(1085)

(1085)

பிச்சச்சிறு பீலிபி டித்துலகில் பிணந்தின்மடவாரவர் போல்,அங்ஙனே

அச்சமிலர் நாணில ராதன்மையால் அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய்,

நச்சிநம னாரடை யாமைநமக் கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு,

நிச்சம்நினை வார்க்கருள் செய்யுமவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

 

பதவுரை

உலகில்

இவ்வுலகத்திலே

பிச்சம் இது பீலி பிடித்து

பிச்சங்களையுடையதாய்ச் சிறிதான மயிலிறகைக் கையிலே வைத்துக் கொண்டு (இருப்பவர்களான ஜைநர்கள்)

பிணம் தின்மடவார் அவர்போல் அங்ஙனே

பிணங்களைப் பிடுங்கித் தின்கிற பிசாச ஸ்த்ரீகளைப்போலே (திகம்பரர்களாய்த் திரிகையாலே)

அச்சம் இலர்

பயமில்லாதவர்களாயும்

நாண் இலர் ஆதன்மையால்

வெட்கமில்லாதவர்களாயு மிருக்கையாலே

அவர்

அப்படிப்பட்ட ஜைநர்களினுடைய

செய்கை

நடத்தைகளை

வெறுத்து

வெறுத்துத் தள்ளிவிட்டு

அணி மா மலர்தூய்

அழகிய சிறந்த புஷ்பங்களைக்கொணர்ந்து ஸமர்ப்பித்து

நச்சி

பக்திபண்ணி

நமனார் அடையாமை நமக்கு அருசெய் என

யமன் (எங்களைக்) கிட்டாதபடி (எமக்கு) அருள்புரியவேணும் என்று

உள் குழைந்து

மனங்குழைந்து

ஆர்வமொடு

அன்புடனே

நிச்சம்

நித்யமாக

நினைவார்க்கு

அநுஸந்திக்கு மடியவர்களுக்கு

அருள் செய்யுமவற்கு

கிருபைபண்ணுகிற எம்பெருமானுக்கு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பிச்சச்சிறுட்லி) முன் ஒன்றரையடியால் ஜைநர்களின் நடவடிக்கையைப் பழித்துக் கூறுகின்றார். ஜீவஹிம்ஸை செய்யக் கூடாதென்கிற நூற்கொள்கையிலே ஜைநர்கள் மிகவும் ஊற்றமுடையராயிருப்பர், தரையில் நடக்கும்போது பூச்சிகளும் புழுக்களும் காலில்மதிபட்டு முடிந்து போகுமென்று ஜீவ ஹிம்ஸைக்கு வெருவி மயிலிறகுகளை விளக்குமாறாகக்கட்டிக் கையிலேகொண்டு தரையை விளக்கிக்கொண்டே நடந்து செல்லுவார்கள், இதனைச் சொல்லுகிறது “பிச்சச்சிறுபீலி பிடித்து“ என்று. திகம்பரச்சாமிகளாய்த் திரிவது முண்டாகையால் அதனைச் சொல்லுகிறது “பிணந்தின் மடவாரவர்போல் அச்சமிலர் நாணிலர்“ என்று. பிணங்களைப் பிடுங்கித் தின்கிற பிசாசுகள் வெட்கமும் அச்சமுமின்றியே துணியில்லாமல் திரிவதுபோலத் திரிகின்றனராம் ஜைநர்கள். இதுபற்றியே ‘ஜைநப்பிசாசுகள்‘ என்ற வ்யவஹாரம் உலகிற் பெரும்பாலும் வழங்குகின்றதென்பர். இப்படி அநாவச்யகமாயும் அநுசிதமாயுமுள்ள நடத்தைகளையுடைய ஜைநர்களின் செய்கையிலே ஜுகுப்ஸைகொண்டு அந்தரங்க பக்தியுடனே தன்னை வந்து பணிகின்ற பக்தர்கட்கு அருள்செய்யும் பெருமானுறையுமிடம் திருநீர் மலை – என்றதாயிற்று.

நித்யம் என்ற வடசொல் நீச்சயமெனத்திரிந்தது. “நமக்கு நிச்சம் அருள் செய்“ என்றும், “நிச்சம் உள்குழைந்து நினார்க்கு“ என்றும், “நிச்சம் அருள் செய்யுமவற்கு“ என்றும் மூன்றுவிதமாக அந்வயிக்கலாம்.

அவைதிகமதங்களில் அபிமானத்தைவிட்டொழித்து வைதிகஸம்ப்ரதாயத்தில் அன்புபூண்டியிருக்கும்மடியவர்கட்குத் திருவருள் செய்பவன் திருமால் என்கிறது இப்பாட்டு.

 

English Translation

There are those roam the Earth without shame for fear, like the peacock-feather-whisking corpse-eating gorgons. Despising their ways those who strew flowers with love, and seek protection from Yama’s agents, with melting heart, find the Lord’s grace in plenty. Tirunirmalai is the Lord’s great hill abode.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top