாய்க் கிடக்கிறேனென்றிருக்கிறாயோ? பாராய் நான் வாடி வதங்கிக்கிடக்கும்படியை; என் தலையிலே பூத்தங்கினாலன்றோ மது இருக்கும்; மது இருந்தாலன்றோ நீ இங்கே வந்த சுழலமிடுவதற்கு ஒரு பயனுண்டாகும்; உனக்கு இங்கே மதுவுண்ண விருப்பமுண்டாகில் எனக்கு ஸத்தையை யுண்டாக்கப்பார்; என்ன செய்தால் ஸத்தையுண்டாகு மென்று கேட்கிறாயோ? கேளாய் கோல் தும்பீ! ; – நித்ய ஸூரிகளுக்கெல்லாம் நிர்வாஹகனாயிருக்கிற பெருமான் உனக்குத் தெரியுமே; அவனிடத்தில் நாம் அணுக முடியுமோ வென்று நினையாதே; அவன் திருமார்வன்; புருஷகார பூதையாய் காருண்ய ரூபையான பிராட்டியைத் திருமார்பிலே கொண்டவனாதலால் கூசாதே சென்று புகலாம்; விண்ணவர் தங்கள் பெருமானித்தே நான் சென்றால் மீண்டுவர முடியாதே யென்கிறாயோ? அங்குச் செல்லவேண்டா; லீலாவிபூதியிலுள்ளா ரெல்லாரும் எளிதாக வணங்கும்படி நிற்பவன்; ‘பரத்வ நிலைமையை விட்டு இப்படி ஸுலபனாவதே!’ என்ற அனைவராலும் கொண்டாடப்பட்டு நிரம்பிய புகழ்பெற்றிருப்பவன்; திருக்கண்ணபுரத்திலே நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிறான்; அன்னவனுடைய திருவபிஷேகத்திற் சாத்தியுள்ள திருத்துழாயின் பரிமளத்தை முகந்துகொண்டு இங்கே வந்து ஊது; இது செய்வையாகில் ஸத்தை பெறுவேன்; உனக்கு ஏராளமாக மதுவுண்ணக் கிடைக்கும் என்கிறாள் பரகாலநாயகி.

1. “தெய்வத்தண்ணந் துழாய்த் தாராயினுந் தழையாயினுந் தண் கொம்பதாயினுங் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினுங் கொண்டு வீசுமினே” என்கிறபடியே எம்பெருமானணியுந்திருத்துழாயின் ஸம்பந்தம் எவ்வகையினாற் பெற்றாலும் தரிப்பும்உவப்பு முண்டாகுமாதலால் அதற்காக இங்ஙனே சொல்லுகிறாளென்க.

வண்ணநறுந்துழாய் வந்தூதாய் இங்குத், துழாய் – திருத்துழாயின் பரிமளத்தில் நோக்காக.  “செவ்விமாறாத பரிமளத்தையுடைத்தாயிருக்கிற திருத்துழாயிலே படிந்து அங்குத்தைப் பரிமளத்தைக் கொடு வந்து இங்கே ஊது” என்பது வியாக்கியான ஸூக்தி.

 

English Translation

O Dragon-fly! Go now to my Lord of Tirkkannapuram. –he is the Lord of the celestials, he bears Sri on his chest, He is worshipped by the whole world, -come back and blow over me the fragrance of his Tulasi wreath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top