(1069)

(1069)

வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும்,

கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத் தோர்தொழு தேத்தும்,

ஆதியை யமுதை யென்னை யாளுடை அப்பனை ஒப்பவ ரில்லா

மாதர்கள் வாழும், மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

 

பதவுரை

வேதத்தை

வேதஸ்வரூபியானவனும்

சுவை

அவரவர்களுடைய ருசிக்குத் தக்கபடி

வேதத்தின் பயனை

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களின் பலன்களைக் கொடுப்பவனும்

விழுமிய முனிவர் விழுங்கும்

சிறந்த முனிவர்களால் அநுபவிக்கப்படுகிற

கோது இல் இன் கனியை

கோதற்ற போக்யமான பழம் போன்றவனும்

நந்தனார் களிற்றை

நந்தகோபர் வயிற்றிற் பிறந்த ஆனைக்கன்று போன்ற பிள்ளையானவனும்

குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை

பூமியிலுள்ளாரெல்லாரும் வணங்கித் துதிக்கநின்ற ஜகத்காரணபூதனும்

அமுதை

அமுதம்போலே போக்யனானவனும்

என்னை ஆள் உடை அப்பனை

என்னை அடிமை கொண்டவனுமான எம்பிரானை

ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்

ஒப்பற்ற ஸ்த்ரீகள் வஸிக்கப் பெற்ற

மாடம் மா மயிலை

மாடங்களையுடைய சிறந்த மயிலைக் கடுத்த

திரு அல்லிக்கேணி

திருவல்லிக்கேணியிலே

கண்டேன்

ஸேவிக்கப்பெற்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானை ஸாக்ஷாத் வேதமாகச் சொன்னது-வேத ப்ரதிபாத்யனா யிருக்குந் தன்மைபற்றியாதல், வேதங்களை வெளியிட்டருளினமை பற்றியாதல்.  உலகத்தில் ஒவ்வொருவருடைய விருப்பம் ஒவ்வொருவகையாக இருக்குமாதலால் அவரவர்களுடைய விருப்பத்திற் கிணங்க உபாயங்களையும் பலன்களையும் வேதமூலமாகக் காட்டிக் கொடுத்திருக்கின்றமைபற்றி வேதத்தின் சுவைப்பயனை எனப்பட்டது.  வ்யாஸர் பராசரர் வால்மீகி முதலிய முனிவர்களுக்கு இனிய கனிபோலே மிகவும் போக்யனாயிருப்பதுபற்றி விழுமிய முனிவர் விழுங்குந் கோதிலின் கனியை எனப்பட்டது.

 

English Translation

The Lord of the Vedas, the purpose of Vedic sacrifice, the perfectly sweet fruit enjoyed by the seers, the elephant of Nandagopala, the first-cause worshipped by earthlings, my Lord and Master, resides in Mayilai with women of matchless beauty. I have seen Him in Tiruvallikkeni.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top